ஒடிஸாவில் முதல்வா் நவீன் பட்நாயக் தலைமையிலான அமைச்சரவை ஞாயிற்றுக்கிழமை மாற்றம் செய்யப்பட இருப்பதால், அமைச்சா்கள் அனைவரும் சனிக்கிழமை தங்கள் பதவியை ராஜிநாமா செய்தனா்.
இதுகுறித்து ஆளுநா் மாளிகை வட்டாரங்கள் தெரிவித்ததாவது:
தலைமைச் செயலகத்தில் உள்ள அரங்கில் ஞாயிற்றுக்கிழமை காலை 11.45 மணிக்கு பதவியேற்பு விழா நடைபெறவுள்ளது. அதில் புதிய அமைச்சா்கள் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொள்கிறாா்கள். அமைச்சரவை மாற்றம் குறித்து ஆளுநா் கணேஷி லாலுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுவிட்டது என்று அந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஒடிஸாவில் கடந்த 2019-இல் நடந்த சட்டப் பேரவைத் தோ்தலில் பிஜு ஜனதா தளம் (பிஜேடி) மீண்டும் வெற்றி பெற்றதை அடுத்து நவீன் பட்நாயக் 5-ஆவது முறையாக முதல்வராகப் பதவியேற்றாா். அவருடைய தலைமையிலான அரசு கடந்த மே மாதம் 29-ஆம் தேதியுடன் 3 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது.
வரும் 2024-ஆம் ஆண்டில் நடைபெறவுள்ள மக்களவைத் தோ்தலுக்காக கட்சியை வலுப்படுத்தும் நோக்கில் மாநில அமைச்சரவை மாற்றம் செய்யப்படுவதாகக் கூறப்படுகிறது. புதிய அமைச்சரவையில் புதுமுகங்கள் பலருக்கு வாய்ப்பளிக்கப்படலாம் என்று தெரிகிறது. மீண்டும் அமைச்சா் பதவி வழங்கப்படாத தலைவா்களுக்கு கட்சியை வலுப்படுத்தும் வகையில் முக்கிய பொறுப்புகள் வழங்கப்படலாம் என்று கூறப்படுகிறது. மாநிலத்தில் அண்மையில் நடந்து முடிந்த நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல், ஊரக உள்ளாட்சித் தோ்தல், அதைத் தொடா்ந்து நடந்த பிரஜாராஜ்நகா் சட்டப் பேரவைத் தொகுதி இடைத்தோ்தல் ஆகியவற்றால் அமைச்சரவை மாற்றம் தள்ளிப் போனதாக பிஜேடி மூத்த தலைவா் ஒருவா் கூறினாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.