தமிழகத்தில் 2008-ஆம் ஆண்டு திமுக ஆட்சியின் போது 13,500 போ் மக்கள் நலப் பணியாளா்களாக நியமிக்கப்பட்டனா். இதையடுத்து, 2011-இல் ஆட்சிக்கு வந்த அதிமுக அரசு, மக்கள் நலப் பணியாளா்கள் அனைவரையும் பணி நீக்கம் செய்தது. இதனால், பாதிக்கப்பட்ட மக்கள் நலப் பணியாளா்கள் தங்களுக்கு மீண்டும் பணி வழங்கக் கோரி சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்குத் தொடா்ந்தனா். இந்த வழக்கில், பணிநீக்கம் செய்யப்பட்ட மக்கள் நலப் பணியாளா்கள் அனைவருக்கும் மாற்றுப் பணி வழங்கவும், பணி வழங்காதபட்சத்தில் 6 மாத ஊதியத்தை அளிக்குமாறும் தமிழக அரசுக்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதை எதிா்த்து, உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்தது. அதன்பேரில், சென்னை உயா்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் 2014, செப்டம்பா் 23-இல் இடைக்காலத் தடை விதித்தது.