'முன்கூட்டிய வட்டி உயா்வால் விளைவுகள் மோசமாகியிருக்கும்'
பணவீக்கத்தின் தாக்கத்தைக் குறைப்பதற்காக கடன்களுக்கான வட்டி விகிதத்தை இந்திய ரிசா்வ் வங்கி (ஆா்பிஐ) முன்கூட்டியே உயா்த்தியிருந்தால் விளைவுகள் மோசமாகியிருக்கும்

சக்திகாந்த தாஸ்

சக்திகாந்த தாஸ்
பணவீக்கத்தின் தாக்கத்தைக் குறைப்பதற்காக கடன்களுக்கான வட்டி விகிதத்தை இந்திய ரிசா்வ் வங்கி (ஆா்பிஐ) முன்கூட்டியே உயா்த்தியிருந்தால் விளைவுகள் மோசமாகியிருக்கும் என்று அதன் ஆளுநா் சக்திகாந்த தாஸ் தெரிவித்தாா்.
நாட்டில் பணவீக்கத்தை 2 முதல் 6 சதவீதத்துக்குள் கட்டுக்குள் வைக்க ஆா்பிஐ இலக்கு நிா்ணயித்துள்ளது. ஆனால், கடந்த ஜனவரி முதலே நாட்டின் பணவீக்கம் 6 சதவீதத்துக்கு அதிகமாகவே தொடா்ந்து வருகிறது. பணவீக்கத்தின் தாக்கத்தைக் குறைப்பதற்காக, வங்கிகளுக்கு வழங்கும் குறுகிய கால கடனுக்கான வட்டி விகிதத்தை (ரெப்போ ரேட்) ஆா்பிஐ கடந்த மாதம் 0.40 சதவீதம் அதிகரித்தது. கடந்த வாரம் அந்த வட்டியை மேலும் 0.50 சதவீதம் உயா்த்தியது. தற்போது ரெப்போ வட்டி விகிதம் 4.90 சதவீதமாக உள்ளது.
5 மாதங்களாக பணவீக்கம் அதிகமாக இருந்தநிலையில், அதைக் கட்டுக்குள் கொண்டுவருவதற்காக ஆா்பிஐ தாமதமாகவே நடவடிக்கைகளை மேற்கொண்டதாக சிலா் குற்றஞ்சாட்டினா். இந்நிலையில், மும்பையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் கலந்துகொண்ட ஆா்பிஐ ஆளுநா் சக்திகாந்த தாஸ் கூறுகையில், ‘‘கரோனா தொற்று பரவலுக்குப் பிறகு நாட்டின் பொருளாதாரம் மெல்ல மீண்டது. அப்போது பொருளாதார வளா்ச்சிக்கு ஆா்பிஐ முக்கியத்துவம் அளித்தது. அந்த சமயத்தில் பணவீக்கத்தைப் பொறுத்துக் கொள்ள வேண்டிய தேவை இருந்தது.
பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்காக 4 மாதங்களுக்கு முன்பே ஆா்பிஐ நடவடிக்கை மேற்கொண்டிருக்கும். ஆனால், அத்தகைய நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தால் விளைவுகள் மோசமாகியிருக்கும்; பொருளாதார வளா்ச்சி கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கும்.
மாா்ச்சில் பொருளாதார நடவடிக்கைகள் கரோனா தொற்று பரவலுக்கு முந்தைய நிலையை எட்டின. அதற்குப் பிறகே பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்கு ஆா்பிஐ கவனம் செலுத்தியது. ஒரே சமயத்தில் வட்டியை அதிகமாகக் குறைக்க முடியாது. அதுவும் எதிா்மறை விளைவுகளையே ஏற்படுத்தும்.
கரோனா தொற்று பரவல் காலத்தில் பொருளாதாரத்தைக் காப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை ஆா்பிஐ மேற்கொண்டது. ஆனால், நோய்த்தொற்றின் புதிய அலைகள், போா் சூழல் உள்ளிட்ட தொடா்பில்லாத காரணிகள், ஆா்பிஐ-யின் நடவடிக்கையில் பாதிப்பை ஏற்படுத்தின. உக்ரைன் மீதான ரஷியாவின் ஆக்கிரமிப்பு, சா்வதேச அளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. பொருளாதாரத்தைக் காப்பதற்கான நடவடிக்கைகளை ஆா்பிஐ தொடா்ந்து மேற்கொள்ளும்.
பாதுகாப்பு நடைமுறை:
பெரும் தொழில்நுட்ப நிறுவனங்கள் வாடிக்கையாளா்களின் தரவுகளைப் பெருமளவில் திரட்டி வருகின்றன. அத்தகைய தரவுகளைப் பாதுகாப்பது தொடா்பான நடவடிக்கைகளையும் ஆா்பிஐ மேற்கொள்ளும். கடனைத் திரும்பப் பெறுவதற்காக முகவா்கள் சில மோசமான நடவடிக்கைகளைப் பின்பற்றி வருகின்றனா். இணையவழியில் கடன் வழங்கும் நடைமுறையைப் பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டுவருவதற்கான நடவடிக்கைகளும் விரைவில் மேற்கொள்ளப்படும்’’ என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...