சட்டப்பேரவை கலைப்பா? பாஜக ஆட்சியா? மகாராஷ்டிரத்தில் தொடரும் குழப்பம்

மகாராஷ்டிரத்தில் தொடர்ந்து நீடித்து வரும் அரசியல் குழப்பங்களால் அங்கு 'மகா விகாஸ் அகாடி' கூட்டணி கலைந்துவிடும் சூழ்நிலை உருவாகியுள்ளது. 
சட்டப்பேரவை கலைப்பா? பாஜக ஆட்சியா? மகாராஷ்டிரத்தில் தொடரும் குழப்பம்

மகாராஷ்டிரத்தில் தொடர்ந்து நீடித்துவரும் அரசியல் குழப்பங்களால்  'மகா விகாஸ் அகாடி' கூட்டணி ஆட்சி கவிழும் சூழ்நிலை உருவாகியுள்ளது. இதனிடையே, முதல்வர் உத்தவ் தாக்கரே முன்வந்து ராஜிநாமா செய்துவிடுவார் என்று தகவல்கள் பரவி வருகின்றன.  

சிவசேனை கட்சிக்கு எதிராகத் திரும்பியுள்ள ஏக்நாத் ஷிண்டே மற்றும் எம்எல்ஏக்களால் சிவசேனை கூட்டணியின் பலம் குறைந்துள்ளதால் மகாராஷ்டிரத்தில் தற்போதைய கூட்டணியின் பலம் குறைந்திருக்கிறது.

மகாராஷ்டிரத்தில் சிவசேனை - தேசியவாத காங்கிரஸ் - காங்கிரஸ் இணைந்த 'மகா விகாஸ் அகாடி' கூட்டணி ஆட்சி நடந்துவருகிறது. சட்டப்பேரவையில் மொத்தம் எம்எல்ஏக்களின் எண்ணிக்கை 288 என்ற நிலையில், சிவசேனை -56  தேசியவாத காங்கிரஸ் -53, காங்கிரஸ் -44, பாஜக - 106 எம்எல்ஏக்களைக் கொண்டுள்ளனர். 

'மகா விகாஸ் அகாடி' கூட்டணியில் 169 எம்எல்ஏக்களும் பாஜகவின் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் 113 எம்எல்ஏக்களும் 5 சுயேச்சைகளும் உள்ளனர். 

இந்த நிலையில் கடந்த திங்கள்கிழமை நடைபெற்ற சட்டமேலவைத் தேர்தலில் பிற கட்சிகளைச் சேர்ந்த எம்எல்ஏக்களின் ஆதரவுடன்  எதிர்பார்த்ததைவிட ஓர் இடம் அதிகமாக மொத்தம் 5 இடங்களில் பாஜக வெற்றி பெற்றது அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது. 

சூரத் தனியார் விடுதியில் எம்எல்ஏக்களுடன் ஏக்நாத் ஷிண்டே
சூரத் தனியார் விடுதியில் எம்எல்ஏக்களுடன் ஏக்நாத் ஷிண்டே

தொடர்ந்து அதற்கு மறுநாளே (நேற்று செவ்வாய்க்கிழமை) சிவசேனை கட்சியைச் சேர்ந்த மூத்த அமைச்சர் ஏக்நாத் ஷிண்டே, ஆதரவு எம்எல்ஏக்களுடன் சூரத்தில் உள்ள தனியார் விடுதியில் தங்கியிருந்தார். 

இன்று அசாம் மாநிலம் குவாஹாத்திக்குச் சென்றுள்ள ஏக்நாத் ஷிண்டே, தன்னையும் சேர்ந்து 40 எம்எல்ஏக்கள் தன்னுடன் இருப்பதாகத் தெரிவித்துள்ளார். மேலும், சிவசேனைத் தலைவர் பாளாசாஹேப் தாக்கரேவின் இந்துத்துத்வத்தின்படி தாங்கள் நடப்பதாகவும் சிவசேனையின் கொள்கைகளுக்குத் துரோகம் செய்யமாட்டோம் என்றும் கூறியுள்ளார். 

மகாராஷ்டிரத்தில் மொத்தம் 288 எம்எல்ஏக்கள் என்ற நிலையில், ஆட்சியமைக்க 145 எம்எல்ஏக்கள் தேவை. அந்தவகையில் பாஜக கூட்டணி 113 எம்எல்ஏக்களை ஏற்கெனவே கொண்டுள்ள நிலையில் தற்போது 40 எம்எல்ஏக்கள் அசாமில் முகாமிட்டுள்ளனர். எம்எல்ஏக்கள் இருக்கும் புகைப்படங்களும் விடியோக்களும் வெளியாகியுள்ளதால் இது உறுதியாகியுள்ளது. ஏக்நாத் ஷிண்டே மற்றும் எம்எல்ஏக்கள் அனைவரும் குவாஹாத்தியில் உள்ள தனியார் விடுதியில் தங்கியுள்ளனர். 

அசாம் மாநில பாஜக எம்எல்ஏ சுசாந்த், சிவசேனை எம்எல்ஏக்களை வரவேற்க விமான நிலையம் சென்றுள்ளார். முன்னதாக, நேற்று சூரத் விடுதியில் சிவசேனை எம்எல்ஏக்களை மகாராஷ்டிர பாஜக எம்எல்ஏ சஞ்சய் சந்தித்துப் பேசியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. குஜராத் பாஜக தலைவர் சி.ஆர். பாட்டீலும் நேற்று தன்னுடைய நிகழ்ச்சிகள் அனைத்தையும் ரத்து செய்துவிட்டு அகமதாபாத்தில் இருந்து சூரத் சென்றது குறிப்பிடத்தக்கது. இவற்றின் மூலம் எம்எல்ஏக்களின் இந்தப் பயணத்தின் பின்னணியில் பாஜக இருப்பது அம்பலமாகியுள்ளது. 

ஏக்நாத் ஷிண்டேவுடன் இருக்கும் சிவசேனை எம்எல்ஏ பிரதாப் சர்நாயக், சிவசேனை மீண்டும் பாஜகவுடன் கூட்டணி சேர வேண்டும் என்று கூறியுள்ளார். 

ஏக்நாத் ஷிண்டே
ஏக்நாத் ஷிண்டே

இதனிடையே, இன்று பிற்பகல் ஒரு மணிக்கு அமைச்சரவைக் கூட்டத்தைக் கூட்ட முதல்வர் உத்தவ் தாக்கரே அழைப்பு விடுத்தாளார். தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கட்சிகளும் தனியாகவும் உத்தவ் தாக்கரேவுடனும் ஆலோசனை நடத்திவருகின்றன. 

மகாராஷ்டிரத்தில் கூட்டணி ஆட்சி பெரும்பான்மையை இழந்துள்ளதாகவும் விரைவில் பாஜக ஆட்சி அமையும் என்றும் மாநில பாஜக தலைவர் சந்திரகாந்த் பாட்டீல் கூறியுள்ளார். 

அதுபோல தங்கள் கட்சி பெரும்பான்மையை இழந்துவிட்டதாகவும்  மகாராஷ்டிர சட்டப்பேரவை விரைவில் கலைக்கப்படலாம் என்றும் சிவசேனை எம்.பி. சஞ்சய் ரௌத் கூறியுள்ளதும் இதனை உறுதி செய்வதாகவே உள்ளது. 

ஷிண்டே 40 எம்எல்ஏக்கள் என்று கூறிய நிலையில், மாநில பாஜக தலைவர் சந்திரகாந்த் பாட்டீல்  35 எம்எல்ஏக்கள் என்று கூறியுள்ளார். குறைந்தது 35 எம்எல்ஏக்கள் என்றாலும், ஏற்கெனவே 116 எம்எல்ஏக்கள் பாஜகவிடம் இருப்பதால் ஆட்சி அமைக்கத் தேவையான எம்எல்ஏக்களை பாஜக கைவசப்படுத்தியுள்ளது. இதனால் மகாராஷ்டிரத்தில் விரைவில் பாஜக ஆட்சி அமையும் என்று கூறப்படுகிறது.

ஆக, அதிருப்தி சிவசேனை எம்எல்ஏக்கள் உதவியுடன் பாஜக ஆட்சி அமைக்கப் போகிறதா? அதற்கு வாய்ப்பளிக்காமல் சட்டப்பேரவையைக் கலைக்க முதல்வர் உத்தவ் தாக்கரே பரிந்துரைக்கப் போகிறாரா? முடிவை நோக்கி நகர்ந்துகொண்டிருக்கிறது மகாராஷ்டிர அரசியல் நிலவரம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com