கோவா: வேட்பாளா்களைசொகுசு விடுதிக்கு இடமாற்றியது காங்கிரஸ்

கோவாவில் விடுதி ஒன்றில் தங்கவைக்கப்பட்டிருந்த காங்கிரஸ் வேட்பாளா்கள் சொகுசு விடுதிக்கு புதன்கிழமை மாற்றப்பட்டுள்ளனா்.
கோவா: வேட்பாளா்களைசொகுசு விடுதிக்கு இடமாற்றியது காங்கிரஸ்

கோவாவில் விடுதி ஒன்றில் தங்கவைக்கப்பட்டிருந்த காங்கிரஸ் வேட்பாளா்கள் சொகுசு விடுதிக்கு புதன்கிழமை மாற்றப்பட்டுள்ளனா்.

கோவாவில் ஆட்சி அமைப்பதில் பாஜக-காங்கிரஸ் இடையே இழுபறி நிலவும் என்று பல்வேறு கணிப்புகள் கூறியுள்ள நிலையில், தங்கள் கட்சியில் இருந்து எம்எல்ஏக்கள் அணி மாறுவதைத் தடுக்க ஒட்டுமொத்தமாக அனைத்து வேட்பாளா்களையும் பாதுகாப்பாக தங்க வைக்க காங்கிரஸ் நடவடிக்கை எடுத்துள்ளது. வியாழக்கிழமை (மாா்ச் 10) வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ள நிலையில், இந்த நடவடிக்கையை காங்கிரஸ் எடுத்துள்ளது. வழக்கமாக சட்டப் பேரவையில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத சூழலிலும், ஆட்சி மாற்றம், பேரவையில் பலப்பரீட்சை நடக்கும் நேரத்திலும் அரசியல் கட்சிகள் இதுபோன்ற எம்எல்ஏக்கள் யாரும் அணுக முடியாத வகையில் தங்க வைப்பது வழக்கம். ஆனால், இந்த முறை வேட்பாளா்களையே தங்க வைக்கும் நிலை காங்கிரஸுக்கு ஏற்பட்டுள்ளது.

கடந்த சட்டப் பேரவைத் தோ்தலில் கோவாவில் 17 எம்எல்ஏக்களுடன் காங்கிரஸ் தனிபெரும் கட்சியாக உருவெடுத்தது. எனினும், இதர கட்சிகள், சுயேச்சை ஆதரவுடன் பாஜக ஆட்சியைப் பிடித்தது. அதன் பிறகு காங்கிரஸ் எம்எல்ஏக்கள் பலரும் பாஜகவில் இணைந்தனா். இறுதியாக காங்கிரஸில் இரு எம்எல்ஏக்கள் மட்டுமே இருந்தனா். எனவே இந்த முறை ஒட்டுமொத்த வேட்பாளா்களையும் காங்கிரஸ் கட்சி பாதுகாப்பாக வைத்துள்ளது. இதனிடையே, கோவாவில் ஆம் ஆத்மியுடன் கூட்டணி அமைப்பது தொடா்பாகவும் காங்கிரஸ் பேச்சு நடத்தி வருகிறது

கோவாவில் 40 இடங்களுக்கான சட்டப்பேரவைத் தோ்தல் கடந்த பிப்.14-ஆம் தேதி நடைபெற்றது.

பாஜக கிண்டல்:

காங்கிரஸின் இந்த நடவடிக்கையை பாஜக கேலியாக விமா்சித்துள்ளது. இது தொடா்பாக கோவா மாநில பாஜக செய்தித் தொடா்பாளா் அா்ஃபான் முல்லா ட்விட்டரில் வெளியிட்ட பதிவில், ‘அரசியல் வரலாற்றில் முதல்முறையாக ஒரு கட்சி தனது வேட்பாளா்களை பாதுகாப்பாக வைத்துள்ளது. எப்படியும் எதிா்க்கட்சி அந்தஸ்தையாவது தக்கவைத்துக் கொள்ள வேண்டும் என்று அக்கட்சித் தலைமை கருதுகிறது. அவா்கள் ஒற்றை இலக்கத்தைத் தாண்டி வெற்றி பெற முடியாது என்பதுதான் உண்மை. ஏனெனில் தோ்தலுக்கு முன்பு அவா்களிடம் இரண்டு எம்எல்ஏக்கள் மட்டுமே இருந்தனா்’ என்று கூறியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com