
10 நிமிடங்களில் உணவு விநியோகம் செய்யப்படும் எனும் ஜொமேட்டோ நிறுவனத்தின் அறிவிப்புக்கு பலத்த எதிர்ப்பு எழுந்துள்ளது.
10 நிமிடத்தில் உணவு விநியோகம் செய்யும் வசதியை விரைவில் அறிமுகப்படுத்தவுள்ளதாக ஸோமோட்டோ சமீபத்தில் அறிவித்தது. இதுகுறித்து அந்த நிறுவனத்தின் நிறுவனா் தீபிந்தா் கோயல் தனது சுட்டுரைப் பதிவில் “தங்களது தேவைகள் உடனடியாக நிவா்த்தி செய்யப்பட வேண்டும் என்பதே இன்றைய பெரும்பாலான வாடிக்கையளா்களின் விருப்பமாக உள்ளது. அவா்கள் திட்டமிடவும் தயாரில்லை; காத்திருக்கவும் தயாரில்லை. இந்த உண்மையை உணா்ந்து 10 நிமிடத்தில் உடனடியான உணவு விநியோக சேவை விரைவில் துவக்கப்படவுள்ளது” எனப் பதிவிட்டிருந்தார்.
தீபிந்தரின் இந்த அறிவிப்புக்கு பலரும் தங்களது எதிர்ப்புகளை பதிவு செய்து வருகின்றனர். சென்னை, பெங்களூரு உள்ளிட்ட பல நகரங்களில் உள்ள போக்குவரத்து நெருக்கடிகளுக்கு மத்தியில் ஜொமேட்டோ இத்தகைய அறிவிப்பை வெளியிட்டிருப்பது அதன் ஊழியர்களை பாதிக்கும் என எதிர்ப்புகள் எழுந்து வருகின்றன.
ஏற்கெனவே அந்நிறுவனத்தில் பணியாற்றி வருபவர்கள் நிரந்தரப் பணியாளர்களாக இல்லாத நிலையில் நிறுவனத்தின் லாபத்திற்காக உணவு விநியோகத்தில் ஈடுபட்டு வருபவர்களை நெருக்கடிக்கு உள்ளாக்கும் வகையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. சரியான வேலை நேரம், பாதுகாப்பு, உழைப்புக்கேற்ற கூலி என எதுவும் உறுதிப்படுத்தப்படாத நிலையில் பணியாற்றி வரும் ஊழியர்களுக்கு இந்த அறிவிப்பு எந்த வகையிலும் நன்மை பயக்காது என்கிற விமர்சனங்களும் எழுந்துள்ளன.
இதையும் படிக்க | நடிகர் சங்கத்தின் அறங்காவலர்களாக கமல்ஹாசன் உட்பட 9 பேர் நியமனம்
இதற்கு பதிலளித்துள்ள தீபிந்தர், அனைத்து வகையான உணவுகளுக்கும் இந்த அறிவிப்பு பொருந்தாது எனவும், முக்கிய நகரங்களில் சோதனை முறையில் மட்டுமே இவை நடைமுறைப்படுத்தப்படும் எனவும் தெரிவித்துள்ளார். மேலும் 10 நிமிடத்திற்குள்ளாக உணவை விநியோகிக்காவிட்டால் ஊழியருக்கு அபராதம் எதுவும் விதிக்கமாட்டோம் எனவும் தெரிவித்துள்ளார்.
உரிய வேலை கிடைக்காமல் உணவு விநியோகத்தில் ஈடுபட்டு வரும் பல இளைஞர்களை மேலும் சுரண்டவே இத்தகைய அறிவிப்புகள் வெளியாகிறது என ஜொமேட்டோ நிறுவனத்திற்கு எதிராக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.