மின் நிலையங்களுக்கு ஏப்ரலில் 617 லட்சம் டன் நிலக்கரி வழங்கல்: மத்திய நிலக்கரி துறை அமைச்சகம்
நாட்டின் மொத்த நிலக்கரி உற்பத்தி இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் 661.54 லட்சம் டன்னாக உயர்ந்தது.


நாட்டின் மொத்த நிலக்கரி உற்பத்தி இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் 661.54 லட்சம் டன்னாக உயர்ந்தது. இதில் மின் நிலையங்களுக்கு 617.2 லட்சம் டன் வழங்கப்பட்டுள்ளது. மேலும், கடந்த 2021-22 நிதியாண்டில் கூடுதலாக 610 லட்சம் டன் நிலக்கரி உற்பத்தி செய்யப்பட்டுள்ளது என மத்திய நிலக்கரி துறை அமைச்சகம் செவ்வாய்க்கிழமை தெரிவித்தது.
மொத்த நிலக்கரி உற்பத்தியில் கோல் இந்தியா லிமிடெட் நிறுவனம் மற்றும் அதன் துணை நிறுவனங்களின் நிலக்கரி உற்பத்தி 534.7 லட்சம் டன்னாகும். சிங்கரேனி கலோரிஸ் லிமிடெட் நிறுவன நிலக்கரி உற்பத்தி 53.23 லட்சம் டன்கள். இதர நிலக்கரிச் சுரங்கங்களில் இருந்து 73.61 லட்சம் டன் என இந்த ஆண்டு ஏப்ரலில் மொத்தம் 661.54 லட்சம் டன் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், நிலக்கரி அமைச்சகத்தின் தற்காலிக புள்ளி விவரப்படி, மின் துறை உள்பட பல்வேறு துறைகளுக்கு இந்த மாதத்தில் 708.68 லட்சம் டன் வழங்கப்பட்டுள்ளது. இதில் மின் துறைக்கு மட்டும் 617.2 லட்சம் டன் வழங்கப்பட்டுள்ளதாக மத்திய நிலக்கரித் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதில் கோல் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் இருந்து மட்டும் 497.39 லட்சம் டன் நிலக்கரி மின் நிறுவனங்களுக்கு ஏப்ரல் மாதத்தில் வழங்கப்பட்டுள்ளது. அதேசமயம், கோடை மின் தேவையை கருத்தில் கொண்டு, ஏப்ரல் மாதத்தில் 668.0 லட்சம் டன் நிலக்கரியை மின் நிலையங்களுக்கு வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்ததாக முன்னதாக செய்திகள் வந்தன. அதன்படி 7.6 சதவீதம் நிலக்கரி கடந்த மாதம் குறைந்தது குறித்து கேட்டபோது, நிலக்கரி அமைச்சம் சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.
கோல் இந்தியா நிறுவனம் கடந்த 2019, ஏப்ரலில் 450.29 லட்சம் டன் உற்பத்தி செய்தது. ஆனால், இந்த ஆண்டு (2022) ஏப்ரலில் 534.7 லட்சம் டன் உற்பத்தி செய்து சாதனை படைத்துள்ளது. இந்த நிறுவனம் கடந்த 2021, ஏப்ரலில் 540 லட்சம் டன், இந்த ஆண்டு ஏப்ரலில் 570 லட்சம் டன் நிலக்கரியை வழங்கியுள்ளது. மேலும், கடந்த 2020-21-இல் 7,160 லட்சம் டன்னாக இருந்த மொத்த நிலக்கரி உற்பத்தி, 2021-22-இல் 7, 770.23 லட்சம் டன்னாக உயர்ந்தது. இது 610.23 லட்சம் டன் (8.55 சதவீதம்) கூடுதலாகும். இதேபோல, 2020-21-இல் 5,960.24 லட்சம் டன்னாக இருந்த கோல் இந்தியா நிறுவனத்தின் உற்பத்தி, 2021-22-இல் 6,220.64 லட்சம் டன்னாக உயர்ந்துள்ளது என தெரிவிக்கப்பட்டது.
இதேபோன்று சிங்கரேனி கலோரிஸ் லிமிடெட் உள்ளிட்ட இதர நிலக்கரி உற்பத்தி நிறுவனங்களும், கடந்த ஆண்டுகளை விட உற்பத்தியை அதிகரித்துள்ளது. உற்பத்தி செய்யப்பட்ட நிலக்கரியுடன், இருப்பில் இருந்த நிலக்கரியும் சேர்த்து 2021-22-இல் மொத்தம் 8,180.04 லட்சம் டன் நிலக்கரி வழங்கப்பட்டுள்ளது. இது முந்தைய ஆண்டை (6,900.71 லட்சம் டன்) 18.43 சதவீதம் அதிகமாகும் என்றும் நிலக்கரி அமைச்சகம் தெரிவித்துள்ளது. நிலக்கரி உற்பத்தி குறைந்தது, ரயில்வே ரேக்குகள் பற்றாக்குறை உள்ளிட்டவை நிலைமையை சிக்கலுக்குள்ளாக்கியது என்று கூறப்பட்டது. இருப்பினும், 390 ரயில்களில் நிலக்கரி கொண்டு செல்லப்பட்ட நிலையில், தற்போது 427 ரயில்கள் கூடுதல் ரேக்குகளுடன் செல்கின்றன என்று நிலக்கரித் துறை அமைச்சக வட்டாரங்களில் தெரிவிக்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...