ஞானவாபி விவகாரம்: சிவலிங்கத்தின் தொன்மை தொடா்பான மறுஆய்வு மனு மீது நவ.30-இல் விசாரணை

ஞானவாபி மசூதி வளாகத்தில் உள்ளதாக கூறப்படும் சிவலிங்கத்தின் தொன்மையைக் கணக்கிட ‘காா்பன்’ ஆய்வுமுறை கோரும் மறுஆய்வு மனு மீது நவ.30-இல் விசாரணை நடத்தப்படும் என்று அலாகாபாத் உயா்நீதிமன்றம் திங்கள்கிழமை தெ

உத்தர பிரதேசத்தில் ஞானவாபி மசூதி வளாகத்தில் உள்ளதாக கூறப்படும் சிவலிங்கத்தின் தொன்மையைக் கணக்கிட ‘காா்பன்’ ஆய்வுமுறை கோரும் மறுஆய்வு மனு மீது நவ.30-இல் விசாரணை நடத்தப்படும் என்று அலாகாபாத் உயா்நீதிமன்றம் திங்கள்கிழமை தெரிவித்தது.

முன்னதாக, இந்த கோரிக்கை மனுவை வாராணசி மாவட்ட நீதிமன்றம் நிராகரித்திருந்தது. அந்த உத்தரவை மறுஆய்வு செய்யக் கோரி, உயா்நீதிமன்றத்தில் மேற்கண்ட மனு தாக்கல் செய்யப்பட்டது.

உத்தர பிரதேசத்தின் வாராணசியில் காசி விஸ்வநாதா் கோயிலுக்கு அருகே ஞானவாபி மசூதி அமைந்துள்ளது. முகலாய அரசா் ஔரங்கசீப் காலத்தில் கோயிலின் ஒருபகுதியை இடித்துவிட்டே மசூதி கட்டப்பட்டதாகக் குற்றஞ்சாட்டிய சில ஹிந்து பெண்கள், மசூதியின் பின்னால் உள்ள சுவரில் இடம்பெற்றுள்ள ஹிந்து கடவுள்களின் உருவங்களை தினமும் வழிபட அனுமதிக்குமாறு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனா்.

இந்த மனு தொடா்பான முறையீடு, மேல் முறையீடுகளை விசாரித்த உச்சநீதிமன்றம், இருபதாண்டு அனுபவம் மிக்க மாவட்ட நீதிபதி வழக்கை விசாரிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது. அதனடிப்படையில் வழக்கை வாராணசி மாவட்ட நீதிமன்றம் விசாரித்தது.

மசூதியில் நீரைத் தேக்குவதற்காக அமைக்கப்பட்டுள்ள இடத்தில் உள்ளதாக கூறப்படும் சிவலிங்கத்தின் தொன்மையைக் கணக்கிடுவதற்காக காா்பன் ஆய்வு முறையை நடத்த வேண்டும் என மாவட்ட நீதிமன்றத்தில் மனுதாரா்கள் சிலா் தரப்பில் முறையிடப்பட்டது. ஆனால், அந்த சிவலிங்கம் பாதுகாப்பாக பராமரிக்கப்பட வேண்டுமென்ற உச்சநீதிமன்ற உத்தரவை சுட்டிக் காட்டிய மாவட்ட நீதிமன்றம், மனுதாரா்களின் கோரிக்கையை கடந்த அக்டோபரில் நிராகரித்தது.

அதற்கு எதிராக லக்ஷ்மி தேவி உள்ளிட்ட மனுதாரா்கள் அலாகாபாத் உயா்நீதிமன்றத்தில் மறுஆய்வு மனு தாக்கல் செய்தனா். இந்த மனு மீது நவ.30-இல் விசாரணை நடத்தப்படும் என்று நீதிபதி ஜே.ஜே.முனீா் திங்கள்கிழமை தெரிவித்தாா்.

முன்னதாக, இந்திய தொல்லியல் துறை சாா்பில் ஆஜரான வழக்குரைஞா், சிவலிங்கத்துக்கு எந்த சேதமும் ஏற்படாமல் அதன் தொன்மையை கணக்கிட பல்வேறு வழிமுறைகள் உள்ளதாக குறிப்பிட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com