ஷ்ரத்தா கொலையில் காவல்துறைக்கு சவாலாக மாறியது என்ன? அஃப்தாப் திட்டம் பலித்ததா?

தில்லியில் திருமணம் செய்யாமல் சேர்ந்து வாழ்ந்து வந்த ஷ்ரத்தா வாக்கரைக் கொலை செய்த அஃப்தாப்-க்கு எதிரான ஆதாரங்களைத் திரட்டுவதில் காவல்துறைக்கு பெரும் சவாலாக அமைந்திருப்பது சிசிடிவி காட்சிகள்தான்.
ஷ்ரத்தா கொலையில் காவல்துறைக்கு சவாலாக மாறியது என்ன? அஃப்தாப் திட்டம் பலித்ததா?
ஷ்ரத்தா கொலையில் காவல்துறைக்கு சவாலாக மாறியது என்ன? அஃப்தாப் திட்டம் பலித்ததா?

புது தில்லி: தில்லியில் திருமணம் செய்யாமல் சேர்ந்து வாழ்ந்து வந்த ஷ்ரத்தா வாக்கரைக் கொலை செய்த அஃப்தாப்-க்கு எதிரான ஆதாரங்களைத் திரட்டுவதில் காவல்துறைக்கு பெரும் சவாலாக அமைந்திருப்பது சிசிடிவி காட்சிகள்தான்.

அதாவது, ஷ்ரத்தா வாக்கர் கொலை செய்யப்பட்டது மே மாதம். அவரது உடல்பாகங்களை அஃப்தாப் புது தில்லியின் பல்வேறு பகுதிகளில் வீசியது கடந்த அக்டோபர் மாதத்தில், ஆனால், இந்த கொலைச் சம்பவம் வெளிச்சத்துக்கு வந்து அஃப்தாப் கைது செய்யப்பட்டதோ நவம்பர் மாதம். இதனால், மிகக் குறைந்த காலமே சேமிப்புத் திறன் கொண்ட சிசிடிவி காட்சிப் பதிவுகள் கிடைக்காமல் காவல்துறையினர் கடுமையான சவாலை எதிர்கொண்டுள்ளனர். இதற்கு, மிகத் துல்லியமாக அஃப்தாப் திட்டமிட்டுக் கொலை செய்திருப்பதும், உடல் பாகங்களை அப்புறப்படுத்தியதும்தான் காரணம் என்று கூறப்படுகிறது.

அஃப்தாப் குடியிருந்த பகுதியிலும், உடல்களை அப்புறப்படுத்திய பகுதிகளிலும் கூட, ஏராளமான சிசிடிவி கேமராக்கள் உள்ளன. ஆனால், அவை அனைத்தும் ஒரு சில நாள்கள் முதல் ஒரு மாதம் வரையிலான பதிவுகளை மட்டுமே சேமித்து வைக்கும் திறன் பெற்றதாக உள்ளன.

ஆனால், முதல் முறையாக, அஃப்தாப் குடியிருந்த சத்தர்பூர் பகடி பகுதிக்கு அருகே உள்ள ஒரு பகுதியில் கடந்த அக்டோபர் மாதம் பதிவான சிசிடிவி காட்சிகள் கிடைத்துள்ளன. அவற்றில், அஃப்தாப் அதிகாலை 4 மணிக்கு அவ்வழியாகச் செல்வது பதிவாகியிருக்கிறது. இதைத் தொடர்ந்து சத்தர்பூர் பகடி மற்றும் இதர தெற்கு தில்லி பகுதிகளில் நம்பிக்கையோடு காவல்துறையினர் தேடிய போது கிட்டத்தட்ட மூன்று சிசிடிவி கேமராக்களின் சேமிப்புத் திறன் 9 மாதங்கள் வரை இருந்ததும், அதிலும் பதிவுகள் மிகத் துல்லியமாக இருந்ததும்தான் காவல்துறையினருக்கு இந்த வழக்கின் பக்கபலமாக மாறியது.

கடந்த 12 நாள்களாக ஷ்ரத்தா கொலை வழக்கை விசாரித்து வரும் காவல்துறையினர் கூறுவது என்னவென்றால், ஷ்ரத்தாவை அஃப்தாப் திட்டமிட்டுக் கொலை செய்து தடயங்களை துல்லியமாக மறைத்துள்ளார். அதாவது, சிசிடிவி காட்சிகள் மட்டுமல்ல, வேறு எந்த வகையிலும் தொழில்நுட்ப உதவியோடு, இந்தக் கொலையை காவல்துறையினர் கண்டுபிடிக்க முடியாத வகையில் அஃப்தாப் செயல்பட்டதாகவும் கூறுகிறார்கள்.

அதாவது, ஷ்ரத்தாவின் உடல் பாகங்களை வெளியே எடுத்துச் செல்லும் போது ஜிபிஎஸ் கருவியை அணைத்து வைப்பது அல்லது தனது செல்லிடப்பேசியை தான் குடியிருந்த வீட்டிலேயே வைத்துவிட்டுச் செல்வதை அஃப்தாப் செய்துள்ளான். அந்த வகையில், அவன் நள்ளிரவில் எப்போது எங்கேச் சென்றார் என்பதை காவல்துறையினரால் தொழில்நுட்ப உதவியைக் கொண்டு கண்டுபிடிக்க முடியாமல் போயிருப்பதாகவும் குறிப்பிடுகிறார்கள்.

மேலும், ஷ்ரத்தாவைக் கொலை செய்தது மற்றும் உடல் உறுப்புகளை மறைத்தது அனைத்துக்கும் வேண்டுமென்றே கால இடைவெளி கொடுத்துள்ளார் அஃப்தாப். அதற்குக் காரணம், குறைந்த சேமிப்புத் திறன் கொண்ட சிசிடிவி காட்சிகளில் பழைய காட்சிகள் அழிந்து, புதிய காட்சிகள் பதிவாகும் என்பதை அறிந்தே, திட்டமிட்டு செய்திருப்பதாகவும் காவல்துறையினர் கூறுகிறார்கள்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com