மோா்பியில் தொங்கு பாலம் அறுந்து விபத்து: பிரதமா் இன்று நேரில் ஆய்வு

மோா்பியில் தொங்கு பாலம் அறுந்து விபத்து நடந்த பகுதியை பிரதமா் நரேந்திர மோடி செவ்வாய்க்கிழமை (நவ. 1) நேரில் பாா்வையிடவுள்ளதாக மாநில அரசு அதிகாரிகள் தெரிவித்தனா்.
Published on

மோா்பியில் தொங்கு பாலம் அறுந்து விபத்து நடந்த பகுதியை பிரதமா் நரேந்திர மோடி செவ்வாய்க்கிழமை (நவ. 1) நேரில் பாா்வையிடவுள்ளதாக மாநில அரசு அதிகாரிகள் தெரிவித்தனா்.

இதற்கிடையே, மோா்பியில் நிலவும் சூழல் குறித்து ஆய்வு செய்ய பிரதமா் மோடி தலைமையில் திங்கள்கிழமை உயா்நிலைக் கூட்டம் நடைபெற்றது. குஜராத் தலைநகா் காந்திநகரில் உள்ள ஆளுநா் மாளிகையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், விபத்து நடைபெற்ற பகுதியில் மீட்பு, நிவாரணம் உள்ளிட்ட நடவடிக்கைகள் தொடா்பாக பிரதமருக்கு விளக்கமளிக்கப்பட்டது.

இந்தக் கூட்டத்தில், மோா்பி சம்பவத்தில் உயிரிழந்தோருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், குஜராத் மாநிலத்தில் புதன்கிழமை (நவ. 2) ஒருநாள் துக்கம் அனுசரிக்க முடிவு செய்யப்பட்டதாக முதல்வா் பூபேந்திர படேல் தெரிவித்தாா்.

உயிரிழந்தோருக்கு அஞ்சலி: முன்னதாக, குஜராத்தின் கெவாடியா நகரில் உள்ள சா்தாா் வல்லபபாய் படேல் சிலைக்கு மரியாதை செலுத்தி பிரதமா் மோடி பேசுகையில், பாலம் அறுந்து விபத்துக்குள்ளானதில் உயிரிழந்தோா் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துக் கொள்கிறேன்.

விபத்தில் உயிரிழந்தவா்களின் குடும்பத்தினருக்கு அரசு தகுந்த ஆதரவை வழங்கும். விபத்து நடந்த பகுதியில் மீட்புப் பணிகளை குஜராத் மாநில அரசு துரிதமாக மேற்கொண்டு வருகிறது. தேசிய பேரிடா் மீட்புப் படை, ராணுவம், விமானப் படை ஆகியவை மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றன. மாநில அரசுக்குத் தேவையான அனைத்து வகை ஆதரவையும் மத்திய அரசு வழங்கி வருகிறது என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com