காங்கிரஸ் தலைவர் தேர்தல்: ராகுல் காந்தி போட்டியிட வாய்ப்பில்லை!

காங்கிரஸ் தலைவரை தேர்வு செய்யும் உள்கட்சித் தேர்தலில் ராகுல் காந்தி போட்டியிட வாய்ப்பில்லை என காங்கிரஸ் வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன. 
காங்கிரஸ் தலைவர் தேர்தல்: ராகுல் காந்தி போட்டியிட வாய்ப்பில்லை!

காங்கிரஸ் தலைவர் பொறுப்புக்கான உள்கட்சித் தேர்தலில் ராகுல் காந்தி போட்டியிட வாய்ப்பில்லை என காங்கிரஸ் வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன. 

காங்கிரஸ் கட்சியில் தற்போது இடைக்காலத் தலைவராக சோனியா காந்தி உள்ளார். எனினும் பாஜகவுக்கு எதிராகவும், வலுவான எதிர்க்கட்சியை வழிநடத்தும் நோக்கிலும் காங்கிரஸ் கட்சிக்கு தலைவரை தேர்வு செய்வதற்கான ஆயத்தப் பணிகள் நடைபெற்று வருகின்றன. 

அந்தவகையில், தலைவரைத் தேர்வு செய்ய வருகிற அக்டோபர் 17-ம் தேதி காங்கிரஸ் கட்சியில் தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் போட்டியிட விருப்பமுடைய வேட்பாளர்கள் வரும் செப்டம்பர் 24 முதல் 30 ஆம் தேதி வரை வேட்பு மனுக்களை தாக்கல் செய்யலாம் என்றும் வாக்கு எண்ணிக்கை அக்டோபர் 19 ஆம் தேதி நடைபெற்று அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளதாகவும் காங்கிரஸ் அறிவித்துள்ளது.

காங்கிரஸ் கட்சி தலைவராக இருந்த ராகுல் காந்தி, கடந்த 2019ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று தலைவர் பொறுப்பைத் துறந்தார். 

தற்போது கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை ஒற்றுமைப் பயணத்தை ராகுல் காந்தி மேற்கொண்டுள்ளார். இந்த பயணம்  12 மாநிலங்கள் வழியாக காஷ்மீரில் நிறைவடைகிறது.

நாள்தோறும் 25 கிமீ பயணத்தை மேற்கொண்டு சுமாா் 150 நாட்களில் 3,570 கிலோமீட்டா் தூரம் நடைப்பயணத்தை மேற்கொள்கிறார்.

இந்நிலையில், ஒற்றுமைப் பயணத்தை மேற்கொண்டுள்ளதால் காங்கிரஸ் கட்சி தலைவர் தேர்தலில் ராகுல் போட்டியிட வாய்ப்பில்லை என தகவல் வெளியாகியுள்ளது.

நேரு குடும்பத்தைச் சாராத ஒருவர் காங்கிரஸ் தலைவராகும் அறிகுறிகள் தென்படுவதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com