குரங்கு அம்மைக்கு முதல் பலி: தாமத சிகிச்சையே காரணம்?

கேரளத்தில் கடந்த சனிக்கிழமை உயிரிழந்த நபருக்கு குரங்கு அம்மை பாதிப்பு இருப்பதை கேரள அரசு உறுதி செய்துள்ள நிலையில், தாமதமாக சிகிச்சை எடுத்துக்கொண்டதே உயிரிழப்பிற்கு காரணம் என கூறப்படுகிறது.
வீணா ஜார்ஜ் (கோப்புப் படம்)
வீணா ஜார்ஜ் (கோப்புப் படம்)

கேரளத்தில் கடந்த சனிக்கிழமை உயிரிழந்த நபருக்கு குரங்கு அம்மை பாதிப்பு இருப்பதை கேரள அரசு உறுதி செய்துள்ள நிலையில், தாமதமாக சிகிச்சை எடுத்துக்கொண்டதே உயிரிழப்பிற்கு காரணம் என கூறப்படுகிறது.

கேரள மாநிலம் திரிச்சூர் பகுதியை சேர்ந்த 22 வயது இளைஞர் காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அவர் ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து வந்ததால், அவருக்கு குரங்கு அம்மை பரிசோதனை செய்யப்பட்டது. இதன் முடிவுகள் தெரியவரும் முன்பே அவர், மருத்துவமனையில் உயிரிழந்துள்ளார். இந்நிலையில், பரிசோதனை முடிவுகளில் அவருக்கு குரங்கு அம்மை பாதிப்பு இருப்பதை கேரள அரசு உறுதி செய்துள்ளது.

இந்நிலையில் இது தொடர்பாக பேசிய சுகாதாரத் துறை அமைச்சர் வீணா ஜார்ஜ், ஜூலை 22ஆம் தேதி ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து இளைஞர் கேரளத்திற்கு வந்துள்ளார். அவர் தனது குடுமத்துடன் இருந்து வந்த நிலையில், ஜூலை 26ஆம் தேதி காய்ச்சல் இருந்தது தெரியவந்துள்ளது. அதனைத் தொடர்ந்து ஜூலை 27ஆம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.  ஜூலை 28ஆம் தேதி அவர் வென்டிலேட்டர் சிகிச்சைக்கு மாற்றப்பட்டார். 

புணேவின் தேசிய வைராலஜி நிறுவனத்தில் இருந்து வந்த மாதிரி சோதனை முடிவுகளில் அவருக்கு குரங்கு அம்மை பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 

உயிரிழந்த நபருக்கு ஐக்கிய அரபு அமீரகத்தில் ஏற்கெனவே குரங்கு அம்மை பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதாவது கேரளத்திற்கு வருவதற்கு முன்பு ஜூலை 17ஆம் தேதி அவருக்கு குரங்கு அம்மை பாதிப்பு இருந்துள்ளது.

பாதிக்கப்பட்ட நபருக்கு நெருக்கமான 20 பேரை தனிமைப்படுத்தி கண்காணித்து வருகிறோம்.  இதில் அவர்களது குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள், அவருக்கு சிகிச்சை மேற்கொண்டவர்கள் என அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் எனக் குறிப்பிட்டார்.

இந்நிலையில், காய்ச்சல் அறிகுறி தெரிந்தவுடன் மருத்துவமனை செல்லாமல், தாமதம் செய்ததே உடல் நிலை மோசமடைந்ததற்கான காரணம் என கூறப்படுகிறது.

இது தொடர்பாக விளக்கமளித்த வீணா ஜார்ஜ், அவர் மருத்துவமனைக்கு தாமதமாக வந்து சேர்ந்தது ஏன் என பலர் கேள்வி எழுப்புகின்றனர். ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து வந்ததும் பரிசோதனை மேற்கொண்டிருக்கலாம் எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com