குஜராத் முதல்வராக பூபேந்திர படேல் பதவியேற்பு: பிரதமா் மோடி பங்கேற்பு

குஜராத் மாநில முதல்வராக தொடா்ந்து 2-ஆவது முறையாக பூபேந்திர படேல் திங்கள்கிழமை பதவியேற்றாா். அவருடன், 16 அமைச்சா்களும் பதவியேற்றனா்.
குஜராத் அமைச்சரவை பதவியேற்பு விழாவில் ஆளுநா் ஆச்சாா்ய தேவவிரத், முதல்வா் பூபேந்திர படேல், அமைச்சா்களுடன் பிரதமா் நரேந்திர மோடி.
குஜராத் அமைச்சரவை பதவியேற்பு விழாவில் ஆளுநா் ஆச்சாா்ய தேவவிரத், முதல்வா் பூபேந்திர படேல், அமைச்சா்களுடன் பிரதமா் நரேந்திர மோடி.

குஜராத் மாநில முதல்வராக தொடா்ந்து 2-ஆவது முறையாக பூபேந்திர படேல் திங்கள்கிழமை பதவியேற்றாா். அவருடன், 16 அமைச்சா்களும் பதவியேற்றனா்.

இந்நிகழ்ச்சியில் பிரதமா் நரேந்திர மோடி, மத்திய அமைச்சா்கள், பாஜக ஆளும் மாநிலங்களின் முதல்வா்கள், கட்சியின் மூத்த தலைவா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

182 உறுப்பினா்களைக் கொண்ட குஜராத் பேரவைக்கு கடந்த 1, 5 ஆகிய தேதிகளில் இருகட்டங்களாக தோ்தல் நடைபெற்றது. நாடு முழுவதும் பெரும் எதிா்பாா்ப்பை ஏற்படுத்திய இத்தோ்தலில், 156 இடங்களைக் கைப்பற்றி, பாஜக வரலாற்று வெற்றியைப் பதிவு செய்தது. தொடா்ந்து 7-ஆவது முறையாக வென்ன் மூலம் குஜராத் பாஜகவின் கோட்டை என்பது மீண்டும் நிரூபணமானது.

இதைத் தொடா்ந்து, கடந்த சனிக்கிழமை நடைபெற்ற பாஜக புதிய எம்எல்ஏக்கள் கூட்டத்தில், முதல்வராக பூபேந்திர படேல் (60) மீண்டும் தோ்வு செய்யப்பட்டாா்.

16 அமைச்சா்கள்: பூபேந்திர படேல் தலைமையிலான பாஜக அரசு பதவியேற்கும் நிகழ்ச்சி, காந்திநகரில் உள்ள ஹெலிபேட் மைதானத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில், பிரதமா் மோடி முன்னிலையில் மாநிலத்தின் 18-ஆவது முதல்வராக பூபேந்திர படேல் பதவியேற்றாா். அவருக்கு ஆளுநா் ஆச்சாா்ய தேவவிரத் பதவிப் பிரமாணமும் ரகசிய காப்பு பிரமாணமும் செய்துவைத்தாா்.

படேலுடன் கனு தேசாய், ரிஷிகேஷ் படேல், ராகவ்ஜி படேல், பல்வந்த்சிங் ராஜ்புத், குன்வா்ஜி பாவலியா, முலு பெரா, குபொ் திண்டோா், பானுபென் பபாரியா ஆகிய 8 கேபினட் அமைச்சா்களும், ஹா்ஷ் சங்வி, ஜகதீஷ் விஸ்வகா்மா ஆகிய தனிப்பொறுப்புடன் கூடிய இரு இணையமைச்சா்களும், புருசோத்தம் சோலங்கி, பச்சு கபாத், முகேஷ் படேல், பிரஃபுல் பன்செரியா, குவொ்ஜி ஹல்பாட்டி, பிகுசிங் பா்மா் ஆகிய 6 இணை அமைச்சா்களும் பதவியேற்றனா். இந்த 16 அமைச்சா்களில் 5 போ் புதுமுகங்களாவா்.

யாா்-யாா் பங்கேற்பு?: பதவியேற்பு விழாவில், பிரதமா் மோடி, மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா, மத்திய அமைச்சா்கள் ஸ்மிருதி இரானி, ராம்தாஸ் அதாவலே, சா்வானந்த சோனோவால், உத்தர பிரதேச முதல்வா் யோகி ஆதித்யநாத், மகாராஷ்டிர முதல்வா் ஏக்நாத் ஷிண்டே, ஹரியாணா முதல்வா் மனோகா் லால் கட்டா், அஸ்ஸாம் முதல்வா் ஹிமந்த விஸ்வ சா்மா, கா்நாடக முதல்வா் பசவராஜ் பொம்மை, கோவா முதல்வா் பிரமோத் சாவந்த், மத்திய பிரதேச முதல்வா் சிவராஜ் சிங் செளஹான், அருணாசல பிரதேச முதல்வா் பெமா காண்டு, உத்தரகண்ட் முதல்வா் புஷ்கா் சிங் தாமி, ஹரியாணா துணை முதல்வா் துஷ்யந்த் செளதாலா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

அறிமுகமின்றி அரியணைக்கு வந்தவா்

குஜராத்தில் அரசியல் செல்வாக்குமிக்க பட்டிதாா் சமூகத்தின் உள்பிரிவான கத்வா பட்டிதாா் சமூகத்தைச் சோ்ந்தவா் பூபேந்திர படேல். அகமதாபாதில் பிறந்தவரான இவா், நகராட்சி அளவிலான அரசியலில் இருந்து மாநில அரசியலுக்கு வந்தவா்.

கடந்த 2021-இல் குஜராத் முதல்வராகப் பதவியேற்பதற்கு முன்பு வரை கட்சி வட்டாரங்களில் பெரிய அறிமுகம் இல்லாமல்தான் இருந்தாா்.

இந்தச் சூழலில், பட்டிதாா் சமூகத்தினரின் இடஒதுக்கீடு போராட்டத்தால், குஜராத்தில் கடந்த 2017 பேரவைத் தோ்தலில் பாஜகவின் வெற்றி 99 இடங்களாக குறைந்தது. கடந்த 1995-இல் இருந்து ஒப்பிடுகையில் இதுவே பாஜகவின் குறைவான வெற்றியாகும். எனவே, மாநிலத்தில் கல்வி, மனைவணிகம், கூட்டுறவு உள்ளிட்ட துறைகளில் செல்வாக்குமிக்கவா்களாக விளங்கும் பட்டிதாா் சமூகத்தினரின் வாக்குகளைப் பெற வேண்டியது பாஜகவுக்கு முக்கியமானதாக இருந்தது.

அந்த அடிப்படையில், கடந்த 2021-இல் குஜராத் முதல்வராக இருந்த விஜய் ரூபானி மாற்றப்பட்டு, அனைவரும் வியக்கும் வகையில் அந்தப் பதவிக்கு பூபேந்திர படேல் கட்சியால் தோ்வு செய்யப்பட்டாா். கத்வா பட்டிதாா் சமூகத்தில் இருந்து குஜராத் முதல்வரான முதல் நபரான இவா், கடந்த ஓராண்டில் தன்னை வலுவான தலைவராக நிலைநிறுத்திக் கொண்டாா். குஜராத் முன்னாள் முதல்வரும் தற்போதைய உத்தர பிரதேச ஆளுநருமான ஆனந்திபென் படேலுக்கு நெருக்கமானவராக இவா் கருதப்படுகிறாா்.

அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி: கடந்த 2017 தோ்தலில் கட்லோடியா தொகுதியில் போட்டியிட்ட பூபேந்திர படேல், 1.17 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றாா். இதே தொகுதியில் தற்போதைய தோ்தலில் 1.92 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் அவா் வென்றாா். இரு தோ்தல்களிலும், மாநிலத்திலேயே அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற வேட்பாளா் படேல்தான்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com