கட்சி மாறக் கூடாது...வேட்பாளர்களிடம் உறுதிமொழி வாங்கிய காங்கிரஸ்

"இறைவன் மீது எங்களுக்கு முழு நம்பிக்கை உள்ளது. எனவே, நாங்கள் மாற மாட்டோம் என்று உறுதிமொழி எடுத்துள்ளோம். கடந்த காலங்களில் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கட்சியை விட்டுச் செல்ல நாங்கள் மட்டும் பொறுப்பல்ல" 
வேட்பாளர்களிடம் உறுதிமொழி வாங்கிய காங்கிரஸ்
வேட்பாளர்களிடம் உறுதிமொழி வாங்கிய காங்கிரஸ்

கோவா, உத்தரகண்ட், பஞ்சாப், உத்தரப்பிரதேசம், மணிப்பூர் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடத்தப்படும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. கோவாவில் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தேர்தல் பணிகளில் அரசியல் கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன.

இந்நிலையில், கோவா தேர்தலில் போட்டியிடும் தனது கட்சியின் 36 வேட்பாளர்களிடம் இருந்து காங்கிரஸ் உறுதிமொழியைப் பெற்றுள்ளது. அதாவது தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு, அடுத்த 5 ஆண்டுகளுக்குக் காங்கிரஸ் கட்சியில் தான் இருப்போம் என்று அவர்கள் வழிபாட்டுத்தலங்களுக்கு சென்று உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். 

"மகாலட்சுமி தேவியின் காலடியில் எங்களுக்குப் போட்டியிட வாய்ப்பளித்த காங்கிரஸ் கட்சிக்கு விசுவாசமாக இருப்போம் என்று உறுதிமொழி எடுத்துக்கொள்கிறோம். வென்ற பிறகு எந்த சூழ்நிலையிலும் கட்சியுடன் இருப்போம் என்று உறுதியளிக்கிறோம்" என்று உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

இந்து கோயில், தேவாலயம், மசூதி என 3 இடங்களிலும் 36 வேட்பாளர்களும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். இதுகுறித்து முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் சட்டப்பேரவை தலைவருமான திகம்பர் காமத் கூறுகையில், "கோவா மக்கள் மத நல்லிணக்கத்திற்குப் பெயர் பெற்றவர்கள், மகாலட்சுமியின் முன் 5 ஆண்டுகள் ஒன்றாக இருப்போம் என்று உறுதிமொழி எடுத்துள்ளோம். 
எந்த கட்சியும் எங்கள் எம்எல்ஏக்களை இழுக்க அனுமதிக்க மாட்டோம்.

இறைவன் மீது எங்களுக்கு முழு நம்பிக்கை உள்ளது. எனவே, நாங்கள் மாற மாட்டோம் என்று உறுதிமொழி எடுத்துள்ளோம். கடந்த காலங்களில் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கட்சியை விட்டுச் செல்ல நாங்கள் மட்டும் பொறுப்பல்ல. 

பாஜக அவர்களுக்கு பல்வேறு சலுகைகளை வழங்கியது. அதனால் அவர்கள் கட்சி மாறினார்கள். இது மீண்டும் நடக்காது என்று கோவா மக்களுக்கு நாங்கள் உறுதியளிக்க விரும்புகிறோம்" என்று அவர் தெரிவித்தார்.

கோவா சிறிய மாநிலம் என்பதால், அங்கு எம்எல்ஏக்கள் கட்சி மாறுவது வாடிக்கையான ஒன்றுதான். 2017 தேர்தலில் கூட, காங்கிரஸ் கட்சி 17 இடங்களில் வென்றிருந்தாலும், கடந்த 5 ஆண்டுகளில் பல எல்எல்ஏக்கள் கட்சி மாறி சென்றுவிட்டனர். சிலர் ராஜிநாமா செய்திவிட்டனர். 

தனிப்பெரும் கட்சியாக இருந்த காங்கிரஸிடம் தற்போது இரண்டு எம்எல்ஏக்கள் மட்டுமே உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com