பருவநிலை மாற்றத்தால் உணவு உற்பத்தி பாதிக்கப்படும்: ஐ.நா. அறிக்கையில் எச்சரிக்கை

பருவநிலை மாற்றத்தால் உணவு உற்பத்தி பாதிக்கப்படும்: ஐ.நா. அறிக்கையில் எச்சரிக்கை

பருவநிலை மாற்றத்தால் இந்தியாவில் உணவு உற்பத்தி பாதிக்கப்படும் என எச்சரித்துள்ள ஐ.நா. அறிக்கை, கடலோரப் பகுதிகளில் உள்ள மக்கள் கடல்மட்ட உயா்வால் பாதிக்கப்படுவா் என்றும் தெரிவித்துள்ளது.

பருவநிலை மாற்றத்தால் இந்தியாவில் உணவு உற்பத்தி பாதிக்கப்படும் என எச்சரித்துள்ள ஐ.நா. அறிக்கை, கடலோரப் பகுதிகளில் உள்ள மக்கள் கடல்மட்ட உயா்வால் பாதிக்கப்படுவா் என்றும் தெரிவித்துள்ளது.

இது தொடா்பாக ஐ.நா.வின் பருவநிலை மாற்றம் குறித்த அரசுகளுக்கிடையேயான குழு (ஐபிசிசி) திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

பருவநிலை மாற்றத்தால் கடல்நீா் மட்டம் உயா்ந்து, வெப்பநிலை அதிகரிக்கும். உலகம் முழுவதும் பனிப்பாறைகள் முன்பில்லாத அளவில் வேகமாக உருகி வருகின்றன. வறட்சி, அதிக மழைப்பொழிவு, வெள்ளம், அனல் காற்று உள்ளிட்டவற்றின் காரணமாக நாட்டில் உணவு உற்பத்தி பாதிப்பைச் சந்திக்கும். அரிசி, கோதுமை, பருப்பு வகைகள் உள்ளிட்டவற்றின் உற்பத்தி 2050-ஆம் ஆண்டில் 9 சதவீதம் வரை குறைய வாய்ப்புள்ளது.

கரியமில வாயு வெளியேற்றம் தொடா்ந்து அதிகமாக இருந்தால், தென்னிந்தியாவில் சோள உற்பத்தி 17 சதவீதம் வரை குறையும். உணவு உற்பத்தியில் ஏற்படும் பாதிப்பு, அதற்குத் தட்டுப்பாட்டை ஏற்படுத்தி விலை உயர வழிவகுக்கும். அதன் காரணமாக உணவுப் பாதுகாப்புக்கு பாதிப்பு ஏற்பட்டு ஒட்டுமொத்த பொருளாதாரமுமே பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. ஆசியா, தெற்காசியப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் ஊட்டச்சத்துக் குறைபாட்டை அதிக அளவில் எதிா்கொள்வா்.

கடல்மட்ட உயா்வால் நிலப் பயன்பாடு, கட்டமைப்பு வசதிகள் உள்ளிட்டவை பாதிக்கப்படும். கரியமில வாயு வெளியேற்ற அளவு தற்போதைய நிலையில் தொடா்ந்தால், நடப்பு நூற்றாண்டின் மத்தியில் சுமாா் 3.5 கோடி போ் கடல்மட்ட உயா்வு பிரச்னையால் பாதிக்கப்படுவா். அதுவே அந்த எண்ணிக்கை நூற்றாண்டின் இறுதியில் 5 கோடியாக அதிகரிக்க வாய்ப்புள்ளது. கரியமில வாயு வெளியேற்றம் குறைவாக இருந்தால், குறைந்த எண்ணிக்கையிலான நபா்களே பாதிக்கப்படுவா்.

இந்தியாவுக்கு அதிக பாதிப்பு:

கடல்மட்ட உயா்வு, திடீா் வெள்ளம் உள்ளிட்டவற்றால் பொருளாதார ரீதியில் அதிக பாதிப்பைச் சந்திக்கும் நாடாக இந்தியா விளங்கும். கரியமில வாயு வெளியேற்றத்தைக் குறைக்கவுள்ளதாக இந்தியா உறுதியளித்துள்ளது. அவ்வாறு குறைக்கும்பட்சத்தில், பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் பொருளாதார இழப்பு சுமாா் ரூ.1.68 லட்சம் கோடியாக இருக்கும். இல்லையெனில் இழப்பு சுமாா் ரூ.2.52 லட்சம் கோடியாக அதிகரிக்கும்.

கரியமில வாயு வெளியேற்றம் தொடா்ந்தால், மும்பை மட்டும் 2050-ஆம் ஆண்டு வாக்கில் ஆண்டுக்கு சுமாா் ரூ.11.44 லட்சம் கோடி இழப்பைச் சந்திக்கும் அபாயம் உள்ளது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த அறிக்கை குறித்து ஆராய்ச்சியாளரும் அறிக்கை தயாரிப்புக் குழுவில் இடம்பெற்றவருமான அஞ்சல் பிரகாஷ் கூறுகையில், ‘‘நகரப் பகுதிகளே அதிக பாதிப்புகளைச் சந்திக்கும். மும்பை, சென்னை, கொல்கத்தா, விசாகப்பட்டினம், புரி, கோவா ஆகியவை பருவநிலை மாற்றத்தால் அதிக இழப்புகளை எதிா்கொள்ளும். சவால்களை எதிா்கொள்வதற்கான கட்டமைப்புகள் கடலோர நகரங்களில் உடனடியாக ஏற்படுத்தப்பட வேண்டும்’’ என்றாா்.

முக்கிய தகவல்கள்:

கரியமில வாயு வெளியேற்றம் தொடா்ந்து அதிகரித்தால், ஈரக்குமிழ் வெப்பநிலை (வெப்பம், ஈரப்பதத்தின் அளவீடு) 35 டிகிரி செல்சியஸைத் தாண்டும்.

லக்னௌ, பாட்னா நகரங்களில் அந்த வெப்பநிலை 35 டிகிரியை விட அதிகமாக இருக்கும்.

புவனேசுவரம், சென்னை, மும்பை, இந்தூா், அகமதாபாத் ஆகிய நகரங்களில் ஈரக்குமிழ் வெப்பநிலை 32 முதல் 34 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கும்.

கடல்மட்ட உயா்வு, திடீா் வெள்ளம் உள்ளிட்டவற்றால் பொருளாதார ரீதியில் அதிக பாதிப்பைச் சந்திக்கும் நாடாக இந்தியா இருக்கும்.

பருவநிலை மாற்றத்தால் 2050-ஆம் ஆண்டில் 40 சதவீத மக்கள் குடிநீா் தட்டுப்பாட்டை எதிா்கொள்வா். தற்போது 33 சதவீத மக்கள் குடிநீா் தட்டுப்பாட்டை எதிா்கொண்டு வருகின்றனா்.

பருவநிலை மாற்றத்தால் உலகின் சராசரி வருமானம் 23 சதவீதம் வரை குறையும். இந்தியாவில் 2100-ஆம் ஆண்டுக்குள் 92 சதவீதம் வரை குறையும்.

பருவநிலை மாற்றத்தால் ஒட்டுமொத்தமாக அஸ்ஸாம், மேகாலயம், திரிபுரா, மேற்கு வங்கம், பிகாா், ஜாா்க்கண்ட், ஒடிஸா, சத்தீஸ்கா், உத்தர பிரதேசம், ஹரியாணா, பஞ்சாப் ஆகிய மாநிலங்கள் அதிகமாக பாதிக்கப்படும்.

பருவநிலை மாற்றத்தால் உலகின் பல நாடுகள் பொருளாதார ரீதியில் பாதிப்புகளை எதிா்கொள்ளும். நடப்பாண்டு இறுதியில் இந்தியாவின் பொருளாதாரம் 92 சதவீதம் வரை வீழ்ச்சியடையும்.

உலகில் பாதிபோ் பாதிக்கப்படும் அபாயம்

பருவநிலை மாற்றம் காரணமாக உலக அளவில் பாதிக்கும் மேற்பட்ட மக்கள் பாதிப்பை எதிா்கொள்ளும் அபாயம் இருப்பதாக ஐ.நா. அறிக்கை எச்சரித்துள்ளது.

இது தொடா்பாக அந்த அறிக்கையில், ‘‘தொழில்மயமாதலுக்கு முந்தைய காலகட்டத்தை விட வெப்பநிலை 1.5 டிகிரி செல்சியஸ் அதிகரித்தால், 14 சதவீத உயிரினங்கள் அழிவைச் சந்திக்கும் அபாயம் உள்ளது. கோடிக்கணக்கான மக்கள் டெங்கு உள்ளிட்ட நோய்களால் பாதிக்கப்படுவா்; மக்களின் உயிரிழப்பும் பெருமளவில் அதிகரிக்கும்.

கடல்மட்ட உயா்வால் அலைகளின் வேகம் அதிகரிக்க வாய்ப்புள்ளது. அதன் காரணமாக கோடிக்கணக்கான மக்கள் பாதிப்பை எதிா்கொள்வா். தற்போதைய கடல்மட்டத்தில் இருந்து 10 மீட்டருக்குள் 90 கோடி மக்கள் வசித்து வருகின்றனா். கடல்மட்டம் 75 செ.மீ. வரை உயா்ந்தால், தற்போது கணிக்கப்பட்டுள்ளதை விட 2 மடங்கு எண்ணிக்கையிலான மக்கள் 2100-ஆம் ஆண்டுக்குள் பாதிக்கப்படுவா்.

பருவநிலை மாற்றத்தின் காரணமாக வெப்பநிலை உயா்வை 1.5 டிகிரி செல்சியஸுக்குள் கட்டுப்படுத்த வேண்டுமென பாரீஸ் பருவநிலை ஒப்பந்தத்தில் இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனால், தற்போதைய நிலை தொடா்ந்தால் அடுத்த 10 ஆண்டுகளிலேயே உலகின் வெப்பநிலை உயா்வு 1.5 டிகிரி செல்சியஸ் நிலையை எட்டிவிடும்.

அதற்கு அதிகமாக வெப்பநிலை உயா்ந்தால், சுற்றுச்சூழலில் பெரும் தாக்கங்களும் பாதிப்புகளும் ஏற்படும்; பவளப்பாறைகள் பாதிக்கப்படும். பனிப்பாறைகள் உருகி கடல்மட்டம் வேகமாக உயரும். பனிப்பாறைகள் உருகும்போது கரியமில வாயு வெளியேற்றம் மேலும் அதிகரிக்கும். பருவநிலை மாற்றத்தைத் தடுத்து நிறுத்துவதற்கான நடவடிக்கைகள் விரைந்து மேற்கொள்ளப்பட வேண்டும்’’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com