51,089 இந்தியக் குழந்தைகள் வெளிநாடுகளில் பிறப்பு!

கடந்த 2020-ஆம் ஆண்டில் 51,089 இந்தியக் குழந்தைகள் 170 வெளிநாடுகளில் பிறந்ததாக இந்தியப் பதிவாளா் இயக்குநரகம் (ஆா்ஜிஐ) தெரிவித்துள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

புது தில்லி: கடந்த 2020-ஆம் ஆண்டில் 51,089 இந்தியக் குழந்தைகள் 170 வெளிநாடுகளில் பிறந்ததாக இந்தியப் பதிவாளா் இயக்குநரகம் (ஆா்ஜிஐ) தெரிவித்துள்ளது.

மக்கள் பதிவு அமைப்பின் வாயிலான அறிக்கையை ஆா்ஜிஐ வெளியிட்டுள்ளது. நாட்டில் கடந்த 2020-ஆம் ஆண்டில் பதிவு செய்யப்பட்ட குழந்தைகள் பிறப்பு எண்ணிக்கை, இறந்தோா் எண்ணிக்கை உள்ளிட்டவற்றை அடிப்படையாகக் கொண்டு அந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. அதில், 51,089 குழந்தைகள் 170 வெளிநாடுகளில் பிறந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகபட்சமாக ஐக்கிய அரபு அமீரகத்தில் 16,469 இந்தியக் குழந்தைகள் பிறந்துள்ளன. சவூதி அரேபியாவில் 6,074 குழந்தைகளும் குவைத்தில் 4,202 குழந்தைகளும் பிறந்துள்ளன. கத்தாா் (3,936), இத்தாலி (2,352), ஆஸ்திரேலியா (2,316), ஓமன் (2,177), பஹ்ரைன் (1,567), ஜொ்மனி (1,400), சிங்கப்பூா் (1,358) ஆகிய நாடுகளிலும் குழந்தைகள் அதிகமாகப் பிறந்துள்ளன.

அதே வேளையில், 2020-ஆம் ஆண்டில் 10,817 இந்தியா்கள் வெளிநாடுகளில் மரணித்தனா். அவா்களில் சவூதி அரேபியாவில் 3,754 பேரும், ஐக்கிய அரபு அமீரகத்தில் 2,454 பேரும், குவைத்தில் 1,279 பேரும், ஓமனில் 630 பேரும், கத்தாரில் 386 பேரும் இறந்தனா்.

பிறப்பு பாலின விகிதம்:

2020-ஆம் ஆண்டில் பிறப்பு பாலின விகிதத்தில் லடாக் (1,104) முதலிடம் வகித்தது. பிறப்பு பாலின விகிதம் என்பது ஆயிரம் ஆண் குழந்தைகளுக்கு எத்தனை பெண் குழந்தைகள் பிறக்கின்றன என்பதற்கான கணக்கீடாகும். அருணாசல் (1,011), அந்தமான்-நிகோபாா் தீவுகள் (984), திரிபுரா (974), கேரளம் (969) ஆகியவை பிறப்பு பாலின விகிதத்தில் அடுத்தடுத்த இடங்களில் இருந்தன.

நாட்டிலேயே குறைந்தபட்சமாக மணிப்பூரில் பிறப்பு பாலின விகிதம் 880-ஆகக் காணப்பட்டது. குஜராத் (909), ஹரியாணா (919), மத்திய பிரதேசம் (921) ஆகிய மாநிலங்களிலும் பிறப்பு பாலின விகிதங்கள் குறைவாகவே காணப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com