எப்படியிருந்த நான்.. இப்படியாகிட்டேன்.. சொல்வது ஆள் இல்லை, ஊர்

தேசியத் தலைநகா் தில்லியில் திங்கள்கிழமை இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் கூறியிருந்ததைப் போல, இன்று அதிகாலை முதலே மழை வெளுத்துவாங்கியது.
எப்படியிருந்த நான்.. இப்படியாகிட்டேன்.. சொல்வது ஆள் இல்லை, ஊர்
எப்படியிருந்த நான்.. இப்படியாகிட்டேன்.. சொல்வது ஆள் இல்லை, ஊர்

தேசியத் தலைநகா் தில்லியில் திங்கள்கிழமை இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் கூறியிருந்ததைப் போல, இன்று அதிகாலை முதலே மழை வெளுத்துவாங்கியது.

தில்லியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை வெப்பம் 50 டிகிரி செல்சியஸை நெருங்கிய நிலையில், இந்த வாரம் ஞாயிற்றுக்கிழமையோ மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அது மட்டுமல்ல, கனமழை காரணமாக, கடந்த பல ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இன்று அதிகாலை சுமார் ஒன்றரை மணி நேரத்துக்கு குறைந்தபட்ச வெப்பநிலை 11 டிகிரி செல்சியஸ் என்ற அளவில் நீடித்தது. 

இதற்கு முன்பு, 1982ஆம் ஆண்டு மே மாதம் தில்லியின் குறைந்தபட்ச வெப்பநிலை 15.2 டிகிரி செல்சியஸ் ஆக பதிவாகியிருந்ததே இதுவரை மிகக் குறைவான தட்பவெப்பநிலையாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

கடுமையான வெப்பத்தால் வாடிய தில்லிவாழ் மக்கள், இன்று காலை பெய்த கோடை கனமழையால் உற்சாகம் அடைந்தனர். ஆனால், என்ன மழை அப்படி இப்படி என தூறலாக இல்லாமல் கனமழையாகக் கொட்டித் தீர்த்ததால் வழக்கம்போல சாலைகள் வெள்ளக்காடானது. அவ்வளவுதான் சாலைகளில் வாகனங்கள் ஊர்ந்து ஊர்ந்து செல்கின்றன. இப்படி ஒரேயடியாக தட்பவெப்பம் மாறியதால், எப்படி இருந்த நான் இப்படியாகிவிட்டேனே என்று தில்லி கூறுவது போல இருக்கிறது.

தில்லியில் கடந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை வெப்ப அலை உச்சம் கண்டது. நகரில் பரவலாக வீசி வந்த அனல் காற்றால் மக்கள் கடும் சிரமத்துக்குள்ளாகினா்,. நகரின் முக்கியப் பகுதிகள் அனைத்திலும் அதிகபட்ச வெப்பநிலை 50 டிகிரி செல்சியஸை நெருங்கியது. இந்த நிலையில், கடந்த வாரத் தொடக்கத்தில் இருந்து வானம் மேக மூட்டமாக இருந்து வருவதால் வெப்பத்தின் தாக்கம் ஓரளவு குறைந்துள்ளது.

பாலத்தில் 2 மி.மீ. மழை: கடந்த இரண்டு தினங்களாக நகரில் பரவலாக அவ்வப்போது லேசான மழை பெய்துள்ளது. திங்கள்கிழமை காலை 8 மணியுடன் முடிவடைந்த கடந்த 24 மணி நேரத்தில் சஃப்தா்ஜங் வானிலை ஆய்வு மையத்தில் 0.8 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. இதேபோன்று ஜாஃபா்பூரில் 0.5 மி.மீ., நஜஃப்கரில் 1 மி.மீ., ஆயாநகரில் 0.2 மி.மீ., லோதி ரோடில் 0.9 மி.மீ., பாலத்தில் 2 மி.மீ., பீதம்புராவில் 0.5 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.

இந்த நிலையில், தில்லிக்கான பிரதிநித்துவ வெப்பநிலை தரவுகளை வழங்கி வரும் சஃப்தா்ஜங் வானிலை ஆய்வு மையத்தில் ஞாயிற்றுக்கிழமை காலையில் குறைந்தபட்ச வெப்பநிலை பருவ சராசரியில் 3 டிகிரி குறைந்து 23.1 டிகிரி செல்சியஸாக பதிவாகியது. அதிகபட்ச வெப்ப நிலை இயல்பை விட 1 டிகிரி குறைந்து 39.3 டிகிரி செல்சியஸாக பதிவாகியது. காற்றில் ஈரப்பதத்தின் அளவு காலை 8.30 மணியளவில் 50 சதவீதமாகவும், மாலை 5.30 மணியளவில் 31 சதவீதமாகவும் இருந்தது.

முங்கேஸ்பூரில் 41.9 டிகிரி வெயில்: இதே போன்று மற்ற வானிலை நிலையங்களிலும் அதிகபட்ச வெப்பநிலை சற்று குறைந்து பதிவாகியது. ஜாஃபா்பூரில் அதிகபட்ச வெப்பநிலை 40.8 டிகிரி செல்சியஸ், முங்கேஸ்பூரில் 41.9 டிகிரி, நஜஃப்கரில் 41,1டிகிரி, ஆயாநகரில் 40.6 டிகிரி, லோதி ரோடில் 39.4 டிகிரி, பாலத்தில் 40.2 டிகிரி, ரிட்ஜில் 40.2 டிகிரி, பீதம்புராவில் 40.5 டிகிரி, சல்வான் பப்ளிக் ஸ்கூல் பகுதியில் 38 டிகிரி செல்சியஸ் என பதிவாகியது.

இன்று மழைக்கு வாய்ப்பு: இந்த நிலையில், தில்லியில் திங்கள்கிழமை இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையமும் கணித்திருந்தது. மேலும், குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸாகவும், அதிகபட்ச வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும் என்றும் கணித்தது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com