‘தேர்தல் நிதிப்பத்திரங்கள் மூலம் பாஜக கொள்ளை’: மம்தா குற்றச்சாட்டு

தேர்தல் நிதிப்பத்திரங்கள் மூலம் பாஜக கொள்ளையடித்து வருவதாக மேற்குவங்க முதல்வரும், திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான மம்தா பானர்ஜி குற்றம்சாட்டியுள்ளார். 
மம்தா பானர்ஜி (கோப்புப்படம்)
மம்தா பானர்ஜி (கோப்புப்படம்)

தேர்தல் நிதிப்பத்திரங்கள் மூலம் பாஜக கொள்ளையடித்து வருவதாக மேற்குவங்க முதல்வரும், திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான மம்தா பானர்ஜி குற்றம்சாட்டியுள்ளார். 

ஹிமாச்சலப்பிரதேசம், குஜராத் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அம்மாநிலங்களில் ஆட்சியைப் பிடிக்க அரசியல் கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன. 

குஜராத் மாநிலத்தில் டிசம்பர் தொடக்கத்திலும், ஹிமாச்சலப்பிரதேசத்தில் நவம்பர் 12ஆம் தேதியும் சட்டப்பேரவைத் தேர்தல்கள் நடைபெற உள்ளன. இந்நிலையில் தேர்தல் நிதிப் பத்திரங்கள் மூலம் பாஜக அரசு கொள்ளையடித்து வருவதாக மம்தா பானர்ஜி விமர்சனம் தெரிவித்துள்ளார். 

அக்டோபர் 1 முதல் 10ஆம் தேதி வரையிலான காலத்தில் தேர்தல் நிதிப்பத்திரங்கள் மூலம் பாஜக ரூ.545.26 கோடி நன்கொடையாகப் பெற்றதாக செய்திகள் வெளியான நிலையில் மம்தா பானர்ஜி இவ்வாறு விமர்சனத்தை முன்வைத்துள்ளார். 

இதுகுறித்து பேசிய அவர், “இப்போதும் நாங்கள் பாஜக மீண்டும் 2024ல் ஆட்சிக்கு வராது என நம்புகிறோம். கடந்த முறை அவர்கள் வெற்றி பெற்ற போது பல மாநிலங்களில் ஆட்சியில் இருந்தனர். ஆனால் தற்போது பிகார், ஜார்க்கண்ட் உள்ளிட்ட மாநிலங்களை அவர்கள் இழந்துள்ளனர். கேரளம் மற்றும் கர்நாடகத்தில் அவர்களால் வெற்றி பெற முடியாது. தமிழ்நாட்டில் எங்களின் நண்பர்கள் உள்ளனர். கடந்த முறை பாஜகவினர் குஜராத், உத்தரப்பிரதேசம், தில்லியி பெருவாரியான இடங்களை வென்றிருந்தனர். ஆனால் தற்போது மீண்டும் அவ்வாறு வெற்றி பெறுவார்கள் என நினைக்கிறீர்களா? தரவுகள் அப்படி தெரிவிக்கவில்லை” எனக் குறிப்பிட்டார். 

மேற்குவங்கத்தில் பஞ்சாயத்து தேர்தல்களில் வெற்றி பெறுவதற்காக புலனாய்வு அமைப்புகளை வைத்து எதிர்க்கட்சிகளை மோடி அரசு அச்சுறுத்த முயற்சித்து வருவதாக மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com