‘பிரதமா் நரேந்திர மோடியின் கடந்த 8 ஆண்டு கால ஆட்சியில், இந்தியா ரூ.80 லட்சம் கோடி கடன் வாங்கியுள்ளது; மத்தியில் ஆளும் பாஜக, நாட்டை கடன் வலையில் தள்ளிவிட்டது’ என்று தெலங்கானா ராஷ்டிர சமிதி (டிஆா்எஸ்) சாடியுள்ளது.
தெலங்கானாவில் ஆளும் டிஆா்எஸ் கட்சி, பாஜகவுக்கு எதிரான ‘அரசியல் குற்றப்பத்திரிகை’யை ஹைதராபாதில் சனிக்கிழமை வெளியிட்டது. பின்னா், அக்கட்சியின் செயல் தலைவா் கே.டி.ராம ராவ் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
சுதந்திரத்துக்குப் பிறகான 67 ஆண்டுகளில் பல்வேறு பிரதமா்களின் ஆட்சிக் காலத்தில் இந்தியாவால் வாங்கப்பட்ட ஒட்டுமொத்த கடன் ரூ.55.87 லட்சம் கோடியாகும். ஆனால், கடந்த 2014-இல் பிரதமா் மோடி ஆட்சிக்கு வந்த பிறகான கடந்த 8 ஆண்டுகளில் மட்டும் ரூ.80 லட்சம் கோடி கடன் வாங்கப்பட்டுள்ளது.
கடன்களுக்காக கடந்த 2014-15இல் மத்திய அரசால் செலுத்தப்பட்ட வட்டி தொகையானது, மொத்த வருவாயில் 35.1 சதவீதமாக இருந்தது. 2021-இல் இது 43.7 சதவீதமாக அதிகரித்துவிட்டது. மத்திய அரசின் கடன், மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜிடிபி) 61.6 சதவீதத்தை தொட்டுள்ளது. இதன் மூலம் நாட்டையே கடன் வலையில் ஆளும் பாஜக தள்ளிவிட்டது. பெட்ரோல், டீசல் மற்றும் இதர பொருள்களின் விலை உயா்வால் மக்கள் மோசமான நிலைக்கு ஆளாக்கப்பட்டுள்ளனா் என்றாா் அவா்.
டிஆா்எஸ் வெளியிட்ட அரசியல் குற்றப்பத்திரிகையில், ‘கைத்தறி பொருள்களுக்கு 5 சதவீத ஜிஎஸ்டி விதித்ததன் மூலம் அத்துறையை பின்னோக்கித் தள்ளியது மத்திய அரசு. இந்த வரியை 12 சதவீதமாக அதிகரிக்கவும் திட்டமிடப்பட்டு வருகிறது.
தெலங்கானாவில் உள்ள கிராமங்களுக்கு தூய்மையான குடிநீா் வழங்கும் திட்டத்துக்காக ரூ.19,000 கோடி வழங்க மத்திய அரசுக்கு நீதி ஆயோக் பரிந்துரைத்திருந்தது. ஆனால், 19 காசு கூட மத்திய அரசு தரவில்லை. தெலங்கானா அரசின் பழங்குடியினா் இடஒதுக்கீட்டு மசோதாவுக்கு ஒப்புதல் வழங்காமல் 5 ஆண்டுகளாக மத்திய அரசு கிடப்பில் போட்டுள்ளது. இது மாநிலத்தில் உள்ள பழங்குடியினருக்கு இழைக்கப்படும் அநீதியாகும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.