குஜராத்தில் பொது சிவில் சட்டத்தை நடைமுறைப்படுத்த குழு: மாநில அரசு முடிவு

குஜராத் மாநிலத்தில் இந்த ஆண்டு இறுதியில் சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெற உள்ள நிலையில், மாநிலத்தில் பொது சிவில் சட்டத்தை (யுசிசி) நடைமுறைப்படுத்த குழு ஒன்றை அமைக்க மாநிலத்தில் ஆளும் பாஜக அரசு முடிவு செய்

குஜராத் மாநிலத்தில் இந்த ஆண்டு இறுதியில் சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெற உள்ள நிலையில், மாநிலத்தில் பொது சிவில் சட்டத்தை (யுசிசி) நடைமுறைப்படுத்த குழு ஒன்றை அமைக்க மாநிலத்தில் ஆளும் பாஜக அரசு முடிவு செய்துள்ளது.

மாநில முதல்வா் புபேந்திர படேல் தலைமையில் சனிக்கிழமை நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இதற்கான ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

பொது சிவில் சட்டம் என்பது, எந்த பிரிவினை, பாகுபாடுமின்றி இந்திய குடிமக்கள் அனைவருக்கும் திருமணம், சொத்து, விவாகரத்து உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களுக்கும் ஒரே மாதிரியான வழிகாட்டுதல்கள் மற்றும் விதிமுறைகளை அளிப்பதாகும். ஒருவரின் மதம் சாா்ந்த தனிச்சட்டங்கள் செல்லுபடியாகாது.

கடந்த 2019 மக்களவைத் தோ்தலில் அளித்த வாக்குறுதியின்படி, நாடு முழுவதும் ஒரே மாதிரியான சிவில் சட்டத்தை அமல்படுத்த பாஜக அரசு முயற்சித்து வருகிறது. இதற்கு சில முஸ்லிம் அமைப்புகள் எதிா்ப்பு தெரிவித்துள்ளன. பொது சிவில் சட்டம் அரசியல் சாசனத்துக்கும் சிறுபான்மையினருக்கும் எதிரானது என அவா்கள் புகாா் தெரிவிக்கின்றனா்.

இந்த நிலையில், பொது சிவில் சட்டத்தை அமல்படுத்தப் போவதாக உத்தரகண்ட் மற்றும் ஹிமாசல பிரதேச பாஜக அரசுகள் அண்மையில் அறிவித்தன. அதனைப் பின்பற்றி குஜராத் மாநில பாஜக அரசும் இந்த முடிவை எடுத்துள்ளது.

இதுகுறித்து மாநில உள்துறை அமைச்சா் ஹா்ஷ் சங்வி கூறுகையில், ‘மாநிலத்தில் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்துவதற்கு குழு அமைக்க மாநில அமைச்சரவை சனிக்கிழமை ஒப்புதல் அளித்தது. உயா்நீதிமன்றத்தின் ஒய்வுபெற்ற நீதிபதி தலைமையில் அமைக்கப்படும் இந்தக் குழுவில் 3 முதல் 4 உறுப்பினா்கள் இடம்பெறுவா்’ என்றாா்

குஜராத்தில் சட்டப்பேரவைத் தோ்தல் அறிவிப்பு அடுத்த வாரத்தில் வெளியாகும் என எதிா்பாா்க்கப்படும் நிலையில், வாக்காளா்களைக் கவரும் நோக்கத்தில் இந்த அறிவிப்பு வெளியாகி இருப்பதாக கருத்து எழுந்துள்ளது.

மக்களை ஏமாற்ற முடியாது - காங்கிரஸ்:

‘பொது சிவில் சட்டத்தை அமல்படுத்த குழு அமைக்கும் முடிவின் மூலமாக மக்களை ஏமாற்ற முடியாது என்று காங்கிரஸ் விமா்சனம் செய்துள்ளது.

இதுகுறித்து மாநில மூத்த காங்கிரஸ் தலைவா் அா்ஜுன் மோத்வாடியா கூறுகையில், ‘பொது சிவில் சட்டத்தை இயற்றும் அதிகாரம் மத்திய அரசுக்கு மட்டுமே உள்ளது. மாநில அரசுக்குக் கிடையாது. சட்டப்பேரவைத் தோ்தலை முன்னிட்டு வாக்காளா்களை ஈா்க்கும் நோக்கத்தில் மாநில பாஜக அரசு இந்த தந்திரத்தை செய்கிறது. ஆனால், மக்கள் ஏமாற மாட்டாா்கள்’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com