காங்கிரஸ் தலைவர் போட்டியிலிருந்து விலகினார் கெலாட்

ராஜஸ்தானில் அரசியல் குழப்பம் நீடித்து வருவதால் காங்கிரஸ் தலைவர் போட்டியில் இருந்து அசோக் கெலாட் விலகுவதாக அறிவித்துள்ளார்.
ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்
ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்

ராஜஸ்தானில் அரசியல் குழப்பம் நீடித்து வருவதால் காங்கிரஸ் தலைவர் போட்டியில் இருந்து அசோக் கெலாட் விலகுவதாக அறிவித்துள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் தலைவரைத் தேர்வு செய்ய வருகிற அக்டோபர் 17-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. காங்கிரஸ் கட்சியில் சுமார் 25 ஆண்டுகளுக்குப் பிறகு நேரு குடும்பத்தைச் சாராத ஒருவர் கட்சியின் தலைமைப் பொறுப்பை ஏற்க உள்ளார். தாங்கள் தலைவராகப் போவதில்லை என சோனியா காந்தியும் ராகுல் காந்தியும் உறுதியுடன் இருக்கின்றனர்.

இதனால் காங்கிரஸ் தலைவர் போட்டிக்கு அசோக் கெலாட், சசி தரூர் ஆகிய இருவரும் போட்டியிடுவது உறுதியாகி இருந்தது. தேர்தலில் போட்டியிடுவதாக அசோக் கெலாட் அதிகாரபூர்வமாக அறிவித்திருந்தார்.

இதற்கிடையே, காங்கிரஸ் தலைவர் பதவிக்கு அசோக் கெலாட் போட்டியிட்டால் கட்சியின் விதியான 'ஒருவருக்கு ஒரு பதவி' என்ற அடிப்படையில் அவர் முதல்வர் பதவியில் இருந்து விலகும் சூழல் ஏற்பட்டது.

கெலாட் விலகும் பட்சத்தில் துணை முதல்வராக உள்ள சச்சின் பைலட், முதல்வராக தேர்வு செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், கெலாட் ஆதரவாளர்கள் சச்சின் பைலட்டுக்கு ஆதரவு தெரிவிக்க தொடர்ந்து மறுத்து வருகின்றனர். கட்சியின் மேலிடம் நடத்திய பேச்சுவார்த்தையிலும் எந்த முன்னேற்றமும் காணப்படவில்லை.

இந்நிலையில், தில்லியில் காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி, கே.சி.வேணுகோபால் உள்ளிட்ட மூத்த நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்திய அசோக் கெலாட் தேர்தலில் இருந்து விலகுவதாக இன்று அறிவித்துள்ளார்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் கெலாட் பேசியதாவது:

இரண்டு நாள்களுக்கு முன்பு நடந்த சம்பவம் எங்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. நான் முதல்வராக தொடர வேண்டும் என்பதற்காகதான் இவை அனைத்தும் நடந்ததாக செய்திகள் வெளியாகியுள்ளது. நான் சோனியா காந்தியிடம் மன்னிப்பு கோரினேன்.

கொச்சியில் ராகுல் காந்தியை சந்தித்து தலைவர் தேர்தலில் போட்டியிட வலியுறுத்தினேன். அவர் போட்டியிட மறுப்பு தெரிவித்ததால், நான் போட்டியிடுவதாக் தெரிவித்தேன். ஆனால், ராஜஸ்தானில் தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் சூழலில், நான் போட்டியிட போவதில்லை என முடிவெடுத்துள்ளேன் என்றார்.

திக் விஜய் சிங்
திக் விஜய் சிங்

இதற்கிடையே, காங்கிரஸ் தலைவர் தேர்தலில் போட்டியிடுவதாக இன்று அறிவித்த மூத்த தலைவர் திக் விஜய் சிங் வேட்புமனு படிவத்தை பெற்றுக் கொண்டார். 

ஆனால், வேட்புமனுத் தாக்கல் செய்ய இன்னும் ஒருநாள் மட்டுமே உள்ள நிலையில், இதுவரை யாரும் வேட்புமனுத் தாக்கல் செய்யவில்லை. யாரெல்லாம் தலைவர் பதவிக்கு போட்டியிடுகிறார்கள் என்பது நாளை மாலைக்குள் தெரியவரும். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com