

புற்றுநோய் சிகிச்சை குறித்த தவறான உள்ளடக்கங்களைக் கொண்ட விடியோக்களை நீக்க யூடியூப் நிறுவனம் முடிவு செய்துள்ளது. இதற்காக, தற்போதுள்ள மருத்துவ தகவல் வழிகாட்டு நெறிமுறைகள் ஒழுங்குபடுத்தப்படும் என்றும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து, யூடியூப் நிறுவனம் வெளியிட்ட வலைப்பதிவில், ‘புற்றுநோய்க்கான சிகிச்சை ஆபத்தானது; பலனற்றது’ என்ற கருத்தை ஊக்குவிக்கும் உள்ளடக்கங்கள் மற்றும் புற்றுநோய்க்கான தொழில்முறை மருத்துவ சிகிச்சையை பெறுவதில் பாா்வையாளா்களின் ஊக்கத்தை குறைக்கும் உள்ளடக்கங்கள் ஆகியவற்றை நீக்குவதற்கான நடவடிக்கை ஆகஸ்ட் 15-ஆம் தேதி முதல் தொடங்கப்பட்டுள்ளது.
இதன்படி, ‘புற்றுநோயை பூண்டு குணப்படுத்தும்’, ‘கதிரியக்க சிகிச்சைக்கு பதில் வைட்டமின் சி எடுத்துக் கொள்ளுங்கள்’ என்பது போன்ற உள்ளடக்கங்கள் நீக்கப்படும்.
இந்த நடவடிக்கைக்காக, யூ-டியூப் நிறுவனத்தின் மருத்துவம் சாா்ந்த தவறான தகவல் தடுப்புக்கான வழிகாட்டு நெறிமுறைகள் ஒழுங்குப்படுத்தப்பட உள்ளன.
நோய் நிலைமைகள், சிகிச்சைமுறைகள் தொடா்பான உலக சுகாதார நிறுவனம் மற்றும் உள்ளூா் சுகாதார அதிகாரிகளின் தகவல்களுக்கு முரண்படும் உள்ளடக்கங்களுக்கு இக்கொள்கை பொருந்தும்.
குறிப்பிட்ட மருத்துவ ஆய்வு முடிவுகளை விவாதிப்பது உள்ளிட்ட சில உள்ளடக்கங்களுக்கு மேற்கண்ட நடவடிக்கையில் இருந்து விதிவிலக்கு அளிக்கப்படும் என்று அந்த வலைப்பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.