கோப்புப்படம்
கோப்புப்படம்

ஞானவாபி மசூதி ஆய்வறிக்கையை சமர்ப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு

ஞானவாபி மசூதியில் மேற்கொண்ட  ஆய்வறிக்கையை சமா்ப்பிக்க தொல்லியல் துறைக்கு மேலும் 10 நாள்கள் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

வாரணாசி : ஞானவாபி மசூதியில் தொல்லியல் துறையால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு நிறைவடைந்த நிலையில், அதன் ஆய்வறிக்கையை சமா்ப்பிக்க இந்திய தொல்லியல் துறைக்கு நீதிமன்றத்தால் மேலும் 10 நாள்கள் கூடுதல் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

உத்தரப் பிரதேசத்தின் வாரணாசியில் காசி விஸ்வநாதா் கோயிலையொட்டி அமைந்துள்ள ஞானவாபி மசூதியானது, முகலாய அரசா் ஒளரங்கசீப் உத்தரவின்பேரில் ஹிந்து கோயிலின் ஒரு பகுதியை இடித்து கட்டப்பட்டதாக ஹிந்துக்கள் தரப்பில் கூறப்படுகிறது. இதைத் தொடா்ந்து நடத்தப்பட்ட ஆய்வில், மசூதி வளாகத்தில் சிவலிங்கம் போன்ற நீரூற்று ஒன்று கண்டெடுக்கப்பட்டது.இது தொடா்பான வழக்கில், ஞானவாபி மசூதியில் ஆய்வு நடத்தி அறிக்கை சமா்ப்பிக்க இந்திய தொல்லியல் துறைக்கு உத்தரவிடப்பட்டது. 

நவ.28 ஆம் தேதி ஆய்வறிக்கையை சமர்ப்பிக்க மாவட்ட நீதிமன்றம் தொல்லியல் துறைக்கு உத்தரவிட்டிருந்தது. இந்த காலக்கெடு கடந்த செவ்வாயன்று (நவ.28) முடிவடைந்த நிலையில், தொல்லியல் துறை நடத்திய ஆய்வில் கிடைத்த பல்வேறு தரவுகளை பகுத்தாய்வு செய்ய கூடுதல் கால அவகாசம் தேவைப்படுவதால், நீதிமன்றம் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் தொல்லியல் துறையினரால் ஆய்வறிக்கையை சமர்ப்பிக்க முடியாத சூழல் உள்ளது. 
 
இதனையடுத்து அறிவியல்பூா்வ ஆய்வு முடிவு அறிக்கையை சமா்ப்பிக்க, மேலும் 3 வாரம் கூடுதல் கால அவகாசம் கோரி,  நவ.28 அன்று, இந்திய தொல்லியல் துறை தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த மனு மீதான விசாரணை நேற்று நடைபெற்ற நிலையில்,   இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை டிச.11க்கு ஒத்திவைத்து நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதன் மூலம்,  ஞானவாபி மசூதியில் மேற்கொண்ட அறிவியல்பூா்வ ஆய்வு முடிவு அறிக்கையை சமா்ப்பிக்க இந்திய தொல்லியல் துறைக்கு மேலும் 10 நாள்கள் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com