தெலங்கானா: கேசிஆர் மற்றும் ரேவந்த் ரெட்டி இருவரையும் தோற்கடித்த பாஜக வேட்பாளர்!

தெலங்கானா சட்டப்பேரவைத் தேர்தலில் பிஆர்எஸ் தலைவர் கே.சந்திரசேகர ராவ் மற்றும் காங்கிரஸ் தலைவர் ரேவந்த் ரெட்டி இருவரையும் பாஜக வேட்பாளர் தோற்கடித்துள்ளார்.
கேசிஆர், கே.வெங்கட ரமண ரெட்டி, ரேவந்த் ரெட்டி
கேசிஆர், கே.வெங்கட ரமண ரெட்டி, ரேவந்த் ரெட்டி

தெலங்கானா சட்டப்பேரவைத் தேர்தலில் பிஆர்எஸ் தலைவர் கே.சந்திரசேகர ராவ் மற்றும் காங்கிரஸ் தலைவர் ரேவந்த் ரெட்டி இருவரையும் பாஜக வேட்பாளர் தோற்கடித்துள்ளார்.

ராஜஸ்தான், சத்தீஸ்கர், மத்திய பிரதேசம், தெலங்கானா மற்றும் மிஸோரம் ஆகிய ஐந்து மாநில சட்டப்பேரவைகளுக்கான தேர்தல் சமீபத்தில் நடைபெற்றது. இன்னும் சில மாதங்களில் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அதற்கான முன்னோட்டமாக இந்த ஐந்து மாநிலத் தேர்தல்கள் பார்க்கப்படுகின்றன. 

இவற்றில் மிஸோரம் மாநிலத்திற்கு மட்டும் வாக்கு எண்ணிக்கை நாளை (டிச.4) நடைபெறுகிறது. மற்ற நான்கு மாநில தேர்தல்களில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று (டிச. 3) காலை முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது.

இதில் 119 தொகுதிகளைக் கொண்ட தெலங்கானாவில் பிஆர்எஸ் கட்சியின் தலைவர் கே.சந்திரசேகர ராவ் காமாரெட்டி மற்றும் கஜ்வால் ஆகிய இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டார்.

அதேபோல தெலங்கானா மாநில காங்கிரஸ் தலைவர் ரேவந்த் ரெட்டியும் காமாரெட்டி மற்றும் கோடங்க்  இருவரும் காமாரெட்டி மற்றும் கோடாங்கல் ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிட்டார்.

காங்கிரஸ் மற்றும் பிஆர்எஸ் கட்சிகளுக்கிடையே கடும் போட்டி நிலவிய நிலையில், அக்கட்சிகளின் தலைவர்கள் இருவரும் காமாரெட்டி தொகுதியில் போட்டியிட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.

ஞாயிற்றுக்கிழமை வாக்கு எண்ணிக்கை தொடங்கி நண்பகல் வரை ரேவந்த் ரெட்டி முன்னிலையில் இருந்துவந்தார். சந்திரசேகர ராவ் சொற்ப வாக்குகள் வித்தியாசத்தில் இரண்டாமிடத்தில் இருந்து வந்தார்.

இந்நிலையில் திடீரென அவர்கள் இருவரையும் முந்தி பாஜக வேட்பாளர் கே.வெங்கட ரமண ரெட்டி முன்னிலை பெற்றார். தொடர்ந்து முன்னிலை பெற்றுவந்த அவர் 20 சுற்றுகளின் முடிவில் 66,652 வாக்குகள் பெற்று 6,741 வாக்குகள் வித்தியாசத்தில் கே.சந்திரசேகர ராவையும், 11,736 வாக்குகள் வித்தியாசத்தில் ரேவந்த் ரெட்டியையும் வீழ்த்தி வெற்றி பெற்றார்.

பிஆர்எஸ் கட்சியின் தலைவர் கே.சந்திரசேகர ராவ் இரண்டாமிடமும், காங்கிரஸ் தலைவர் ரேவந்த் ரெட்டி மூன்றாமிடமும் பெற்று தோல்வியடைந்தனர். 

ஆனால் கேசிஆர் போட்டியிட்ட மற்றொரு தொகுதியான கஜ்வால் தொகுதியிலும், ரேவந்த் ரெட்டி போட்டியிட்ட மற்றொரு தொகுதியான கோடாங்கல் தொகுதியிலும் வெற்றி பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com