மாநிலக் கட்சிகளின் தலைவர்களை புறக்கணித்ததால் காங். தோல்வி: ஜேடியு எம்.பி. விமர்சனம்!

'இந்தியா' கூட்டணி கட்சியினர் இடையே முறையான தகவல் தொடர்பில்லை என்று ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் எம்.பி. சுனில் குமார் பிண்டூ கூறியுள்ளார்.
மாநிலக் கட்சிகளின் தலைவர்களை புறக்கணித்ததால் காங். தோல்வி: ஜேடியு எம்.பி. விமர்சனம்!

'இந்தியா' கூட்டணி கட்சியினர் இடையே முறையான தகவல் தொடர்பில்லை என்று ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் எம்.பி. சுனில் குமார் பிண்டூ கூறியுள்ளார்.

ஐந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் வெளியானதைத் தொடர்ந்து இந்தியா கூட்டணிக் கட்சியினரின் கூட்டம் நடைபெற உள்ள நிலையில் ஐக்கிய ஜனதா தளத்தைச் சேர்ந்த சுனில் குமார் கூறியதாவது, “யாருடைய பலத்தில் மாநிலங்களில் போட்டியிடுகிறதோ அவர்களையே காங்கிரஸ் புறக்கணிக்கிறது.

காங்கிரஸ் கட்சியானது பிகாரில் ஐக்கிய ஜனதா தளம் மற்றும் ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியின் பலத்தில் போட்டியிடுகிறது. உத்தரப் பிரதேசத்தில் சமாஜ்வாடி கட்சி, ஜார்க்கண்டில் ஹேமந்த் சோரனின் கட்சி ஆகியவற்றின் பலத்தில் போட்டியிடுகிறது. அவை அனைத்தையும் காங்கிரஸ் கட்சி புறக்கணிக்கிறது.

நாளை (டிசம்பர் 6) நடைபெறும் கூட்டத்தில் சில முக்கியமான முடிவுகள் எடுக்கப்பட்டால் மட்டுமே 2024 மக்களவைத் தேர்தலில் இந்தியா கூட்டணிக்கு வெல்வதற்கு வாய்ப்பு இருக்கும். 

இந்தியா கூட்டணி கட்சிகளிடையே மிகப்பெரிய தகவல் தொடர்பு இடைவெளி உள்ளது. பெரிய தலைவர்களின் கருத்துகள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படவில்லை.

பிகார் முதல்வரும், ஜேடியு தலைவருமான நிதிஷ் குமார் அனைத்து எதிர்க்கட்சி தலைவர்களையும் ஒரே மேடைக்கு கொண்டுவரும் வேலையை செய்தார். ஆனால் அதன்பிறகு காங்கிரஸ் மேலாதிக்கத்துடன் செயல்பட்டது. பிராந்தியத் தலைவர்களை புறக்கணித்ததன் விளைவாகவே காங்கிரஸ் சட்டமன்றத் தேர்தலில் தோல்வியை சந்தித்துள்ளது.” என்று தெரிவித்தார்.

இதற்கிடையில் நாளை நடைபெறுவதாக அறிவிக்கப்பட்ட கூட்டத்தில் பல்வேறு கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்க முடியாததால் கூட்டத்தை டிசம்பர் மூன்றாவது வாரத்திற்கு ஒத்திவைப்பதாக முடிவு செய்யப்பட்டுள்ளது.

நடந்து முடிந்த ஐந்து மாநிலத் தேர்தல்களில் ராஜஸ்தான், சத்தீஸ்கர் மற்றும் மத்தியப் பிரதேசம் ஆகிய மூன்று மாநிலங்களில் பாஜக வெற்றி பெற்றது. மிசோரமில் சோரம் மக்கள் இயக்கம் வெற்றியடைந்தது. தெலங்கானா மாநிலத்தில் மட்டுமே காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com