திமுக எம்.பி.யின் பேச்சை இந்தியா கூட்டணியினர் ஏற்கின்றனரா?: பியூஷ் கோயல் கேள்வி

திமுக மக்களவை உறுப்பினர் செந்தில் குமாரின் பேச்சை 'இந்தியா' கூட்டணி கட்சியினர் ஏற்கின்றனரா என்று மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் கேள்வி எழுப்பினார்.
திமுக எம்.பி.யின் பேச்சை இந்தியா கூட்டணியினர் ஏற்கின்றனரா?: பியூஷ் கோயல் கேள்வி

திமுக மக்களவை உறுப்பினர் செந்தில் குமாரின் பேச்சை 'இந்தியா' கூட்டணி கட்சியினர் ஏற்கின்றனரா என்று மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் கேள்வி எழுப்பினார்.

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் திங்கள்கிழமை தொடங்கி நடைபெற்று வருகிறது.  ஐந்து மாநில சட்டப்பேரவைத் தோ்தல் முடிவுகளைத் தொடா்ந்து நடைபெற்று வரும் இந்த கூட்டத்தொடரில் பல்வேறு முக்கிய விவகாரங்களை முன்வைத்து எதிர்க்கட்சிகள் பேசி வருகின்றன.

அந்தவகையில் நாடாளுமன்ற மக்களவையில் பேசிய திமுக எம்.பி. செந்தில் குமார் சமீபத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தல்களில் பாஜக வெற்றிபெற்ற மாநிலங்களைக் குறிப்பிட்டு பேசியபோது பயன்படுத்திய வார்த்தை சர்ச்சையை கிளப்பியது.

இதனையடுத்து "எந்த உள்நோக்கத்துடனும் அந்த சொல்லை பயன்படுத்தவில்லை, அது தவறான பொருள் தருவது என்பதால் வெளிப்படையாக மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன்." என்று திமுக எம்.பி. செந்தில்குமார் தெரிவித்தார். 

இந்நிலையில் நாடாளுமன்றத்தில் இன்று (டிச.6) பேசிய மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், “இந்தியாவை வடக்கு, தெற்கு என்ற அடிப்படையில் பிரிக்காதீர்கள். பிரதமர் மோடி மக்களை ஒன்றிணைக்க பாடுபட்டு வருகிறார். ஆனால் எதிர்க்கட்சிகள் நாட்டை பிரிப்பதற்கு முயற்சிக்கின்றன. அவர்களில் சிலர் வட இந்தியா, தென்னிந்தியா என்று பேசுகின்றனர். இவ்வாறு நாட்டைப் பிரித்துப் பேசுவதை தயவுசெய்து நிறுத்துங்கள்.” என்று கூறினார்.

மேலும் பேசிய அவர், “பாஜக வென்ற இந்தி மாநிலங்களைக் குறிப்பிட்டு திமுக எம்.பி. செந்தில் குமார் பேசியதை இந்தியா கூட்டணியினர் ஏற்கின்றனரா?” என்று கேள்வி எழுப்பினார்.

டிசம்பர் 4-ஆம் தேதி தொடங்கிய நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் டிச.22-ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com