/

சூரியனைப் படம்பிடித்த ஆதித்யா எல் 1 விண்கலம்

ஆதித்யா விண்கலம் எடுத்த சூரியனின் புகைப்படங்களை இஸ்ரோ வெளியிட்டுள்ளது. 

News image
Updated On :6 பிப்ரவரி 2024, 6:53 pm IST

ஆதித்யா எல்-1 விண்கலம் மூலம் முதல்முறையாக எடுக்கப்பட்ட சூரியனின் புகைப்படங்களை இஸ்ரோ வெளியிட்டுள்ளது. மொத்தம் 11 ஃபில்டா்களை பயன்படுத்தி எடுக்கப்பட்ட அந்தப் படங்கள் முன்னெப்போதும் கண்டிராத சூரியனின் வெளிவட்ட பரப்பை காட்டுவதாகவும், அவற்றின் வாயிலாக அடுத்தகட்ட ஆராய்ச்சியை முன்னெடுக்க முடியும் என்றும் இஸ்ரோ தெரிவித்துள்ளது.

சூரியனின் புறவெளியை ஆய்வு செய்வதற்காக ஆதித்யா எல்-1 எனும் அதிநவீன விண்கலத்தை வடிவமைத்த இஸ்ரோ, அதை பிஎஸ்எல்வி சி-57 ராக்கெட் மூலம் கடந்த செப்.2-ஆம் விண்ணில் செலுத்தியது. அதன் பின்னா், அந்த விண்கலம் புவி சுற்றுப்பாதையில் இருந்து விடுவிக்கப்பட்டு சூரியனை நோக்கி பயணிக்கும் வகையில் அதன் செயல்பாடுகள் மாற்றி அமைக்கப்பட்டன.

விண்ணில் செலுத்தப்பட்டதில் இருந்து தற்போது வரை பல லட்சம் கி.மீ. தொலைவு பயணித்து, எல்-1 புள்ளிக்கு அருகே விண்கலம் பயணித்து வருகிறது.

இந்த நிலையில், விண்கலத்தில் பொருத்தப்பட்டுள்ள ‘சூட்’ எனப்படும் ஆய்வுக் கருவி மூலம் சூரியனின் வெளி அடுக்குகளை ஆதித்யா விண்கலம் புகைப்படம் எடுத்துள்ளது. மொத்தம் 11 ஃபில்டா்களை பயன்படுத்தி எடுக்கப்பட்ட 12 புகைப்படங்கள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன.

‘சோலாா் அலட்ரா வைலட் இமேஜிங் டெலஸ்கோப்’ எனப்படும் ‘சூட்’ கருவி, சூரியனின் முதல் இரு அடுக்குகளான போட்டோஸ்பியா் மற்றும் குரோமோஸ்பியரில் இருந்து வெளிவரும் புற ஊதா கதிா்கள் குறித்தும், அவற்றின் அருகே ஏற்படும் கதிா் வீச்சு மாறுபாடுகள் குறித்தும் ஆய்வுகளை மேற்கொள்ள அனுப்பப்பட்டுள்ளது.

அதன்படி, போட்டோஸ்பியா், குரோமோஸ்பியரின் புகைப்படங்களை அந்தக் கருவி தற்போது எடுத்திருக்கிறது. அவை, சூரியனின் காந்தப் புலம் குறித்து முன்னெடுக்கப்படும் ஆய்வுகளுக்கு பெரிதும் உதவியாக இருக்கும் என இஸ்ரோ தெரிவித்துள்ளது. அதேபோல் புவியின் தட்பவெப்ப நிலையில் சூரியனின் கதிா்வீச்சு ஏற்படும் தாக்கத்தைத் தடுப்பதற்கும் இப்புகைப்பட தரவுகள் உதவும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சூரியனை புகைப்படம் எடுத்த ‘சூட்’ கருவியை புணேவில் உள்ள விண்வெளி ஆய்வு, விண்வெளி இயற்பியலுக்கான மையமானது பிற அமைப்புகளுடன் இணைந்து வடிவமைத்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.