கொளத்தூர் தொகுதியில் முதல்வர் ஸ்டாலின் மீண்டும் போட்டி சேப்பாக்கம் தொகுதியில் துணை முதல்வர் உதயநிதி மீண்டும் போட்டி கோவை தெற்கு தொகுதியில் செந்தில் பாலாஜி போட்டி திமுக கூட்டணியில் காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகள் அறிவிப்பு! போடி தொகுதியில் திமுக சார்பில் ஓபிஎஸ் போட்டி பிரசாரத்துக்கு அனுமதி மறுப்பு! தேர்தல் அதிகாரியிடம் விஜய் மனு!!அமமுக வேட்பாளர் பட்டியல் வெளியானது! முன்னாள் அமைச்சர்களுக்கு வாய்ப்பு
/

குடியரசுத் தலைவருடன் திமுக குழு இன்று சந்திப்பு: பேரவையில் ஆளுநர் உரை சம்பவம்

திமுக நாடாளுமன்ற குழுத் தலைவா் டி.ஆா்.பாலு தலைமையிலான நான்கு போ் கொண்ட குழு குடியரசுத் தலைவா் திரௌபதி முா்முவை வியாழக்கிழமை காலை 11.45 மணியளவில் சந்திக்க உள்ளது.

News image
Updated On :11 ஜனவரி 2023, 9:10 pm

 நமது நிருபர்

நாடாளுமன்ற திமுக குழுத் தலைவர் டி.ஆர்.பாலு தலைமையிலான நான்கு பேர் கொண்ட குழு குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவை வியாழக்கிழமை (ஜன.12) காலை 11.45 மணியளவில் சந்திக்க உள்ளது.
 தமிழக சட்டப்பேரவையில் கடந்த திங்கள்கிழமை ஆளுநர் உரையின்போது நடந்த நிகழ்வு தொடர்பாக குடியரசுத் தலைவரிடம் திமுக குழு விளக்கம் அளிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது.
 திமுகவின் பொருளாளரும், நாடாளுமன்ற திமுக குழு தலைவருமான டி.ஆர்.பாலு தலைமையிலான இந்தக் குழுவில், தமிழக சட்டத் துறை அமைச்சர் எஸ்.ரகுபதி, மக்களவை உறுப்பினரும் திமுக துணைப் பொதுச் செயலருமான ஆ.ராசா, மாநிலங்களவை திமுக உறுப்பினர் பி.வில்சன் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
 தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் கடந்த திங்கள்கிழமை தொடங்கியது. ஆண்டின் முதல் கூட்டம் என்பதால் ஆளுநர் உரையுடன் கூட்டம் தொடங்கியது. ஆளுநர் உரையைத் தொடங்கியதும் திமுகவின் கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்த உறுப்பினர்கள் கடந்த காலங்களில் ஆளுநரின் செயல்பாடுகளுக்கு எதிராக முழக்கம் எழுப்பிவிட்டு வெளிநடப்பு செய்தனர்.
 தொடர்ந்து ஆளுநர் ஆர்.என்.ரவி உரையாற்றியபோது, அச்சிடப்பட்ட உரையில் இடம்பெற்றிருந்த திராவிட மாடல் அரசு உள்ளிட்ட கருத்துகளை வாசிக்காமல் தவிர்த்தார்.
 இதையடுத்து, அதற்கு எதிர்ப்பு தெரிவித்து, பேரவையில் உள்ள உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டுள்ள ஆங்கில உரை மற்றும் பேரவைத் தலைவரால் வாசிக்கப்பட்ட தமிழ் உரை மட்டுமே அவைக்குறிப்பில் இடம்பெற வேண்டும் என்ற தீர்மானத்தை முதல்வர் ஸ்டாலின் முன்மொழிந்தார்.
 உடனே, கூட்டம் நிறைவடையும் முன்னரே அவையிலிருந்து ஆளுநர் வெளியேறினார். முதல்வர் கொண்டுவந்த தீர்மானம் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது.
 தமிழக பேரவை வரலாற்றிலேயே முதல்முறையாக நடைபெற்ற இந்த நிகழ்வு தொடர்பாக பல்வேறு அரசியல் கட்சிகள் கருத்து தெரிவித்து வருகின்றன.
 ஆளுநர் உரையின்போது நடைபெற்றது என்ன என்பது தொடர்பாக தமிழக அரசு சார்பில் செவ்வாய்க்கிழமை விளக்கம் அளிக்கப்பட்டது. அதில், ஆளுநர் உரைக்கு ஒப்புதல் பெறப்பட்டது எப்போது என்பது தொடர்பான விளக்கங்கள் இடம்பெற்றிருந்தன.
 இந்நிலையில், திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவர் டி.ஆர். பாலு, செவ்வாய்க்கிழமை தில்லிக்கு வந்து குடியரசுத் தலைவரை சந்திக்க நேரம் ஒதுக்க அனுமதி கேட்டார். தமிழக சட்ட அமைச்சரும் தில்லி வந்திருந்தார்.
 இந்தச் சந்திப்புக்கு குடியரசுத் தலைவர் மாளிகை அனுமதி அளித்துள்ளது. இதையொட்டி, டி.ஆர்.பாலு தலைமையிலான குழுவினர் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை வியாழக்கிழமை சந்திக்கின்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.