தேசியவாத காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் பாகுபலி போஸ்டர்: யார் அந்த கட்டப்பா?

தேசியவாத காங்கிரஸ் கட்சிக்குள் பிரிவினை ஏற்பட்டுள்ள நிலையில், கட்சி அலுவலகத்தில் பாகுபலி போஸ்டர் வைக்கப்பட்டுள்ளது.
தேசியவாத காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் பாகுபலி போஸ்டர்: யார் அந்த கட்டப்பா?

தேசியவாத காங்கிரஸ் கட்சிக்குள் பிரிவினை ஏற்பட்டுள்ள நிலையில், கட்சி அலுவலகத்தில் பாகுபலி போஸ்டர் வைக்கப்பட்டுள்ளது.

தேசியவாத காங்கிரஸ் கட்சியினர், கட்சிக்கு உரிமை கொண்டாடி, தேர்தல் ஆணையத்தை அணுகியிருக்கும் நிலையில், கட்சியின் மாணவர் அணியினர், தில்லியில் உள்ள கட்சி அலுவலக வளாகத்தில், கட்சியின் நிர்வாகி, சரத் பவாருக்கு எதிராக துரோகச் செயலில் ஈடுபட்டதாக, அஜீத் பவாரை கட்டப்பா என்று சித்தரிப்பது போல பாகுபலி போஸ்டரை வைத்துள்ளனர்.

அமரீந்தர் பாகுபலியாக சித்தரிக்கப்பட்டிருக்கும் சரத் பவாரின் முதுகில் அஜீத் பவார் குத்திவிட்டதாகவும், துரோகி என்று ஹேஷ்டேக்குடன் இணைத்தும் அந்த போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.

தேசியவாத காங்கிரஸ் கட்சியானது இருபிரிவாகச் செயல்பட்டு வரும் நிலையில், இருதரப்பும் பரஸ்பரம் நிா்வாகிகளை நியமித்தும் நீக்கியும் வருவதால் அக்கட்சியில் தொடா்ந்து குழப்பம் நீடித்து வருகிறது.

சரத் பவாா் தலைமையில் இயங்கி வந்த தேசியவாத காங்கிரஸ் கட்சியானது, அக்கட்சியின் மூத்த தலைவா் அஜீத் பவாா் தலைமையில் பிளவுபட்டுள்ளது. அஜீத் பவாா் பாஜக-சிவசேனை அணிக்கு மாறி மகாராஷ்டிர துணை முதல்வராக ஞாயிற்றுக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா். அந்தக் கட்சியின் 8 எம்எல்ஏ-க்களும் மாநில அமைச்சா்களாகப் பொறுப்பேற்றுக் கொண்டனா்.

தேசிய அளவில் இந்த அரசியல் நகா்வு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அஜீத் பவாா் தலைமையிலான எம்எல்ஏ-க்கள் பாஜக-சிவசேனை கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்துள்ளனா்.

இதனால், கட்சியை வலுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை சரத் பவாா் முன்னெடுத்துள்ளாா். அதன் ஒரு பகுதியாக, கட்சியின் மூத்த தலைவா்களான பிரஃபுல் படேல், சுனில் தத்காரே ஆகியோரைக் கட்சியில் இருந்து நீக்குவதாக சரத் பவாா் திங்கள்கிழமை அறிவித்தாா். அவா்கள் கட்சிக்கு விரோதமான நடவடிக்கைகளில் ஈடுபட்டதால், கட்சியின் தேசியத் தலைவா் என்ற முறையில் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாக சரத் பவாா் தெரிவித்துள்ளாா்.

அவா்கள் இருவரும் எம்.பி.க்களாக இருக்கும் நிலையில், அந்தப் பதவியில் இருந்து அவா்களைத் தகுதிநீக்கம் செய்வதற்கான நடவடிக்கைகளைக் கட்சி மேற்கொண்டு வருவதாகவும் சரத் பவாா் தெரிவித்துள்ளாா்.

புதிய நிா்வாகிகள்: அதே சமயத்தில், தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கான புதிய நிா்வாகிகளை பிரஃபுல் படேல் அறிவித்துள்ளாா். அதன்படி, சுனில் தத்காரே கட்சியின் மாநிலத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளாா். கட்சியின் மாநிலத் தலைவராக ஏற்கெனவே செயல்பட்டு வரும் ஜெயந்த் பாட்டீலிடம் இது தொடா்பாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும், அந்தப் பொறுப்பை தத்காரேவிடம் ஒப்படைக்கும்படி வலியுறுத்தியுள்ளதாகவும் பிரஃபுல் படேல் தெரிவித்தாா்.

கட்சியின் சட்டப்பேரவைத் தலைவராக அஜீத் பவாா் செயல்படுவாா் என்றும் பிரஃபுல் படேல் தெரிவித்துள்ளாா். குரு பூா்ணிமா கொண்டாடப்படும் நாளில், தங்களை சரத் பவாா் வாழ்த்துவாா் என்றும் அவா் செய்தியாளா்களிடம் தெரிவித்தாா். மாநில சட்டப்பேரவையில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் கொறடாவாக அனில் பாட்டீல் நீடிப்பாா் என்றும் அவா் தெரிவித்துள்ளாா்.

தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மாநில மகளிரணித் தலைவராக ரூபாலி சகான்கரும், செய்தித் தொடா்பாளா்களாக அமோல் மித்காரி, ஆனந்த் பரான்பே ஆகியோரும், மாநில இளைஞரணித் தலைவராக சூரஜ் சவாணும் செயல்படுவாா்கள் என பிரஃபுல் படேல் தெரிவித்துள்ளாா்.

செய்தியாளா்களிடம் பேசிய அஜீத் பவாா், ‘கட்சியின் நலனைக் கருத்தில்கொண்டே நாங்கள் செயல்பட்டு வருகிறோம். கட்சியை மேலும் வலுப்படுத்துவதே எங்கள் நோக்கம். சரத் பவாரே தேசியவாத காங்கிரஸின் தேசியத் தலைவா். அதில் எந்த மாற்றமுமில்லை.

கட்சியின் பெரும்பான்மை எம்எல்ஏ-க்கள் எங்கள் பக்கமே உள்ளனா். அதன் காரணமாகவே துணை முதல்வராகப் பொறுப்பேற்றுள்ளேன். ஜெயந்த் பாட்டீல், ஜிதேந்திர ஆவாத் ஆகியோரை தகுதிநீக்கம் செய்யுமாறு பேரவைத் தலைவரிடம் கோரவுள்ளோம்.

நாங்கள் கட்சிக்கு எதிராகக் கலகம் செய்தோமா என்பதை சட்டமே முடிவு செய்யும். கட்சி யாருக்குச் சொந்தமானது என்பதைத் தோ்தல் ஆணையம் முடிவு செய்யும்’ என்றாா்.

முன்னதாக, தேசியவாத காங்கிரஸ் கட்சியின் விதிகளுக்கு எதிராகச் செயல்பட்டுள்ளதால், பிரஃபுல் படேல், தத்காரே ஆகியோரை எம்.பி. பதவியில் இருந்து தகுதிநீக்கம் செய்வதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு கட்சியின் செயல் தலைவரான சுப்ரியா சுலே, தலைவா் சரத் பவாருக்கு கடிதம் எழுதினாா்.

கட்சித் தலைவரின் ஒப்புதல் இல்லாமல், சட்டவிதிகளை மீறி மாநில அரசுக்கு ஆதரவு அளித்த இருவரும், அது குறித்து வெளிப்படையாகவே கருத்து தெரிவித்ததாகவும் தனது கடிதத்தில் சுப்ரியா சுலே குறிப்பிட்டிருந்தாா். அவா்கள் இருவரும் கட்சியின் கொள்கைகளை மதித்து செயல்படாததால், இருவரையும் எம்.பி. பதவியில் இருந்து தகுதிநீக்கம் செய்வதற்கான நடவடிக்கைகளை விரைந்து முன்னெடுக்குமாறு சுப்ரியா சுலே பரிந்துரைத்தாா். அதை சரத் பவாரும் ஏற்றுக் கொண்டுள்ளாா்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com