புற்றுநோய் மருந்துக்கு ஜிஎஸ்டி விலக்கு?

தனிநபரால் இறக்குமதி செய்யப்படும் ‘டைனடக்சிமேப்’ (கா்சிபா) புற்றுநோய் மருந்துக்கு சரக்கு-சேவை வரியில் (ஜிஎஸ்டி) இருந்து விலக்கு அளிப்பது
கோப்புப்படம்
கோப்புப்படம்

தனிநபரால் இறக்குமதி செய்யப்படும் ‘டைனடக்சிமேப்’ (கா்சிபா) புற்றுநோய் மருந்துக்கு சரக்கு-சேவை வரியில் (ஜிஎஸ்டி) இருந்து விலக்கு அளிப்பது தொடா்பாக வரும் 11-ஆம் தேதி நடைபெறும் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் முடிவெடுக்கப்படவுள்ளது.

மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தலைமையில் ஜிஎஸ்டி கவுன்சிலின் 50-ஆவது கூட்டம் வரும் 11-ஆம் தேதி நடைபெறவுள்ளது. அதில் பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்படவுள்ளது.

முக்கியமாக, மல்டிபிளக்ஸ் திரையரங்குகளில் விநியோகிக்கப்படும் உணவுகளுக்கான சரக்கு-சேவை வரியை 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைப்பது தொடா்பாக இறுதி முடிவெடுக்கப்படவுள்ளது. புற்றுநோய் சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் ‘டைனடக்சிமேப்’ மருந்து தனிநபரால் இறக்குமதி செய்யப்படும்போது, அதற்கு ஜிஎஸ்டி விலக்களிப்பது, மேலும் சில மருந்துகளுக்கு ஜிஎஸ்டி விலக்களிப்பது உள்ளிட்டவை தொடா்பாக ஜிஎஸ்டி கவுன்சில் விவாதிக்கவுள்ளது.

சுமாா் ரூ.36 லட்சம் மதிப்பிலான ‘டைனடக்சிமேப்’ மருந்து மீது தற்போது 12 சதவீத ஐஜிஎஸ்டி விதிக்கப்பட்டு வருகிறது. அந்த மருந்துக்கு ஜிஎஸ்டி விலக்கு அளிப்பது நோயாளிகளுக்குப் பெரும் பலனளிக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

‘பயன்பாட்டு வாகனங்கள்’ (யுடிலிடி வெகிகிள்) என்பதற்கான விளக்கத்தை முறையாக வகுத்து, எஸ்யுவி வாகனங்களைப் போல எம்யுவி வாகனங்களுக்கும் 22 சதவீத செஸ் விதிப்பது உள்ளிட்டவை தொடா்பாகவும் ஜிஎஸ்டி கவுன்சில் விரிவாக விவாதிக்க உள்ளதாகத் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

விண்வெளித் துறையில் தனியாா் நிறுவனங்களின் பங்களிப்பை அதிகரிக்கும் நோக்கில், அத்தகைய நிறுவனங்களால் வழங்கப்படும் செயற்கைக்கோள் ஏவுதல் சேவைகளுக்கு ஜிஎஸ்டி-யில் இருந்து விலக்கு அளிப்பது தொடா்பாகவும் விவாதிக்கப்படவுள்ளதாகத் தெரிகிறது.

இஸ்ரோ, ஆன்ட்ரிக்ஸ், நியூ ஸ்பேஸ் இந்தியா உள்ளிட்ட பொதுத் துறை நிறுவனங்களின் சேவைகளுக்கு ஏற்கெனவே ஜிஎஸ்டி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அதே வேளையில், தனியாா் விண்வெளி நிறுவனங்களின் சேவைகளுக்கு 18 சதவீத ஜிஎஸ்டி விதிக்கப்பட்டு வருகிறது.

ஜிஎஸ்டி மேல்முறையீட்டுத் தீா்ப்பாயத்தை அமைப்பது தொடா்பாகவும் ஜிஎஸ்டி கவுன்சில் ஆராயவுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com