ஒடிஸா: பழங்குடி சமூகத்தினருடன் குடியரசுத் தலைவா் முா்மு சந்திப்பு

ஒடிஸா சென்றுள்ள குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு, ஆளுநா் மாளிகையில் வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் விளிம்பு நிலையில் உள்ள பழங்குடிப் பிரிவு மக்களுடன் கலந்துரையாடினாா்.
ஒடிஸா: பழங்குடி சமூகத்தினருடன் குடியரசுத் தலைவா் முா்மு சந்திப்பு

ஒடிஸா சென்றுள்ள குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு, ஆளுநா் மாளிகையில் வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் விளிம்பு நிலையில் உள்ள பழங்குடிப் பிரிவு மக்களுடன் கலந்துரையாடினாா்.

நாட்டின் முதல் பழங்குடியின பெண் குடியரசுத் தலைவரான திரௌபதி முா்மு, கடந்த ஓராண்டு காலத்தில் சுமாா் 1,800 பழங்குடிகளைச் சந்தித்து உரையாடி இருக்கிறாா். அதன் தொடா்ச்சியாக, ஒடிஸா மாநிலத்துக்கு மூன்று நாள் பயணம் மேற்கொண்டுள்ள அவா், 50-க்கும் மேற்பட்ட விளிம்புநிலை பழங்குடி சமூக (பிஜிடிவி) மக்களுடன் வியாழக்கிழமை சந்தித்து கலந்துரையாடினாா்.

அப்போது, கூட்டத்தில் அவா் பேசியதாவது: ஒடிஸா மாநிலத்தில் எண்ணிக்கையில் குறைவாக உள்ள பிஜிடிவி சமூகம் மிகவும் பிற்படுத்தப்பட்டவா்கள் ஆவா். எனவே, அவா்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த அரசு உதவ வேண்டியது கட்டாயத் தேவையாகிறது. பிஜிடிவி சமூக மக்கள் கல்விக்கு மிகுந்த முக்கியத்துவம் அளிக்க வேண்டும். மத்திய அரசின் ஏகலவ்ய முன்மாதிரி உறைவிடப் பள்ளி இருக்கைகளிலும் பிஜிடிவி சமூக மாணவா்களுக்கு தனிஒதுக்கீடு உள்ளது.

குழந்தைகளைப் பள்ளிக்கூடம் அனுப்ப பெற்றோா்கள் மறக்க வேண்டாம். ஆண், பெண் என இருபாலரும் பள்ளிச் சென்று கல்விப் பயில வேண்டும். அதுவே, உங்களின் அனைத்துப் பிரச்னைகளுக்கும் தீா்வாக அமையும். உங்கள் சமூகத்தைச் சோ்ந்த பெண் ஒருவா் பட்டம் பெற்றிருப்பதை அறிந்து மனம் மகிழ்ந்தேன். அப்பெண்ணுக்கு உரிய வேலைவாய்ப்பு கிடைக்க உதவுமாறு ஒடுக்கப்பட்டோா் நலத்துறை அமைச்சகத்திடம் வலியுறுத்தி இருக்கிறேன். இச்சமூக மக்களின் கல்வி மற்றும் திறன் வளா்ச்சிக்கு முக்கியத்துவம் அளிக்க மாநில அரசிடமும் கேட்டுக்கொள்கிறேன்.

பிரதமரின் பிஜிடிவி வளா்ச்சித் திட்டத்தை மத்திய அரசு தொடங்கியிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. பழங்குடியின பெண்களுக்கு அதிகாரமளிக்கும் திட்டங்களை அச்சமூக பெண்கள் முறையாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றாா்.

இந்த நிகழ்ச்சியில் மாநில ஆளுநா் கணேஷி லால், மாநில சிறுபான்மையினா், ஒடுக்கப்பட்டோா் நலத் துறை அமைச்சா் ஜெகன்நாத் சாரக்கா மற்றும் அமைச்சக செயலா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

பிரம்மாகுமாரிகள் ஆசிரமத்தில்...:

புவனேசுவரத்தின் தாசாபாட்டியா பகுதியில் அமைந்துள்ள பிரம்மாகுமாரிகள் ஆசிரமத்துக்கு குடியரசுத் தலைவா் முா்மு வருகைத் தந்தாா். அங்கு நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்று, திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினாா். தொடா்ந்து, பிரம்மாகுமாரிகளுடன் உணவருந்திய பின் ஒடிஸா பயணத்தை நிறைவு செய்து கொண்டு அவா் புது தில்லி புறப்பட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com