பாஜக புதிய துணைத் தலைவர் தாரிக் மன்சூர்: ஏ.கே.அந்தோணி மகனுக்கு பொறுப்பு

பாஜக தேசிய நிர்வாகிகளை மாற்றம் செய்து, கட்சித் தலைவர் ஜெ.பி.நட்டா நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.
அனில் அந்தோணி.
அனில் அந்தோணி.

பாஜக தேசிய நிர்வாகிகளை மாற்றம் செய்து, கட்சித் தலைவர் ஜெ.பி.நட்டா நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.
 அதன்படி, பாஜக துணைத் தலைவர்களில் ஒருவராக உத்தர பிரதேசத்தின் அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் தாரிக் மன்சூர் நியமிக்கப்பட்டுள்ளார்.
 அதேநேரம், கர்நாடகத்தைச் சேர்ந்த மூத்த தலைவர் சி.டி.ரவி, கட்சியின் தேசிய பொதுச் செயலர் பதவியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.
 2024 மக்களவைத் தேர்தல் மற்றும் நடப்பாண்டு இறுதியில் நடைபெறவிருக்கும் பல்வேறு மாநில சட்டப் பேரவைத் தேர்தல்களுக்கு பாஜக தீவிரமாக தயாராகி வரும் நிலையில், அக்கட்சியின் தேசிய நிர்வாகிகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
 சனிக்கிழமை வெளியிடப்பட்ட புதிய பட்டியலில், 13 துணைத் தலைவர்கள், 9 தேசிய பொதுச் செயலர்கள், 13 தேசியச் செயலர்கள் இடம்பெற்றுள்ளனர்.
 மேலும் ஒரு முஸ்லிம் தலைவர்: பாஜக துணைத் தலைவர்களில் ஒருவராக, உத்தர பிரதேசத்தின் பஸ்மாந்தா முஸ்லிம் பிரிவைச் சேர்ந்த மாநில சட்ட மேலவை உறுப்பினர் (எம்எல்சி) தாரிக் மன்சூர் நியமிக்கப்பட்டுள்ளார். இவர், அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் ஆவார்.
 பாஜக துணைத் தலைவராக கேரளத்தைச் சேர்ந்த ஏ.பி.அப்துல்லாகுட்டி ஏற்கெனவே பதவி வகித்து வரும் நிலையில், இப்போது இப்பதவியில் 2 முஸ்லிம்கள் இடம்பெற்றுள்ளனர்.
 பின்தங்கிய பஸ்மாந்தா முஸ்லிம் சமூகத்தினரின் ஆதரவை பெறும் நடவடிக்கையாக, மன்சூரின் நியமனம் கருதப்படுகிறது.
 ராஜஸ்தான் முன்னாள் முதல்வர் வசுந்தரா ராஜே சிந்தியா, ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் ரகுவர் தாஸ் ஆகியோர், பாஜக துணைத் தலைவர்களாக தொடர்கின்றனர்.
 தெலங்கானா மாநில முன்னாள் பாஜக தலைவர் பண்டி சஞ்சய் குமார், உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த மாநிலங்களவை எம்.பி. ராதா மோகன் அகர்வால் ஆகியோர் புதிய தேசிய பொதுச் செயலர்களாக நியமிக்கப்பட்டுள்ளார்.

ஏ.கே.அந்தோணி மகனுக்கு பொறுப்பு
காங்கிரஸில் இருந்து விலகி பாஜகவில் இணைந்த முன்னாள் மத்திய அமைச்சர் ஏ.கே.அந்தோணியின் மகன் அனில் அந்தோணி, பாஜக தேசியச் செயலராக நியமிக்கப்பட்டுள்ளார். இதேபோல், உத்தர பிரதேசம், அஸ்ஸாமைச் சேர்ந்த மாநிலங்களவை எம்.பி.க்களான  சுரேந்திர சிங் நாகர், காமாக்ய பிரசாத் தசா ஆகியோரும் புதிய தேசியச் செயலர்களாக்கப்பட்டுள்ளனர். இதில் சுரேந்தி சிங் நாகர், உத்தர பிரதேசத்தில் செல்வாக்குமிக்க குர்ஜார் சமூகத்தைச் சேர்ந்தவர் ஆவார்.
உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த மக்களவை எம்.பி.க்களான வினோத் சோன்கர், ஹரீஷ் துவிவேதி ஆகியோர், தேசியச் செயலர்கள் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர்.
பாஜக தேசிய நிர்வாகிகள் மாற்றத்துக்கு பிறகு, அக்கட்சியின் துணைத் தலைவர் பதவியில் 5 பெண்களும், தேசியச் செயலர்கள் பதவியில் 4 பெண்களும் இடம்பெற்றுள்ளனர். தேசிய பொதுச் செயலர் பதவியில் பெண் தலைவர் யாரும் இல்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com