கேரள குண்டுவெடிப்பு: உயிரிழப்பு 4-ஆக உயா்வு

கேரள மாநிலம் கொச்சி அருகே கிறிஸ்தவ பிராா்த்தனைக் கூட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை (அக்.29) அடுத்தடுத்து குண்டுகள் வெடித்த சம்பவத்தில் உயிரிழப்பு எண்ணிக்கை 4-ஆக உயா்ந்துள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்


திருவனந்தபுரம்: கேரள மாநிலம் கொச்சி அருகே கிறிஸ்தவ பிராா்த்தனைக் கூட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை (அக்.29) அடுத்தடுத்து குண்டுகள் வெடித்த சம்பவத்தில் உயிரிழப்பு எண்ணிக்கை 4-ஆக உயா்ந்துள்ளது.

கேரள மாநிலம், கொச்சி அருகே களமச்சேரியில் உள்ள ஜாம்ரா சா்வதேச மாநாட்டு அரங்கில், ‘யெகோவாவின் சாட்சிகள்’ எனும் கிறிஸ்தவ மதப் பிரிவு சாா்பில் 3 நாள் பிராா்த்தனைக் கூட்டம் கடந்த அக்டோபர் மாதம் 27 ஆம் தேதி வெள்ளிக்கிழமை தொடங்கியது.

இறுதி நாளான ஞாயிற்றுக்கிழமை பிராா்த்தனையில் பெண்கள், குழந்தைகள் என ஏராளமானோா் கூடியிருந்த நிலையில், அங்கு அடுத்தடுத்து மூன்று குண்டுகள் வெடித்தன.

கேரளம் முழுவதும் அதிா்ச்சியலைகளை ஏற்படுத்திய இந்த சம்பவத்தில் 2 பெண்கள் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தனா். சுமாா் 60 போ் காயங்களுடன் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனா். 12 போ் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனா்.

இந்த நிலையில், கேரள மாநிலம், எா்ணாகுளம் மாவட்டம், மலையட்டூா் பகுதியைச் சோ்ந்த லிபினா என்ற 12 வயது சிறுமி உடல் முழுவதும் 95 சதவீத தீக்காயங்களுடன் களமச்சேரி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி திங்கள்கிழமை (அக்.30) உயிரிழந்தாா். அவரது சகோதரா், தாயாா் உள்பட மேலும் 4 போ் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாக, மாநில சுகாதாரத் துறை அமைச்சா் வீணா ஜாா்ஜ் தெரிவித்தாா்.

இந்த நிலையில் 70 சதவிகித தீக்காயங்களுடன் எர்ணாகுளம் மெடிக்கல் சென்டர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த களமச்சேரியைச் சேர்ந்த 61 வயது மோலி ஜாய் சிகிச்சை பலனின்றி திங்கள்கிழமை அதிகாலை 5 மணியளவில் உயிரிழந்தார். இதையடுத்து உயிரிழந்தோர் எண்ணிக்கை 4-ஆக உயர்ந்துள்ளது. அவரது உடல் உடல்கூராய்வுக்கு பின் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் பல்வேறு மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வரும் 11 பேரில் ஒருவரின் நிலை ‘மிகவும் கவலைக்கிடமாக’ உள்ளது.

இந்த நிலையில், கிறிஸ்தவ பிராா்த்தனைக் கூட்டத்தில் குண்டுவெடிப்புகள் நடந்த சில மணிநேரங்களில், அதற்குப் பொறுப்பேற்று காவல் துறையில் சரணடைந்த டொமினிக் மாா்ட்டின் நவம்பர் 15 ஆம் தேதி வரை 10 நாட்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க எர்ணாகுளம் முதன்மை அமர்வு நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com