யுடிஎஸ் செயலியில் டிக்கெட் எடுக்காமல் செல்ல வழி கண்டுபிடித்த கில்லாடிகள்

டிக்கெட் எடுப்பதை எளிதாக்க உருவாக்கப்பட்ட யுடிஎஸ் செயலி மூலம், டிக்கெட் எடுக்காமல் செல்வதற்கான வழியைக் கண்டுபிடித்திருக்கிறார்கள் மோசடியாளர்கள்.
கோப்புப்படம்
கோப்புப்படம்


மும்பை: டிக்கெட் எடுப்பதை எளிதாக்க உருவாக்கப்பட்ட யுடிஎஸ் செயலி மூலம், டிக்கெட் எடுக்காமல் செல்வதற்கான வழியைக் கண்டுபிடித்திருக்கிறார்கள் மோசடியாளர்கள்.

டிக்கெட் எடுக்காமல், நூதன முறையில் மோசடியில் ஈடுபடும் நபர்களைப் பிடிக்க ரயில்வே அதிகாரிகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

அதாவது, யுடிஎஸ் செயலி மூலம், எல்லைக் கட்டுப்பாடுகளைத் தாண்டி, ரயிலில் இருந்துகொண்டே கூட டிக்கெட் எடுக்கும் வகையில் ஒரு இணையதளத்தையே மோசடியாளர்கள் உருவாக்கியிருக்கிறார்கள். இந்த இணையதளத்தில், அனைத்து புறநகர் ரயில் நிலையங்களும், அதன் க்யூஆர் கோடுகளும் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதாம்.

ஜிபிஎஸ் கருவியை அடிப்படையாக வைத்து இயங்குகிறது ரயில்வேயின் யுடிஎஸ் செயலி. இதில் டிக்கெட் எடுக்க சில விதிமுறைகள் உள்ளன. டிக்கெட் நிலையத்திலிருந்து 20 மீட்டருக்கு அப்பாலும், 5 கிலோ மீட்டருக்கு உள்ளும் இருந்தால் மட்டுமே டிக்கெட் எடுக்க முடியும். போனிலிருக்கும் ஜிபிஎஸ்-ஐ அடிப்படையாக வைத்து செயல்படுகிறது. ஒருவர், டிக்கெட் கவுண்டருக்கு அருகே வந்துவிட்டாலும், ரயிலுக்குள் இருந்தும் டிக்கெட் எடுக்க முடியாது.

ஆனால், அடையாளம் தெரியாத மோசடியாளர்கள், ஒரு இணையதளத்தை உருவாக்கி, அதில் ஒரு பிடிஎஃப் லிங்க் கொடுத்துள்ளனர். அதில் அனைத்து புறநகர் ரயில்நிலையங்களுக்குமான க்யூஆர் கோடு அளிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், எங்கிருந்தும் ஒருவர் டிக்கெட் எடுக்கலாம். ரயிலில் ஏறிய பிறகும் டிக்கெட் எடுக்க முடியுமாம். டிக்கெட் எடுக்காமலேயே சென்று, டிக்கெட் பரிசோதகரைப் பார்த்த பிறகு கூட, இந்த இணையதளத்துக்குச் சென்று க்யூஆர் கோட்டை ஸ்கேன் செய்து டிக்கெட் எடுத்துக் கொள்ள முடியுமாம்.

 அதாவது, இந்த இணையதளத்துக்குச் சென்று க்யூஆர் கோடை ஸ்கேன் செய்தால் போதும். வழக்கமாக யுடிஎஸ் செயலி, செல்லிடப்பேசி புகைப்படங்களில் இருக்கும் க்யூஆர் கோடுகளை ஸ்கேன் செய்ய ஒப்புதல் அளிக்காது, எனவே, இதற்கும் ஒரு தீர்வை கண்டுபிடித்துள்ளனர். உடன் இருக்கும் ஒரு பயணி அந்த லிங்கை ஓபன் செய்து, க்யூஆர் கோடை புகைப்படம் எடுத்துக் கொண்டால், அந்த செல்லிடப்பேசியிலிருக்கும் புகைப்படத்தை, மோசடி செய்யும் பயணி, தனது செல்லிடப்பேசியில் ஸ்கேன் செய்தும் டிக்கெட் எடுத்துக்கொள்ள முடியுமாம்.

ரயில்வே ஊழியர்களுக்கு, இதுபோன்ற முறைகேடுகள், ரயிலில் நடப்பது குறித்து சக பயணிகள் மூலம் புகார் வந்ததையடுத்தே, இந்த மோசடி வெளிச்சத்துக்கு வந்துள்ளது. பல ரயில்களில் கூட்டம் அதிகமாக இருக்கும் போது, ஒரு பெட்டிக்குள் ஏறி முழுவதும் சோதிக்க சில நிமிடங்கள் ஆகும். அதற்குள், இந்த நூதன மோசடி மூலம் ஒருவர் டிக்கெட் எடுத்துவிட முடியும் என்கிறார்கள் டிக்கெட் பரிசோதகர்கள். சிலர், எப்போதும் கையில் க்யூஆர்கோடு புகைப்படத்தை தங்கள் கையிலேயே வைத்திருக்கிறார்களாம். இந்த மோசடியைத் தவிர்க்க ரயில்வே அமைச்சகம் ஏதேனும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்படுகிறது.

இதற்கு மாற்றாக, ஒவ்வொரு நொடியும் மாறிக்கொண்டே இருக்கும் க்யூஆர் கோடுகளை அளிப்பதே சாலச்சிறந்தது என்றும் ஆலோசனை வழங்குகிறார்கள்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com