'2024ல் ராகுல் காந்திதான் பிரதமர்' - காங்கிரஸ் பேனரால் சலசலப்பு!

'2024ல் ராகுல் காந்திதான் பிரதமர்' என்று லக்னெள காங்கிரஸ் அலுவலகத்தின் வெளியே  வைக்கப்பட்டுள்ள பேனரால் எதிர்க்கட்சிகளிடையே சலசலப்பு ஏற்பட்டுள்ளது. 
லக்னெள காங்கிரஸ் அலுவலகத்தின் வெளியே  வைக்கப்பட்டுள்ள பேனர்
லக்னெள காங்கிரஸ் அலுவலகத்தின் வெளியே  வைக்கப்பட்டுள்ள பேனர்

'2024ல் ராகுல் காந்திதான் பிரதமர்' என்று லக்னெள காங்கிரஸ் அலுவலகத்தின் வெளியே  வைக்கப்பட்டுள்ள பேனரால் எதிர்க்கட்சிகளிடையே சலசலப்பு ஏற்பட்டுள்ளது. 

உத்தர பிரதேச மாநிலம் லக்னெளவில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகத்தின் வெளியே ஒரு பேனர் வைக்கப்பட்டுள்ளது. அதில்,  '2024ல் ராகுல்தான் பிரதமர்' என்றும் அதுபோல '2027ல் கட்சியின் மாநிலத் தலைவர் அஜய் ராய்தான் மாநில முதல்வர்' என்றும் அச்சிடப்பட்டுள்ளது.  இது சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவி வருகிறது. 

ஆனால், இது சமாஜவாதி கட்சிக்கு பதிலடி என்று ஒருசாரார் கருத்து தெரிவிக்கின்றனர். 

ஏனெனில், சில நாள்களுக்கு முன்பு லக்னெளவில் சமாஜவாதி கட்சி அலுவலகத்தின் வெளியே வைக்கப்பட்ட ஒரு பேனரில் 'சமாஜவாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ்தான் அடுத்த பிரதமர்' என்று போஸ்டர் வைக்கப்பட்டிருந்தது. இந்த போஸ்டர் ஏற்கெனவே சலசலப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில் அதற்கு பதில் அளிக்கும் விதமாக காங்கிரஸ் போஸ்டர் வைத்துள்ளது அரசியலில் கூடுதல் சலசலப்பை எழுப்பியுள்ளது.

இதுகுறித்து சமாஜவாதி கட்சியின் மாநில செய்தித் தொடர்பாளர் ஃபக்ருல் ஹசன் சந்த் கூறுகையில், 'பிற்படுத்தப்பட்டோர், தலித்கள், சிறுபான்மையினருக்கு ஆதரவாக எங்கள் கட்சி போரிடுவதால் அகிலேஷ் அடுத்த முதல்வராகத் தகுதியானவர்'  என்று கூறியுள்ளார். 

'இது கட்சித் தொண்டர்களின் விருப்பம், வரும் தேர்தல்களில் காங்கிரஸுக்கும், பாஜகவுக்கும் இடையே நேரடிப் போட்டி இருக்கும், ராகுல் காந்தி பிரதமராகவும், அஜய் ராய் மாநில முதல்வராகவும் பதவியேற்பார். எங்கள் கட்சி மீது மக்கள் மத்தியில் நம்பிக்கை அதிகரித்து வருகிறது' என்று காங்கிரஸ் தொண்டர் நிதின் கூறினார்.

மக்களவைத் தேர்தலை எதிர்கொள்ள இந்தியா கூட்டணி என்ற பெயரில் எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்துள்ள நிலையில் அடுத்த பிரதமர் யார் என்ற கேள்வி இருந்துகொண்டே இருக்கிறது. தேர்தலுக்குப் பின்னர் முடிவெடுக்கப்படும் என்று கூட்டணிக் கட்சிகள் கூறினாலும் இதுபோன்ற பேனர்கள், பேச்சுகள் அரசியலில் சலசலப்பை ஏற்படுத்துகின்றன. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com