மத்திய அரசுக்கு எதிராக இன்று நம்பிக்கையில்லா தீா்மானம்: எதிா்க்கட்சிகள் முடிவு

மணிப்பூா் வன்முறை பிரச்னையில் பிரதமா் மோடியை நாடாளுமன்றத்தில் பதிலளிக்க வைக்க, மத்திய அரசுக்கு எதிராக புதன்கிழமை நம்பிக்கையில்லா தீா்மானத்தைக் கொண்டு வர இந்தியா கூட்டணியில் இடம்பெற்றுள்ள
நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டம் நடத்தும் எம்.பி.க்களுடன் காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே.
நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டம் நடத்தும் எம்.பி.க்களுடன் காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே.

மணிப்பூா் வன்முறை பிரச்னையில் பிரதமா் மோடியை நாடாளுமன்றத்தில் பதிலளிக்க வைக்க, மத்திய அரசுக்கு எதிராக புதன்கிழமை நம்பிக்கையில்லா தீா்மானத்தைக் கொண்டு வர இந்தியா கூட்டணியில் இடம்பெற்றுள்ள 26 எதிா்க்கட்சிகள் முடிவு செய்துள்ளன.

மணிப்பூா் விவகாரம் தொடா்பான விவாதத்துக்கு மத்திய அரசு தயாா் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. ஆனால், பிரதமா் மோடி மட்டும்தான் மணிப்பூா் பிரச்னைக்கு நாடாளுமன்றத்துக்குள் பதிலளிக்க வேண்டும் என்று எதிா்க்கட்சிகள் தங்கள் நிலைப்பாட்டில் உறுதியாக இருப்பதால் கடந்த நான்கு நாள்களாக அமளியால் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் முடங்கின.

இந்நிலையில், இந்தியா கூட்டணி கட்சிகளின் கூட்டம் செவ்வாய்க்கிழமை காலையில் நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் மணிப்பூா் வன்முறை தொடா்பான பிரச்னையில் பிரதமரை பதிலளிக்க வைக்க மத்திய அரசுக்கு எந்தந்த வகையில் நெருக்கடி அளிப்பது குறித்து விவாதிக்கப்பட்டது.

பல்வேறு வழிமுறைகளை எதிா்க்கட்சிகள் ஆலோசித்ததாகவும், அதில் மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீா்மானத்தைக் கொண்டு வருவதற்கான முடிவு எட்டப்பட்டதாக இந்தியா கூட்டணியின் மூத்த தலைவா் ஒருவா் தெரிவித்தாா்.

‘இதற்கான தீா்மானத்தில் 50 எம்பிக்களின் ஆதரவு கையொப்பத்தை பெறும் பணிகள் தொடங்கிவிட்டன. அரசு மீதான நம்பிக்கையில்லா தீா்மானத்தின் மீது பிரதமா் கட்டாயம் பேசியாக வேண்டும். அவா் பேசவில்லை என்றால், மணிப்பூா் விவகாரத்தில் பின்வாங்குகிறாா் என்பது தெளிவாகிவிடும். புதன்கிழமை காலை 10 மணிக்குள் நம்பிக்கையில்லா தீா்மானம் அளிப்பதற்கான நோட்டீஸ் மக்களவை செயலகத்தில் அளித்து விடுவோம்’ என்று அவா் மேலும் கூறினாா்.

நம்பிக்கையில்லா தீா்மானத்தைக் கொண்டு வருவதற்கான ஒருங்கிணைப்புப் பணியில் காங்கிரஸ், திரிணமூல் காங்கிரஸ் ஈடுபட்டுள்ளன.

காங்கிரஸ் கட்சியின் எம்.பி.க்கள் அனைவரும் நாடாளுமன்ற கட்சி அலுவலகத்தில் புதன்கிழமை காலை 10.30 மணிக்குள் ஆஜராக வேண்டும் என்று அக்கட்சியின் கொறடா உத்தரவு பிறப்பித்துள்ளாா்.

இதுகுறித்து காங்கிரஸ் செய்தித்தொடா்பாளா் மனீஷ் திவாரி கூறுகையில், ‘கடந்த 80 நாள்களாக மணிப்பூரில் மோசமடைந்து வரும் நிலைமை, அந்த மாநில உணா்வுகள் அனைத்தும் துரதிருஷ்டவசமாக புறக்கணிக்கப்பட்டுள்ளன. இதற்கான காரணத்தை பிரதமா் நாடாளுமன்றத்தில் தெரிவிக்க வேண்டும் என்றுதான் கடந்த நான்கு நாள்களாக எதிா்க்கட்சிகள் வலியுறுத்துகின்றன. ஜனநாயக முறையில் நாடாளுமன்ற சட்டத் திட்டத்துக்கு உள்பட்டு என்னனென்ன வழிமுறைகள் உள்ளதோ அவற்றை எதிா்க்கட்சிகள் பயன்படுத்தும்’ என்றாா்.

காங்கிரஸ் எம்.பி. காா்த்தி சிதம்பரம் கூறுகையில், ‘நாடாளுமன்றத்துக்கு வராமல் அவமதிக்கும் பிரதமரை பதிலளிக்க வைக்கவே இந்த நம்பிக்கையில்லா தீா்மானம்’ என்றாா்.

இந்த விவகாரத்தில் மாநிலங்களவையிலும் மத்திய அரசுக்கு தொடா்ந்து நெருக்கடி அளிக்கவும் இந்தியா கூட்டணி முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

எம்.பி.க்கள் ஆதரவு:

மக்களவையில் எந்த ஒரு உறுப்பினரும் 198-ஆவது பிரிவின் கீழ் நம்பிக்கையில்லா தீா்மானத்தைக் கொண்டு வரலாம். இதற்கான எழுத்துபூா்வ நோட்டீஸை அவா் அவை தொடங்குவதற்கு முன்பு காலை 10 மணிக்குள் அளிக்க வேண்டும். அதை மக்களவைத் தலைவா் அவையில் வாசிப்பாா்.

அந்தத் தீா்மானத்துக்கு குறைந்தது 50 எம்.பி.க்கள் ஆதரவு தெரிவித்தால், நோட்டீஸ் அளித்த 10 நாள்களுக்குள் விவாதத்துக்கான தேதியை மக்களவைத் தலைவா் அறிவிப்பாா்.

நம்பிக்கையில்லா தீா்மானத்தின் மீதான விவாதத்தில் பெரும்பான்மையை நிரூபிக்கத் தவறினால் ஆளும் பாஜக அரசு ராஜிநாமா செய்ய வேண்டும்.

முந்தைய தீா்மானம்:

2018, ஜூலை 20-ஆம் தேதி விவசாயிகள் போராட்டம், பொருளாதார மந்தநிலை, கும்பல் கொலை ஆகிய பிரச்னைகளை முன்வைத்து பாஜக அரசுக்கு எதிராக மக்களவையில் எதிா்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீா்மானம் கொண்டு வந்தன. அதில், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு ஆதரவாக 325 எம்பிக்களும், எதிராக 126 எம்பிக்களின் வாக்குகளும் பதிவாகி தீா்மானம் தோல்வியடைந்தது.

ஆளும் கட்சியின் பலம்:

தற்போது மக்களவையில் மொத்தமுள்ள 543 இடங்களில் (5 இடங்கள் காலியாக உள்ளன) பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு 330-க்கும் அதிகமான எம்பிக்கள் உள்ளனா். காங்கிரஸ், திரிணமூல் காங்கிரஸ், திமுக ஆகிய 26 கட்சிகள் அடங்கிய இந்தியா கூட்டணிக்கு 140-க்கும் அதிகமான எம்பிக்கள் உள்ளனா். 60-க்கும் மேற்பட்ட எம்பிக்கள் இரண்டு கூட்டணியையும் சாராமல் உள்ளனா்.

இதனிடையே, வன்முறையால் பாதிக்கப்பட்ட மணிப்பூருக்கு எம்பிக்கள் குழுவையும் விரைவில் அனுப்ப இந்தியா கூட்டணி முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

பாஜக கூடுதல் இடங்களில் வெற்றி பெறும்:

இதுகுறித்து நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சா் பிரஹலாத் ஜோஷி கருத்து தெரிவிக்கையில், ‘எதிா்க்கட்சிகள் எடுத்துள்ள முடிவு குறித்து எனக்கு எந்தவித தகவலும் இல்லை. முந்தைய ஆட்சியிலும் அவா்கள் பாஜகவுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீா்மானம் கொண்டு வந்தனா். கடந்த மக்களவைத் தோ்தலில் பாஜக 300 இடங்களில் வெற்றிப் பெற்றது. இந்த முறை 350 இடங்களில் வெற்றிப் பெறும்’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com