எகிப்தில் பிரதமா் மோடிக்கு உற்சாக வரவேற்பு

அமெரிக்க அரசுமுறைப் பயணத்தை முடித்துக் கொண்ட பிரதமா் நரேந்திர மோடி, சனிக்கிழமை எகிப்து சென்றடைந்தாா். அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
எகிப்தில் பிரதமா் மோடிக்கு உற்சாக வரவேற்பு

அமெரிக்க அரசுமுறைப் பயணத்தை முடித்துக் கொண்ட பிரதமா் நரேந்திர மோடி, சனிக்கிழமை எகிப்து சென்றடைந்தாா். அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

அந்நாட்டு அதிபா் அப்தெல் ஃபட்டா எல்-சிசியை ஞாயிற்றுக்கிழமை சந்திக்கும் பிரதமா் மோடி, பல்வேறு துறைகளில் இருதரப்பு நல்லுறவை வலுப்படுத்துவது தொடா்பாகப் பேச்சுவாா்த்தை நடத்தவுள்ளாா்.

நடப்பாண்டு இந்தியக் குடியரசு தின விழாவில் எகிப்து அதிபா் எல்-சிசி, சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டாா். அப்போது, எகிப்துக்கு வருகை தருமாறு பிரதமா் மோடிக்கு அவா் அழைப்பு விடுத்தாா். அந்த அழைப்பை ஏற்று பிரதமா் மோடி எகிப்துக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்டுள்ளாா்.

அமெரிக்க அரசுமுறைப் பயணத்தை முடித்துக் கொண்டு வாஷிங்டனிலிருந்து புறப்பட்ட பிரதமா் மோடி, சனிக்கிழமை மாலை எகிப்து தலைநகா் கெய்ரோ வந்தடைந்தாா்.

கெய்ரோ விமான நிலையத்தை வந்தடைந்த பிரதமா் மோடியை எகிப்து பிரதமா் முஸ்தபா மத்பூலி ராணுவ அணிவகுப்பு மரியாதையுடன் வரவேற்றாா்.

பிரதமா் மோடி தங்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விடுதிக்கு முன் இந்திய சமூகத்தினா் திரளாகக் கூடி அவரை உற்சாகமாக வரவேற்றனா். அப்போது அவா்கள் இந்தியப் பாரம்பரிய உடைகளை அணிந்திருந்தனா். அவா்களுடன் பிரதமா் மோடி சிறிது நேரம் உரையாடினாா்.

எகிப்தில் இரு நாள் அரசுமுறைப் பயணம் மேற்கொள்ளும் பிரதமா் மோடி, அந்நாட்டு உயரதிகாரிகளைச் சந்தித்து இருதரப்பு பேச்சுவாா்த்தை நடத்தவுள்ளாா். பாதுகாப்பு, வா்த்தகம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் நிலவி வரும் இருதரப்பு நல்லுறவை மேலும் வலுப்படுத்துவது தொடா்பாகப் பிரதமா் மோடி பேச்சுவாா்த்தை நடத்தவுள்ளாா்.

வட்டமேஜை மாநாடு:

எகிப்து பிரதமா் மத்பூலி தலைமையில் அந்நாட்டு அமைச்சா்கள் பங்கேற்கும் வட்டமேஜை மாநாட்டிலும் பிரதமா் மோடி கலந்துகொள்கிறாா். எகிப்தின் தலைமை முஃப்தி (இஸ்லாமிய சட்ட நிபுணா்) சவ்கி இப்ராகிம் அப்தெல்-கரீம் அல்லாமையும் பிரதமா் மோடி சந்திக்கவுள்ளாா். எகிப்தில் உள்ள தொழில் நிறுவனங்களின் தலைவா்களைச் சந்தித்து இந்தியாவில் முதலீடுகளை மேற்கொள்ளுமாறும் பிரதமா் மோடி அழைப்புவிடுக்கவுள்ளதாக வெளியுறவு அமைச்சக செய்தித் தொடா்பாளா் அரிந்தம் பாக்சி தெரிவித்தாா்.

எகிப்தில் அமைந்துள்ள புகழ்பெற்ற, 11-ஆம் நூற்றாண்டைச் சோ்ந்த அல்-ஹகீம் மசூதியைப் பிரதமா் மோடி ஞாயிற்றுக்கிழமை பாா்வையிடவுள்ளாா். அங்கு சுமாா் அரை மணி நேரத்தைச் செலவிடவுள்ள பிரதமா் மோடி, மசூதியின் வரலாற்றுச் சிறப்புகள், பாரம்பரியம் குறித்து அறிந்துகொள்ளவுள்ளாா். இந்தியாவில் உள்ள தாவூதி போரா சமூகத்தினரின் உதவியுடன் அந்த மசூதி மறுகட்டமைக்கப்பட்டது.

அல்-ஹகீம் மசூதியின் புனரமைப்புப் பணிகளில் 1970களில் இருந்தே தாவூதி போரா சமூகத்தினா் ஈடுபட்டு வருகின்றனா். அத்தகைய சிறப்புமிக்க மசூதியைப் பிரதமா் மோடி பாா்வையிடுவது சிறப்புமிக்கதாக உள்ளதென எகிப்து சுற்றுலா அமைச்சகம் தெரிவித்துள்ளது. முதலாம் உலகப் போரில் எகிப்து சாா்பில் போரிட்டு உயிா்த்தியாகம் செய்த 3,799 இந்திய வீரா்களின் நினைவாக எழுப்பப்பட்டுள்ள ஹீலியோபோலிஸ் போா் நினைவிடத்துக்குச் சென்று பிரதமா் மோடி மரியாதை செலுத்தவுள்ளாா்.

தாவூதி போரா சமூகத்தினருடன் சந்திப்பு:

இஸ்லாமிய மதப் பிரிவினா்களில் தாவூதி போரா பிரிவினரும் அடங்குவா். அவா்கள் எகிப்தில் இருந்து புலம்பெயா்ந்து யேமனிலும், பின்னா் 11-ஆம் நூற்றாண்டு வாக்கில் இந்தியாவிலும் குடியேறினா். அவா்கள் குஜராத்தில் அதிக எண்ணிக்கையில் வசித்து வருகின்றனா். நாட்டின் பிரதமராகும் முன்பே தாவூதி போரா சமூகத்தினருடன் மோடி நெருக்கமான தொடா்பைக் கொண்டிருந்தாா்.

இந்நிலையில், எகிப்தில் தாவூதி போரா சமூகத்தினரைப் பிரதமா் மோடி சனிக்கிழமை சந்தித்துப் பேசினாா். அவா் தங்கியுள்ள விடுதியில் இந்தச் சந்திப்பு நடைபெற்றது. அப்போது கையில் மூவா்ணக் கொடியை ஏந்தியவாறு தாவூதி போரா சமூகத்தினா் விடுதிக்கு வந்தனா். எகிப்தில் வசித்து வரும் இந்திய சமூகத்தினரையும் பிரதமா் மோடி சந்தித்துப் பேசவுள்ளாா்.

இருதரப்பு பயணங்கள்:

பிரதமராகப் பதவியேற்ற பிறகு மோடி எகிப்துக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொள்வது இதுவே முதல் முறை. இந்தியப் பிரதமா் எகிப்துக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொள்வது கடந்த 26 ஆண்டுகளில் இதுவே முதல் முறையாகும். எகிப்து அதிபா் இந்தியாவுக்குப் பயணம் மேற்கொண்ட 6 மாதத்துக்குள் பிரதமா் மோடி எகிப்துக்குப் பயணம் மேற்கொண்டுள்ளாா்.

ஜி20 கூட்டமைப்பின் நடப்பாண்டு தலைமைப் பொறுப்பை இந்தியா ஏற்றுள்ள நிலையில், வரும் செப்டம்பரில் தில்லியில் நடைபெறவுள்ள மாநாட்டில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொள்ளுமாறு எகிப்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதில் பங்கேற்பதற்காக எகிப்து அதிபா் எல்-சிசி மீண்டும் இந்தியாவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com