பிரதமரின் மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்குமா?: ஜெய்ராம் ரமேஷ் கேள்வி!

சத்தீஸ்கர் தேர்தல் பிரச்சாரத்தின்போது பிரதான் மந்திரி கரீப் கல்யாண் அன்ன யோஜனா திட்டம் நீட்டிக்கப்படும் என பிரதமர் அறிவித்தது தேர்தல் விதிமீறல் என காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.
பிரதமா் நரேந்திர மோடி (கோப்புப் படம்)
பிரதமா் நரேந்திர மோடி (கோப்புப் படம்)

பிரதமர் மோடி தேர்தல் நடத்தை விதிகளை மீறிவிட்டதாக குற்றம் சாட்டியுள்ள காங்கிரஸ் கட்சி, பிரதமர் மீது இந்திய தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்குமா என்று கேள்வி எழுப்பியுள்ளது.

சத்தீஸ்கர் தேர்தல் பிரச்சாரத்தின்போது, பிரதான் மந்திரி கரீப் கல்யாண் அன்ன யோஜனா திட்டத்தை மேலும் ஐந்தாண்டுகளுக்கு நீட்டிப்பதாக பிரதமர் மோடி அறிவித்தது அப்பட்டமான தேர்தல் நடத்தை விதிமீறலாகும் என்று ஜெய்ராம் ரமேஷ் கூறியுள்ளார். 

இதுகுறித்து எக்ஸ் சமூக வலைதளத்தில் மூத்த காங்கிரஸ் தலைவர் ஜெய்ராம் ரமேஷ், “இந்த நீட்டிப்பிற்கு மத்திய அமைச்சரவை இன்னும் ஒப்புதல் அளிக்கவே இல்லை. ஆனால் அதற்கு முன்னதாகவே பொதுவெளியில் மோடி அறிவித்து விட்டார். மோடி எப்படி செயல்படுவார் என்பதற்கு இது ஒரு உதாரணம். பாஜக அரசில் மத்திய அமைச்சரவைக்கு எந்த முக்கியத்துவமும் இல்லை. முதலில் மோடி அறிவித்து விடுவார். பிறகு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளிக்கும். 

2016 நவம்பர் 8-ஆம் தேதி நியாபகம் உள்ளதா? அப்போதும் இப்படித்தான் செயல்பட்டார். பிரதான் மந்திரி கரீப் கல்யாண் அன்ன யோஜனா திட்டமானது தேசிய உணவு பாதுகாப்புச் சட்டம் 2013-ன் மாற்றியமைக்கப்பட்ட மறுவடிவமே ஆகும். இச்சட்டத்தை அன்று குஜராத் முதல்வராக இருந்த மோடி எதிர்த்தார். ஆனால் இப்போது அதே திட்டத்திற்கு மோடி ஐந்தாண்டு நீட்டிப்பு வழங்குவது அவரது பலவீனத்தை பிரதிபலிப்பதாகும்.” என்று தெரிவித்துள்ளார். 

முன்னதாக, கடந்த வாரம் சத்தீஸ்கரில் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் உரையாற்றிய மோடி, 80 கோடி ஏழை மக்களுக்கு இலவச ரேஷன் திட்டமான பிரதான் மந்திரி கரீப் கல்யாண் அன்ன யோஜனா திட்டத்தை 5 ஆண்டுகளுக்கு அரசு நீட்டிக்கும் என்று பிரச்சார மேடையிலேயே அறிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com