லக்னோ: உத்தர பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத், அம்மாநில சட்டப்பேரவை குளிர்கால கூட்டத்தொடர் தொடங்கிய நிலையில், சட்டமன்ற நடவடிக்கைகள் சுமுகமாக நடைபெற ஒத்துழைப்பு வழங்குமாறு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் உள்பட அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களிடமும் கேட்டுக்கொண்டுள்ளார்.
செவ்வாய்கிழமை கூட்டத்தொடருக்கு முன்பாக செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் இவ்வாறு தெரிவித்தார்.
மேலும், “சட்டமன்றச் செயல்பாடுகளைக் கண்ணியமான முறையில் நடத்துவதை உறுதி செய்யும் அதே வேளையில், கடந்த ஆறு வருடங்களில் உ.பி. எதிர்கொள்ளும் முக்கியமான பிரச்னைகள் குறித்து விவாதிக்கவுள்ளோம். ஜனநாயக மரபுப்படி இந்த விவாதங்கள் நடைபெறும். இதே சட்டமன்றத்தில் முன்பு மோதல் நடந்தது. ஆனால் இன்று பொது மக்களின் பிரச்னைகள் மீதான விவாதம் கண்ணியமான முறையில் நடைபெற வேண்டும்” என்று தெரிவித்தார்.
இதனை உறுதி செய்வது ஆளும் கட்சி உறுப்பினர்களின் பொறுப்பு மட்டுமன்று; எதிர்க் கட்சி உறுப்பினர்களும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
இதையும் படிக்க: ம.பி.யில் வாக்குப்பெட்டிகளை உடைத்த ஆட்சியர்.. அதிர்ச்சி விடியோ
எதிர்க்கட்சிகளின் கேள்விகளுக்கு அரசு பதிலளிக்கத் தயாராகவுள்ளதாகவும் துணை நிதிநிலை அறிக்கை குறித்தும் மற்ற பிரச்னைகள் குறித்தும் இன்று விவாதிக்கவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.