
பாரதிய ஜனதா கட்சியில் இணையாவிட்டால் அடுத்த ஒரு மாதத்துக்குள் அமலாக்கத்துறை கைது செய்யும் என்று மிரட்டல் விடுத்துள்ளதாக தில்லி பொதுப்பணித்துறை அமைச்சர் அதிஷி தெரிவித்துள்ளார்.
தில்லி கலால் கொள்கை வழக்கில் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா, ஆம் ஆத்மி எம்பி சஞ்சய் சிங், பிஆர்எஸ் எம்எல்ஏ கவிதா உள்ளிட்டோர் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டனர்.
இதற்கிடையே, மக்களவைத் தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவாலும் கடந்த வாரம் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளது அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் இன்று காலை செய்தியாளர்களை சந்தித்து அமைச்சர் அதிஷி பேசியதாவது:
“என்னுடைய நெருங்கிய உதவியாளர் மூலம் என்னை அனுகிய பாஜக, அரசியல் வாழ்க்கையை காப்பாற்ற வேண்டும் என்றால் பாஜகவில் இணைய வேண்டுமென்றும், இல்லையென்றால் ஒரு மாதத்துக்குள் அமலாக்கத்துறையால் கைது செய்யப்படுவேன் என்றும் தெரிவித்துள்ளனர்.
மக்களவைத் தேர்தலுக்கு முன்னதாக அமலாக்கத்துறையால் நான், செளரவ் பரத்வாஜ், ராகவ் சாதா மற்றும் துர்கேஷ் பதக் ஆகிய 4 பேரும் அமலாக்கத்துறையால் கைதாகவுள்ளோம்.
அமலாக்கத்துறையின் விசாரணை வளையத்துக்குள் செளரவ் பரத்வாஜ் மற்றும் என்னை கொண்டு வந்துள்ளனர். கேஜரிவால், சிசோடியா, சஞ்சய் சிங், சத்யேந்திர ஜெயின் ஆகியோர் சிறையில் இருந்தும் ஆம் ஆத்மி ஒற்றுமையாக வலுவாக இருப்பதாக பாஜக உணர்கிறது. தற்போது ஆம் ஆத்மியின் அடுத்தகட்ட தலைவர்களை சிறையில் அடைக்க திட்டமிட்டுள்ளனர்.
அரவிந்த் கேஜரிவாலுக்கு தண்டனை வழங்கப்படவில்லை. அவர் முதல்வர் பதவியை ராஜிநாமா செய்ய மாட்டார். தில்லி சட்டப்பேரவையில் அமோக பெரும்பான்மை உள்ளது. கேஜரிவால் ராஜிநாமா செய்தால், ஆட்சியை கவிழ்க்க பாஜக திட்டமிட்டுள்ளது.” எனத் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.