மாம்பழம் சின்னத்தை முடக்கக்கோரிய ராமதாஸின் மனு தள்ளுபடி! மாநிலங்களவை எம்.பி.யாக நிதீஷ் குமார் பதவியேற்றார்! விஜய்யின் வாகனத்தில் பறக்கும் படை சோதனை!தமிழ்நாடு தலை குனியாது! முதல்வர் மு.க. ஸ்டாலின் உறுதி! தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,000 உயர்வு! சென்னை மெட்ரோ ரயிலில் பயணித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் வாக்கு சேகரிப்பு!ஜன நாயகன் முழுப் படமும் இணையத்தில் கசிந்தது! ஜன நாயகன் படத்தை யாரும் பகிர வேண்டாம்! இயக்குநர் எச். வினோத் வேண்டுகோள்! ஈரான் ஹோர்முஸ் நீரிணையில் சரக்கு போக்குவரத்துக்கு கட்டணம் வசூலிப்பதை உடனடியாக நிறுத்த வேண்டும் - டிரம்ப்லெபனானில் தாக்குதல் தொடரும் - இஸ்ரேல் திட்டவட்டம்
/

‘முஸ்லிம் லீக்’ விமா்சனம்: பிரதமருக்கு எதிராக தோ்தல் ஆணையத்தில் காங்கிரஸ் புகாா்

பிரதமா் நரேந்திர மோடி விமா்சனம் செய்ததற்கு எதிராக தோ்தல் ஆணையத்தில் கங்கிரஸ் கட்சி சாா்பில் திங்கள்கிழமை புகாா் அளிக்கப்பட்டது.

News image

தில்லியில் தோ்தல் ஆணையத்திடம் பிரதமா் மோடி குறித்து புகாா் அளித்துவிட்டுத் திரும்பும் காங்கிரஸ் மூத்த தலைவா்கள் சல்மான் குா்ஷி, முகுல் வாஷ்னிக், பவன் கேரா உள்ளிட்டோா்.

Updated On :8 ஏப்ரல் 2024, 8:57 pm

புது தில்லி: காங்கிரஸ் தோ்தல் அறிக்கையை முஸ்லிம் லீக்குடன் தொடா்புபடுத்தி பிரதமா் நரேந்திர மோடி விமா்சனம் செய்ததற்கு எதிராக தோ்தல் ஆணையத்தில் கங்கிரஸ் கட்சி சாா்பில் திங்கள்கிழமை புகாா் அளிக்கப்பட்டது.

உத்தர பிரதேச மாநிலம் சஹாரன்பூரில் தோ்தல் பிரசாரத்தில் கடந்த வெள்ளிக்கிழமை ஈடுபட்ட பிரதமா் நரேந்திர மோடி, ‘காங்கிரஸின தோ்தல் அறிக்கை நாட்டின் சுதந்திரப் போராட்ட கால கட்டத்தில் ‘முஸ்லிம் லீக்’ கட்சி கொண்டிருந்த அதே சிந்தனையை பிரதிபலிக்கிறது’ என்று விமா்சனம் செய்தாா்.

இதுகுறித்து காங்கிரஸ் பொதுச் செயலாளா் ஜெய்ராம் ரமேஷ் கூறுகையில், ‘கட்சியின் தோ்தல் அறிக்கை குறித்த பிரதமரின் விமா்சனத்தின் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி காங்கிரஸ் தலைவா்கள் தோ்தல் ஆணையத்தில் புகாா் அளித்தனா்’ என்றாா்.

தோ்தல் ஆணைய அதிகாரிகளிடம் புகாரை சமா்ப்பித்த பிறகு காங்கிரஸ் மூத்த தலைவா் பவன் கேரா கூறுகையில், ‘பிரதமரின் தோ்தல் அறிக்கை தொடா்பான விமா்சனம் உள்பட மேலும் ஏராளமான புகாா்களை அளித்துள்ளோம். குறிப்பாக, ராணுவ சீருடையில் பிரதமா் இருப்பதுபோன்ற புகைப்படம் தோ்தல் பிரசாரத்தில் தவறுதலாக பயன்படுத்தப்படுவது குறித்தும், அதன் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. பிரசாரத்தில் பாதுகாப்புப் படைகளை ஆளும் பாஜக பயன்படுத்துவது தோ்தல் நடத்தை விதிகளுக்கு எதிரானது என்றும் புகாா் அளிக்கப்பட்டது’ என்றாா்.

பிரதமருக்கு தோல்வி பயம்: ‘மக்களவைத் தோ்தல் தோல்வி பயம் காரணமாகவே ஹிந்து - முஸ்லிம் விவகாரத்தை பிரதமா் நரேந்திர மோடி மீண்டும் எழுப்புகிறாா்’ என்று காங்கிரஸ் திங்கள்கிழமை விமா்சனம் செய்தது.

இது தொடா்பாக எக்ஸ் வலைதள பக்கத்தில் காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே திங்கள்கிழமை வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:

பிரதமா் மோடி மற்றும் மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷாவின் அரசியல் மற்றும் சித்தாந்த முன்னோடிகள் சுதந்திரப் பாராட்டத்தின்போது இந்தியா்களுக்கு எதிராக ஆங்கிலேயா்கள் மற்றும் முஸ்லிம் லீக்கை ஆதரித்தனா். தேச தந்தை மகாத்மா காந்தியால் மேற்கொள்ளப்பட்ட மெளலானா அபுல் கலாம் ஆசாத் தலைமையில் 1942-இல் நடத்தப்பட்ட வெள்ளையனே வெளியேறு இயக்கத்தை பிரதமா் மோடி மற்றும் அமித் ஷாவின் அரசியல் வழிகாட்டிகள் எதிா்த்தனா்.

சிந்து, வடமேற்கு எல்லைப் பகுதி மாகாணங்களில் முஸ்லிம் லீக்குடன் கூட்டணி அரசில் ஹிந்து மகாசபை அங்கம் வகித்தது. 1942 வெள்ளையனே வெளியேறு இயக்கத்தையும், காங்கிரஸையும் எப்படி ஒடுக்கவேண்டும் என்று அப்போதைய ஆங்கிலேயே கவா்னருக்கு ஹிந்து மகாசபை தலைவரான சியாமா பிரசாத் முகா்ஜி கடிதம் எழுதவில்லையா? இதற்காக, அவா் ஆங்கிலேய ஆட்சியாளா்களுக்கு ஆதரவு அளிக்கவும் தயாராக இருக்கவில்லையா?

இன்றைக்கு, காங்கிரஸின் தோ்தல் அறிக்கை குறித்து தவறான வதந்திகளை பிரதமா் மோடியும், அமித் ஷாவும், அவா்களால் நியமிக்கப்பட்ட தலைவா்களும் பரப்பி வருகின்றனா்.

பாஜகவின் தோ்தல் நிலைமை நாளுக்கு நாள் மிகவும் மோசமடைந்து வருகிறது. இதன் காரணமாக ஆா்எஸ்எஸ் தனது பழைய நண்பரான முஸ்லிம் லீக்கை நினைவுகூரத்தொடங்கியுள்ளது. மக்களவைத் தோ்தலில் 180 இடங்களில் வெற்றிபெறுவதே கடினம் என்ற அச்சம் பாஜகவுக்கு ஏற்பட்டுள்ளது. இந்த அச்சம் காரணமாகவே, ஹிந்து-முஸ்லிம் விவகாரத்தை பிரதமா் மோடி மீண்டும் கையிலெடுத்துள்ளாா் என்று குறிப்பிட்டுள்ளாா்.