மயங்கிவிழுந்தார் நிதின் கட்கரி!

மகாராஷ்டிரத்தில் நடந்த பொதுக்கூட்டத்தின்போது மயங்கிவிழுந்தார் நிதின் கட்கரி!
மயங்கிவிழுந்தார் நிதின் கட்கரி!

மத்திய இணையமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான நிதின் கட்கரி, மகாராஷ்டிர மாநிலம் யவத்மாலில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிக்கொண்டிருக்கும்போதே மயங்கிவிழுந்தார். உடனடியாக அவர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.

யவத்மாலில் உள்ள புசத் பகுதியில் இன்று நடைபெற்ற மிகப்பெரிய பாஜக பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய நிதின் கட்கரி, திடீரென மயங்கி, மேடையிலேயே சரிந்து விழுந்தார். உடனடியாக மேடையில் இருந்த மூத்த தலைவர்கள், மற்றும் பாதுகாப்பு வீரர்கள், அவரை மருத்துவமனைக்குக் கொண்டு சென்று சிகிச்சை அளிக்க உதவினர்.

மேடையில் மயங்கிவிழுந்த நிதின் கட்கரி முகத்தில், கட்சித் தலைவர்கள் பலரும் நீரைத் தெளித்து அவரை நினைவுக்குக் கொண்டுவர முயற்சித்தனர். அவரை மேடையிலிருந்து மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லும்போதும் பலரும் அவருடனேயே இருந்தனர்.

இந்த நிலையில், மருத்துவமனைக்குச் சென்ற பிறகு அவர் உடல்நலம் தேறிய பிறகு, தனது எக்ஸ் பக்கத்தில், தான் நலமுடன் இருப்பதாக அவரே பதிவிட்டுள்ளார்.

மகாராஷ்டிர மாநிலம் புசத் பகுதியில் நடந்த பொதுக்கூட்டத்தின்போது, அதிக வெப்பம் காரணமாக தனக்கு மயக்கம் ஏற்பட்டுவிட்டதாகவும், தற்போது நலமாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

அதோடு, இங்கிருந்து புறப்பட்டு, வருத் பகுதியில் நடைபெறும் மற்றொரு கூட்டத்தில் பங்கேற்கச் செல்வதாகவும் அவர் பதிவிட்டுள்ளார்.

பாஜக வேட்பாளராக நாக்பூர் தொகுதியில் நிதின் கட்கரி போட்டியிடுகிறார். இங்கு முதல்கட்ட தேர்தலிலேயே வாக்குப்பதிவு நடந்து முடிந்துவிட்டது. தற்போது, மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே பிரிவு சிவசேனை வேட்பாளர்களை ஆதரித்து அவர் யவத்மாலில் பிரசாரம் மேற்கொண்டிருந்தபோதுதான் இவ்வாறு நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com