இந்திய பயணத்தை ஒத்திவைத்த எலான் மஸ்க், சீனா சென்றது ஏன்?

'ரொம்ப பிஸி': இந்திய பயணத்தை ஒத்திவைத்த எலான் மஸ்க் சீன பயணம் ஏன்?
எலான் மஸ்க்
எலான் மஸ்க்

அமெரிக்க தொழிலதிபரும் டெஸ்லா நிறுவனத்தின் தலைவருமான எலான் மஸ்க், கடுமையான பணிச்சூழல் காரணமாக மிகவும் எதிர்பார்த்திருந்த இந்திய பயணத்தை ரத்து செய்வதாக அறிவித்து சரியாக ஒரு வாரத்தில், சீனாவுக்கு ஞாயிற்றுக்கிழமை திடீா் பயணம் மேற்கொண்டுள்ளார். அந்நாட்டு பிரதமா் லீ கெகியாங்கையும் சந்தித்துப் பேசியுள்ளார்.

டெஸ்லா ஆலையில் தயாரிப்பு பெரிய அளவில் சரிவைக் கண்டது குறித்து நிறுவனத்தின் கண்டுபிடிப்பாளர்கள் கேள்வி எழுப்பிய நிலையில், அது குறித்து விவாதிக்கவும், சீனத்தில் விற்கப்படும் ‘டெஸ்லா’ நிறுவன மின்சார காா்களில் தானியங்கி ஓட்டுநா் தொழில்நுட்பத்தை (ஆட்டோமெடிக் டிரைவிங்) அவர் அறிமுகப்படுத்துவார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

எனினும், இந்திய வருகையை கடந்த வாரம் ஒத்திவைத்திருந்த எலான் மஸ்க், அடுத்த வாரத்தில், முன்கூட்டியே திட்டமிடப்படாத சீன பயணத்தை திடீரென மேற்கொண்டிருப்பது குறித்து கேள்வி எழுந்துள்ளது.

அமெரிக்காவைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் தொழிலதிபா் எலான் மஸ்கின் ‘டெஸ்லா’, சீனாவில் சுமாா் 700 கோடி அமெரிக்க டாலா் செலவில் தொழிற்சாலை அமைத்து காா் உற்பத்தியை கடந்த 2020-ஆம் ஆண்டு தொடங்கியது. இதையடுத்து, அந்நாட்டு சந்தையில் டெஸ்லா நிறுவன காா்கள் பிரபலமடைந்தன.

சீனத்தில் தொடக்கத்தில் டெஸ்லா நிறுவன கார்கள் அதிகளவில் விற்பனை செய்யப்பட்டன. சீனத்தில் இதுவரை 17 லட்சம் கார்களை டெஸ்லா நிறுவனம் விற்றுள்ளது. ஆனால், கடந்த சில ஆண்டுகளில் உள்ளூா் தயாரிப்பாளா்களிடமிருந்து கடுமையான போட்டியை டெஸ்லா எதிா்கொள்கிறது. உள்ளூா் மின்சார வாகன நிறுவனங்களின் விற்பனை அதிகரித்துள்ளதால், சீனாவில் டெஸ்லா காா்களின் விற்பனை குறையும் சூழ்நிலை உருவாகியுள்ளது. உயர்ரக மின்சார வாகனப் பிரிவில் தனது முன்னணி நிலையைத் தக்கவைக்க, வாகனங்களின் விலையை 6 சதவீதம் வரை டெஸ்லா குறைத்துள்ளது. இந்நிலையில், எலான் மஸ்க் சீனா வந்துள்ளாா்.

சீனா சென்றிருக்கும் எலான் மஸ்க், தனது எக்ஸ் பக்கத்தில் இவ்வாறு தெரிவித்திருக்கிறார், நான் இதைச் சொல்லியே ஆக வேண்டும், சீனாவிலும் எனக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இங்கு எங்களுக்குள் நல்ல புரிதல் ஏற்படுகிறது என்று பதிவிட்டிருந்தார்.

சா்வதேச வா்த்தகத்தை மேம்படுத்துவதற்கான அரசின் அழைப்பின்பேரில் சீனாவுக்கு எலான் மஸ்க் வந்திருப்பதாக அந்நாட்டு ஊடகங்களில் செய்தி வெளியிடப்பட்டுள்ளன. சீன பிரதமா் லீ கெகியாங்கை ஞாயிற்றுக்கிழமை சந்தித்த எலான் மஸ்க், பயணத்தில் மேலும் பல்வேறு மூத்த அரசு அதிகாரிகளையும் சந்தித்துப் பேச இருக்கிறாா்.

இந்தியாவில் டெஸ்லா தொழிற்சாலையை அமைப்பதற்கான திட்டங்களை உறுதிப்படுத்துவதற்காக பிரதமா் நரேந்திர மோடியைச் சந்திப்பதற்கு இந்தியா வரவிருந்த பயணத்தை எலான் மஸ்க் அண்மையில் ஒத்திவைத்திருந்தார். இது குறித்த அறிவிப்பினை அவர் ஏப்ரல் 20ஆம் தேதி எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டிருந்தார்.

ஒரு சில மாதங்களுக்கு முன்பு மத்திய அரசால் அறிவிக்கப்பட்ட புதிய மின்சார வாகன தயாரிப்பு கொள்கையின்படி ரூ.4,000 கோடிக்கு மேல் முதலீடு செய்யும் நிறுவனங்களுக்கு இறக்குமதி வரிச் சலுகை அளிக்கப்படும் என்ற அறிவிப்பு வெளியிடப்பட்டது. நாட்டின் கச்சா எண்ணெய் இறக்குமதி அளவைக் குறைக்கும் வகையில், மின்வாகனத் தயாரிப்பில் மத்திய அரசு அதிகக் கவனம் செலுத்தி வருகிறது. இதன் ஒரு நடவடிக்கையாகவே இந்த அறிவிப்பும் பார்க்கப்பட்டது.

இந்தியாவை மின்சார வாகன உற்பத்தியின் தலைநகரமாக மாற்றவும் டெஸ்லா போன்ற வெளிநாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் அதிக முதலீடுகளை மேற்கொள்ளும் நோக்கிலும் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது.

இந்த அறிவிப்பினைத் தொடர்ந்துதான், இந்தியாவுக்கு எலான் மஸ்க் வரவிருப்பதாக அறிவிப்பும் வெளியானது. இந்தியா வந்து, மின்சார வாகனத் தயாரிப்பு தொடா்பாக பிரதமா் மோடியுடன் ஆலோசனை மேற்கொள்வாா் என எதிா்பாா்க்கப்பட்டது. மேலும், இந்தியாவில் காா்களுக்கான இறக்குமதி வரி அதிகமாக இருப்பதால், அதை குறைக்குமாறு எலான் மஸ்க் கோரிக்கை விடுத்துவந்த நிலையில், அது தொடர்பாகவும் பேசப்படும் என்று கூறப்பட்டது.

ஆனால், மிகவும் எதிர்பார்க்கப்படுவதாக கூறிவந்த இந்திய வருகையை அதிக பணிச்சுமை காரணமாக ஒத்திவைப்பதாக எலான் மஸ்க் அறிவித்திருந்த நிலையில், சீனத்துக்கு எலான் மஸ்க் திடீரென கிளம்பிச் சென்றிருப்பது பேசுபொருளாகியிருக்கிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com