ம.பி.: மத வழிபாட்டு நிகழ்ச்சியின் போது சுவர் இடிந்து விழுந்ததில் 9 குழந்தைகள் பலி
மத்திய பிரதேசத்தின் சாகர் மாவட்டத்தில் மத வழிபாட்டு நிகழ்ச்சியின் போது சுவர் இடிந்து விழுந்ததில் 9 குழந்தைகள் பலியான நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய பிரதேச மாநிலம், சாகர் மாவட்டத்தின் ஷாபூர் பகுதியில் உள்ள ஹர்தவுல் பாபா கோயிலில் இன்று மத வழிபாட்டு நிகழ்ச்சி நடைபெற்றுக்கொண்டிருந்தது. இதில் ஏராளமானோர் பங்கேற்றனர்.
அப்போது கோயிலின் அருகே இருந்த வீட்டின் சுற்றுச்சுவர் திடீரென இடிந்து விழுந்தது. இந்த சம்பவத்தில் இடிபாடுகளுக்கு இடையே சிக்கி 9 குழந்தைகள் பலியாகினர். தகவல் கிடைத்ததும் நிகழ்விடத்துக்கு மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் விரைந்தனர்.
சுமார் 50 ஆண்டுகள் பழமையான இந்த வீடு, கனமழையால் இடிந்து விழுந்ததாக உள்ளூர் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
சுவர் இடிந்து விழுந்ததில் 10 முதல் 15 வயதுடைய ஒன்பது குழந்தைகள் பலியானதாக சாகர் பிரதேச ஆணையர் வீரேந்திர சிங் ராவத் தெரிவித்தார். சில குழந்தைகள் காயமடைந்துள்ளனர், அவர்கள் சிகிச்சையில் உள்ளனர். சம்பவம் நடந்த இடத்திலிருந்து அனைத்து இடிபாடுகளும் அகற்றப்பட்டுள்ளன என்று ஆட்சியர் தீபக் ஆர்யா கூறினார்.
குழந்தைகளின் மறைவுக்கு மத்திய பிரதேச முதல்வர் மோகன் யாதவ் இரங்கல் தெரிவித்துள்ளார். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைவார்கள் என்று நம்புகிறேன். குழந்தைகளை இழந்த குடும்பங்களுக்கு எனது இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். பலியான குழந்தையின் குடும்பத்திற்கு தலா ரூ. 4 லட்சம் நிதியுதவி அளிக்கப்படும் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.