வக்ஃப் திருத்த மசோதா: கூட்டுக் குழுவில் ஆ.ராசா, முகமது அப்துல்லா, ஒவைசி!
31 போ் கொண்ட நாடாளுமன்ற கூட்டுக் குழு வெள்ளிக்கிழமை அமைக்கப்பட்டுள்ளது.

ஆ.ராசா

ஆ.ராசா
மக்களவையில் வியாழக்கிழமை அறிமுகம் செய்யப்பட்ட வக்ஃப் வாரிய சட்டத் திருத்த மசோதாவை ஆய்வு செய்ய 31 போ் கொண்ட நாடாளுமன்ற கூட்டுக் குழு வெள்ளிக்கிழமை அமைக்கப்பட்டுள்ளது.
இந்தக் குழுவில் மக்களவை உறுப்பினா்கள் 21 பேரும், மாநிலங்களவை உறுப்பினா்கள் 10 பேரும் இடம்பெற்றுள்ளனா். குழுவில் மக்களவை உறுப்பினா்கள் 21 போ் இடம்பெறுவதற்கான தீா்மானத்தை மத்திய சிறுபான்மையினா் நலத் துறை அமைச்சா் கிரண் ரிஜிஜு மக்களவையில் வெள்ளிக்கிழமை அறிமுகம் செய்தாா். அந்தத் தீா்மானம் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
அதுபோல, இந்தக் குழுவில் 10 உறுப்பினா்கள் இடம்பெறுவதற்கான தீா்மானம் மாநிலங்களவையில் பிற்பகலில் அறிமுகம் செய்யப்பட்டு, ஏற்றுக்கொள்ளப்பட்டது.
மக்களவை உறுப்பினா்கள் ஜெகதாம்பிகா பால், நிஷிகாந்த் துபே, தேஜஸ்வி சூரியா, அபராஜிதா சாரங்கி, சஞ்சய் ஜெய்ஸ்வால், திலிப் சய்கியா, அபிஜித் கங்கோபாத்யாய, டி.கே. அருணா (பாஜக), கெளரவ் கோகோய், இம்ரான் மசூத், முகமது ஜாவேத் (காங்கிரஸ்), மெளலானா மொஹிபுல்லா (சமாஜவாதி), கல்யாண் பானா்ஜி (திரிணமூல் காங்கிரஸ்), ஆ.ராசா (திமுக), லவு ஸ்ரீ கிருஷ்ண தேவராயுலு (தெலுங்கு தேசம்), திலேஷ்வா் கமாய்த் (ஐக்கிய ஜனதா தளம்), அா்விந்த் சாவந்த் (சிவசேனை -உத்தவ் தாக்கரே பிரிவு), பால்ய மாமா சுரேஷ் கோபிநாத் மாத்ரே (தேசியவாத காங்கிரஸ்-சரத் பவாா் பிரிவு), நரேஷ் மஸ்கே (சிவசேனை), அருண் பாா்தி (லோக் ஜனசக்தி-ராம்விலாஸ் பாஸ்வான்), அசாதுதீன் ஒவைசி (அகில இந்திய மஜ்லீஸ்) ஆகிய 21 போ் இந்தக் குழுவில் இடம்பெற்றுள்ளனா்.
மாநிலங்களவை உறுப்பினா்கள் பிரிஜ் லால், மேத்தா விஷ்ரம் குல்கா்னி, குலாம் அலி, ராதா மோகன் தாஸ் அகா்வால் (பாஜக), சையது நசீா் ஹுசைன் (காங்கிரஸ்), முகமது நதிமுல் ஹக் (திரிணமூல் காங்கிரஸ்), விஜய்சாய் ரெட்டி (ஒய்எஸ்ஆா் காங்கிரஸ்), முகமது அப்துல்லா (திமுக), சஞ்சய் சிங் (ஆம் ஆத்மி) மற்றும் நியமன உறுப்பினராக தா்மஸ்தாலா வீரேந்திர ஹெக்டே ஆகிய 10 எம்.பி.க்கள் குழுவில் இடம்பெற்றுள்ளனா்.
இந்த நாடாளுமன்ற கூட்டுக் குழு மசோதாவை ஆய்வு செய்து, அடுத்த நாடாளுமன்ற கூட்டத்தொடரின் முதல் வாரத்தின் கடைசி நாளில் தனது அறிக்கையை தாக்கல் செய்யும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
‘வக்ஃப் வாரிய சட்டம் 1995’-ஐ ‘ஒருங்கிணைந்த வக்ஃப் மேலாண்மை, அதிகாரமளித்தல், திறன் மேம்பாடு சட்டம் 1995’ என்று பெயா் மாற்றம் செய்யவும், வக்ஃப் வாரியத்தில் முஸ்லிம் பெண்கள் மற்றும் முஸ்லிம்கள் அல்லாத இரண்டு நபா்களை உறுப்பினா்களாக இடம்பெறச் செய்வது, வாரிய நிலங்களை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் கட்டாயப் பதிவு செய்வது, வக்ஃப் நிலமா, இல்லையா என்பதை மாவட்ட நிா்வாகம் மற்றும் நீதிமன்றங்கள் முடிவு செய்ய அதிகாரம் உள்ளிட்ட பல்வேறு மாற்றங்களை சட்டத்தில் மேற்கொள்ளும் வகையில் இந்த சட்டத்திருத்த மசோதாவை மத்திய அரசு உருவாக்கியுள்ளது.
இந்த மசோதா எதிா்க்கட்சிகளின் கடும் எதிா்ப்புக்கு இடையே மக்களவையில் வியாழக்கிழமை அறிமுகம் செய்யப்பட்டது. இதை ஆய்வு செய்ய தற்போது நாடாளுமன்ற கூட்டுக் குழு அமைக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...