
வயநாடு நிலச்சரிவில் உயிரிழந்தவர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் கடன்கள் ரத்து செய்ய முடிவு செய்துள்ளதாக மாநில அரசின் கீழ் இயங்கும் கேரள வங்கி அறிவித்துள்ளது.
கேரள வங்கியின் நிர்வாகக் குழுக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அந்த வங்கியின் தலைவர் கோபி கோட்டாமுரிக்கா திங்கள்கிழமை தெரிவித்தார்.
சூரல்மலை கிளையில் வங்கிக் கடன் வாங்கியவர்களின் நிலை குறித்து கண்டறிய உத்தரவிடப்பட்டிருப்பதாகவும், உயிரிழந்தவர்கள் மற்றும் வீடு, பொருள்களை இழந்து பாதிக்கப்பட்டவர்களின் கடன்களை தள்ளுபடி செய்ய முடிவெடுத்திருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும், கேரள வங்கி சார்பில் ரூ. 50 லட்சமும், ஊழியர்களின் 5 நாள்கள் சம்பளத்தையும் முதல்வரின் நிவாரண நிதிக்கு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வயநாடு மாவட்டத்தில் கடந்த மாதம் 30ஆம் தேதி ஏற்பட்ட நிலச்சரிவுகளால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தோர் எண்ணிக்கை 231 ஆக அதிகரித்துள்ளதாக அம்மாநில வருவாத்துறை அமைச்சர் கே. ராஜன் திங்கள்கிழமை தெரிவித்திருந்தார்.
இதுவரை மேற்கொள்ளப்பட்ட தேடுதல் மற்றும் மீட்புப்பணிகளில் 205 உடல் பாகங்கள் கண்டெடுக்கப்பட்டிருப்பதாகவும், அடுத்த சில நாள்கள் ஆற்ரங்கரையையொட்டிய பகுதிகளில் மீட்புக்குழுக்கள் தேடுதல் பணிகளில் ஈடுபடுவர் என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும், நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட முண்டக்கை, சூரல்மலை பகுதிகளில் ஆயிரத்துக்கும் அதிகமானோர் வீடுகளை இழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.