
பாராமதி மக்களவைத் தொகுதியில், சுப்ரியா சுலேவை எதிர்த்து, தனது மனைவியை களமிறக்கி மிகப்பெரிய தவறு செய்துவிட்டேன் என்று அரசியலில், குடும்பப் பிரச்னை நுழைத்ததை ஒப்புக் கொண்டிருக்கிறார் மகாராஷ்டிர துணை முதல்வர் அஜித் பவார்.
மகாராஷ்டிரத்தின் துணை முதல்வர் அஜித் பவார், ஒரு உள்ளூர் செய்தி ஊடகத்துக்கு அளித்த நேர்காணலில், தனது தவறை நேர்மையுடன் ஒப்புக்கொண்டுள்ளார்.
அதாவது, பாராமதி மக்களவைத் தொகுதியில் தனது மனைவி சுனேத்ரா பவாரை தனது சகோதரி சுப்ரியா சுலேவுக்கு எதிராக களமிறக்கி மிகப்பெரிய தவறு செய்துவிட்டேன் என்று ஒப்புக்கொண்டார்.
தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாரின் மகளான சுப்ரியா சுலே, மூன்று முறை நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தவர், கடந்த மக்களவைத் தேர்தலில் பாராமதி தொகுதியில் மிகப்பெரிய வெற்றியை பெற்றிருந்தார். இவரது வாக்கு வித்தியாகம் 1,58,000 என்பது குறிப்பிடத்தக்கது.
மகாராஷ்டிர மாநிலத்தில், மிகப்பெரிய கவனத்தை ஈர்த்த தொகுதிகளில் ஒன்றாக பாராமதி மாறியது. அது மட்டுமல்லாமல்லாமல் தேர்தலில் அஜித் பவாரின் கட்சி பின்னடைவை சந்தித்தது. சுனேத்ரா பவார் மட்டும் தோல்வி அடையவில்லை. ஷிரூர் தொகுதியிலும் அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சி இழந்தது. மேற்கு மகாராஷ்ரத்தின் முக்கிய தொகுதிகளாக இவை பார்க்கப்படுகின்றன. இதில் சரத் பவார் கட்சியே வெற்றி பெற்று, தங்களது கட்சியின் அங்கீகாரத்தை மக்களிடையே மீண்டும் நிரூபித்திருந்தது.
இந்த நிலையில்தான், மகாராஷ்டிர மாநிலத்தில் நடைபயணம் மேற்கொள்ளும் அஜித் பவார், உள்ளூர் ஊடகத்துக்கு அளித்த நேர்காணலில், குடும்பப் பிரச்னையை அரசியலுக்குள் நுழைத்தது தவறுதான் என்று ஒப்புக்கொண்டிருந்தார்.
அரசியல் வீட்டுக்குள் நுழைய அனுமதித்திருக்கக் கூடாது, அங்குதான் நான் தவறு செய்துவிட்டேன், எனது சகோதரிக்கு எதிராக சுனேத்ராவை களமிறக்கியிருக்கக் கூடாது என்று அவர் கூறியிருந்தார்.