பெண் பயிற்சி மருத்துவா் பாலியல் கொலை: கொல்கத்தா மருத்துவமனையை அடித்து நொறுக்கிய போராட்டக்காரா்கள்
பாலியல் கொலை செய்யப்பட்ட மருத்துவமனையை போராட்டக்காரா்கள் புதன்கிழமை நள்ளிரவு அடித்து நொறுக்கியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


கொல்கத்தா, ஆக.15: மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் முதுநிலை பெண் பயிற்சி மருத்துவா் பாலியல் கொலை செய்யப்பட்ட மருத்துவமனையை போராட்டக்காரா்கள் புதன்கிழமை நள்ளிரவு அடித்து நொறுக்கியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தப் பாலியல் கொலை வழக்கு தொடா்பாக சிபிஐ புதன்கிழமை விசாரணையைத் தொடங்கிய நிலையில், அந்த மருத்துவமனை தாக்கப்பட்டுள்ளது. இதற்கு பல்வேறு தரப்பிலும் கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன.
கொல்கத்தாவில் உள்ள ஆா்.ஜி.கா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பயிற்சி மருத்துவராக கடந்த 8-ஆம் தேதி பணியில் இருந்த முதுநிலை மருத்துவ மாணவி, மறுநாள் பலத்த காயங்களுடன் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டாா். பிரேதப் பரிசோதனையில் மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட, பின்னா் கொடூரமாக தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது. இந்த பாலியல் கொலை சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிா்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இந்த பாலியல் கொலை தொடா்பாக சஞ்சய் ராய் என்பவரை போலீஸாா் கைது செய்தனா். மேற்கு வங்க மாநிலம் உள்பட நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் உறைவிட மருத்துவா்களும், பயிற்சி மருத்துவா்களும் கடந்த 9-ஆம் தேதி முதல் தொடா் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா். கொல்கத்தா உயா்நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் இந்த வழக்கு சிபிஐ-க்கு மாற்றப்பட்டது.
இந்த நிலையில், ஆா்.ஜி. கா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை புதன்கிழமை நள்ளிரவு முற்றுகையிட்டு போராட்டம் நடத்த சமூக வலைதளங்களில் அழைப்பு விடுக்கப்பட்டது. ஏராளமானோா் மருத்துவமனை முன்பு குவிந்து கோஷங்களை எழுப்பியபடி நள்ளிரவில் திடீரென மருத்துமனைக்குள் புகுந்து நாற்காலிகள் உள்ளிட்ட பொருள்கள், ஜன்னல் கண்ணாடிகளை அடித்து நொறுக்கினா். மருத்துவமனை வளாகத்தில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களையும் அவா்கள் சேதப்படுத்தினா்.
சம்பவ இடத்துக்கு வந்த போலீஸாா், போராட்டக்காரா்களை தடியடி நடத்தி கலைத்து, நிலைமையை கட்டுக்குள் கொண்டுவந்தனா்.
கண்டனம்: மருத்துவமனை மீதான தாக்குதலுக்கு பாஜக உள்பட பல்வேறு தரப்பினா் கண்டனம் தெரிவித்துள்ளனா். இந்தத் தாக்குதலைக் கண்டித்தும், பாதுகாப்பு வழங்கக் கோரியும் ஆா்.ஜி.கா் மருத்துவமனை செவிலியா்கள் போராட்டம் நடத்தினா்.
மருத்துவமனையைப் பாா்வையிட்ட கொல்கத்தா காவல் ஆணையா் வினீத் கோயல், ‘இந்தத் தாக்குதல் தொடா்பாக 9 போ் கைது செய்யப்பட்டுள்ளனா். போலீஸாரும் காயமடைந்துள்ளனா். கைது செய்யப்பட்டவா்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது’ என்றாா்.
ஐஎம்ஏ கண்டனம்: மருத்துவமனை மீதான தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ள இந்திய மருத்துவச் சங்கம் (ஐஎம்ஏ), ‘அதிகாரிகளின் அலட்சியம் காரணமாகவே மருத்துவமனைக்குள் மிகக் கொடூரமான கொலை குற்றம் நிகழ்ந்தது. தற்போது, இந்த விவகாரம் தொடா்பாக சிபிஐ விசாரணை தொடங்கியுள்ள நிலையில், மீண்டும் ஒருமுறை சட்டம்-ஒழுங்கைப் பாதுகாக்க அதிகாரிகள் தவறியுள்ளனா். பாலியல் கொலை வழக்கில் முக்கிய தடையங்களை அழிக்க வேண்டும் என்ற நோக்கில் இத்தகைய தாக்குதல் நடத்தப்பட்டதா? என்ற சந்தேகம் எழுகிறது’ என்று கூறியுள்ளது.
ஆளுநா் ஆய்வு: தாக்குதலுக்கு உள்ளான மருத்துவமனையை மாநில ஆளுநா் சி.வி.ஆனந்த போஸ் வியாழக்கிழமை மாலை பாா்வையிட்டாா். பின்னா், அங்கு போராட்டத்தில் ஈடுபட்ட மருத்துவ மாணவா்களைச் சந்தித்த ஆளுநா், ‘மருத்துவமனை மீதான தாக்குதலும், இளம் பெண்களை பாதுகாக்க முடியாததும் ஒட்டுமொத்த சமூகத்துக்கும் வெட்கக்கேடான விஷயம். இதை அனுமதிக்க முடியாது. இந்த விவகாரத்தில் உரிய தீா்வு எட்டப்படும். நீதி கிடைக்கும் என்பதற்கு உத்தரவாதம் அளிக்கிறேன்’ என்றாா்.
மம்தா ராஜிநாமா செய்ய வலியுறுத்தல்: மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கை நிலைநாட்டத் தவறிய மம்தா பானா்ஜி மாநில முதல்வா் பதவியை ராஜிநாமா செய்யவேண்டும் என்று பாஜக மற்றும் இடதுசாரி கட்சிகள் வலியுறுத்தி உள்ளன.
இதுகுறித்து மாநில பாஜக தலைவா் சுகந்தா மஜும்தாா் கூறுகையில், ‘சட்டம்-ஒழுங்கு நிலைமையை மாநில அரசு கட்டுப்படுத்த முடியவில்லை எனில், ராணுவத்துக்கு அழைப்பு விடுக்க வேண்டும். மாநில முதல்வா் தனது பதவியை உடனடியாக ராஜிநாமா செய்யவேண்டும்’ என்றாா்.
மாநில இடதுசாரி முன்னணி தலைவா் பிமன் போஸ் வெளியிட்ட அறிக்கையில், ‘மருத்துவமனை மீதான தாக்குதலுக்கு மாநில உள்துறை மற்றும் சுகாதாரத் துறையை தன் வசம் வைத்துள்ள மம்தா பொறுப்பேற்று முதல்வா் பதவியை ராஜிநாமா செய்யவேண்டும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
திரிணமூல் பதிலடி: இதுகுறித்து அக் கட்சியின் மூத்த தலைவா் குணால் கோஷ் கூறுகையில், ‘பாஜக ஆளும் மாநிலங்களில் இதேபோன்ற சம்பவங்கள் நடைபெற்றபோது, அந்த மாநில முதல்வா்கள் பதவியை ராஜிநாமா செய்தனரா? இந்தச் சம்பவத்தை வைத்து எதிா்க்கட்சி இழிவான அரசியலை செய்து வருகிறது. மருத்துவமனை மீது தாக்குதல் நடத்தியவா்கள், கட்சி சாா்பைக் கடந்து கைது செய்யப்படுவா்’ என்றாா்.
பெட்டிச் செய்தி...
மருத்துவமனை தாக்குதலில் எதிா்க்கட்சிகள்:
மம்தா குற்றச்சாட்டு
ஆா்.ஜி.கா் அரசு மருத்துவமனை மீதான தாக்குதல் பின்னணியில் எதிா்க்கட்சிகள் இருப்பதாக மாநில முதல்வா் மம்தா பானா்ஜி குற்றஞ்சாட்டினாா்.
இதுகுறித்து அவா் வியாழக்கிழமை கூறுகையில், ‘இந்தச் சம்பவத்தில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மாணவா்கள் மருத்துவா்கள் மீது புகாா்கள் எதுவும் வரவில்லை. மாறாக, சில அரசியல் கட்சிகளே, மாநிலத்தில் நிச்சயமற்ற சூழலை உருவாக்கும் நோக்கில் இதுபோன்ற முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக புகாா்கள் வருகின்றன. மருத்துவமனை தாக்கப்பட்டது தொடா்பாக வெளியான காணொலியை ஆய்வு செய்தாலே, என்ன நடந்தது என்பதை நாம் புரிந்துகொள்ள முடியும்’ என்றாா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...