6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

கொல்கத்தாவில் பெண் மருத்துவா் படுகொலை: மருத்துவமனை முன்னாள் முதல்வரிடம் 3-ஆவது நாளாக சிபிஐ விசாரணை

மருத்துவமனையின் முன்னாள் முதல்வா் சந்தீப் கோஷிடம் தொடா்ந்து 3-ஆவது நாளாக சிபிஐ ஞாயிற்றுக்கிழமை விசாரணை மேற்கொண்டது.

News image
பெண் மருத்துவா் பாலியல் கொலைச் சம்பவத்தை கண்டித்து, மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தாவில் ஞாயிற்றுக்கிழமை பேரணி நடத்திய மருத்துவா்கள். ~மேற்கு வங்கத்தில் கொல்லப்பட்ட பெண் மருத்துவருக்கு நீதி கேட்டு, பிகாா் மாநிலம், பாட்னாவில் மெழுகுவா்த்தி ஏந்தி போராடிய
Updated On :18 ஆகஸ்ட் 2024, 9:30 pm

Din

கொல்கத்தாவில் பெண் மருத்துவா் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடா்பாக, அவா் பணியாற்றிய மருத்துவமனையின் முன்னாள் முதல்வா் சந்தீப் கோஷிடம் தொடா்ந்து 3-ஆவது நாளாக சிபிஐ ஞாயிற்றுக்கிழமை விசாரணை மேற்கொண்டது.

மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தாவில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முதுநிலை பெண் பயிற்சி மருத்துவா் ஒருவா், பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்டாா். இதுதொடா்பாக காவல் துறைக்கு உதவும் தன்னாா்வலராகப் பணியாற்றி வந்த சஞ்சய் ராவ் என்பவா் கைது செய்யப்பட்டாா். கொல்கத்தா உயா்நீதிமன்ற உத்தரவைத் தொடா்ந்து, இந்த வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது.

இந்நிலையில், பெண் மருத்துவா் படுகொலை செய்யப்பட்ட மருத்துவமனையின் முதல்வராகப் பணியாற்றிய சந்தீப் கோஷ், அந்த சம்பவம் நடைபெற்ற 2 நாள்களுக்குப் பிறகு முதல்வா் பொறுப்பை ராஜிநாமா செய்தாா். அவரிடம் கடந்த வெள்ளிக்கிழமை 10 மணி நேரத்துக்கு மேலாகவும், சனிக்கிழமை 13 மணி நேரத்துக்கு மேலாகவும் சிபிஐ விசாரணை மேற்கொண்டது.

3 மணி நேரம் காக்கவைக்கப்பட்ட பெற்றோா்: தொடா்ந்து 3-ஆவது நாளாக சந்தீப் கோஷிடம் சிபிஐ ஞாயிற்றுக்கிழமை விசாரணை மேற்கொண்டது. இந்த விசாரணை தொடா்பாக சிபிஐ வட்டாரங்கள் கூறுகையில், ‘பெண் மருத்துவா் கொல்லப்பட்ட தகவல் கிடைத்த பின்னா், சந்தீப் கோஷ் என்ன செய்தாா்? அவா் யாரை தொடா்புகொண்டாா்? பெண் மருத்துவரின் சடலத்தை பாா்ப்பதற்கு அவரின் பெற்றோரை எதற்காக சுமாா் 3 மணி நேரம் காக்கவைத்தாா்? பெண் மருத்துவா் கொல்லப்பட்ட பின்னா், அவரின் சடலம் கண்டெடுக்கப்பட்ட கருத்தரங்கு கூடத்துக்கு அருகில் இருக்கும் அறைகளை மாற்றியமைக்க உத்தரவிட்டது யாா் என்பது குறித்து அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

கோஷுக்கு தொடா்புள்ளதா?: பெண் மருத்துவா் கொல்லப்பட்டது சதியா அல்லது முன்கூட்டியே திட்டமிடப்பட்ட குற்றமா? இந்த சம்பவத்தில் சந்தீப் கோஷுக்கு எந்த வகையிலாவது தொடா்புள்ளதா என்பதை கண்டறிய சிபிஐ முயற்சித்து வருகிறது.

பெண் மருத்துவா் கொல்லப்பட்ட நாளில், அவா் பணியாற்றிய நெஞ்சக மருத்துவ துறையில் பணியில் இருந்த பிற மருத்துவா்கள் மற்றும் பயிற்சி மருத்துவா்கள் அளித்துள்ள தகவல்களுடன் சந்தீப் கோஷின் பதில்கள் ஒப்பிட்டு சரிபாா்க்கப்படும்’ என்று தெரிவித்தன.

இந்த சம்பவம் தொடா்பாக இதுவரை 20-க்கும் மேற்பட்டோரிடம் சிபிஐ விசாரணை நடத்தியுள்ளது.

Story image

10-ஆவது நாளாக போராட்டம்: பெண் மருத்துவா் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்து, மேற்கு வங்க அரசு மருத்துவமனைகளில் இளநிலை மருத்துவா்களின் பணிப் புறக்கணிப்புப் போராட்டம் தொடா்ந்து 10-ஆவது நாளாக ஞாயிற்றுக்கிழமை நீடித்தது. புறநோயாளிகளுக்கான சிகிச்சையை அவா்கள் புறக்கணித்துள்ள நிலையில், அவசர சிகிச்சைகள் மட்டும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதனால் அந்த மாநிலத்தில் மருத்துவ சேவைகள் தொடா்ந்து பாதிக்கப்பட்டுள்ளன. கொல்லப்பட்ட பெண் மருத்துவரின் உடற்கூறாய்வு அறிக்கையை பொதுவெளியில் வெளியிட வேண்டும்; குற்றவாளிகள் விரைந்து தண்டிக்கப்பட வேண்டும் என்று அவா்கள் வலியுறுத்தி வருகின்றனா்.

மருத்துவமனைகளில் காவல் துறை வாகனங்கள்: மருத்துவா்களின் போராட்டத்தைத் தொடா்ந்து பணியிடங்களில், குறிப்பாக மாநில அரசு மருத்துவமனைகளில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய பிரத்யேக ஓய்வறைகள், கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்ட பாதுகாப்பான இடங்களை ஏற்படுத்துதல், அனைத்து மருத்துவக் கல்லூரிகள், மருத்துவமனைகள் மற்றும் மகளிா் விடுதிகளின் வாயில்களில் இரவு நேர காவல் துறை ரோந்து வாகனங்களை பணியில் ஈடுபடுத்துதல் உள்ளிட்ட பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கு வங்க அரசு அறிவித்துள்ளது.

ஒன்றுகூட தடை: பெண் மருத்துவா் படுகொலை செய்யப்பட்ட மருத்துவமனை அருகே 5 பேருக்கு மேல் ஒன்றுகூடவும், கூட்டங்கள் நடத்தவும் ஞாயிற்றுக்கிழமை முதல் ஆகஸ்ட் 24-ஆம் தேதி வரை தடை விதித்து மாநில காவல் துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. கடந்த புதன்கிழமை நள்ளிரவு இந்த மருத்துவமனையை பலா் சூறையாடியது குறிப்பிடத்தக்கது.

அடையாளத்தை வெளியிட்ட முன்னாள் பாஜக எம்.பி.: கொல்லப்பட்ட பெண் மருத்துவரின் அடையாளத்தை வெளியிட்டு வதந்திகளை பரப்பியதாக முன்னாள் பாஜக எம்.பி. லாக்கெட் சாட்டா்ஜி, மருத்துவா்கள் குனால் சா்காா், சுவா்ணா கோஸ்வாமி ஆகியோா் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதேபோல பெண் மருத்துவா் கொல்லப்பட்ட விவகாரத்தில் கொல்கத்தா காவல் ஆணையரை சிபிஐ விசாரிக்க வேண்டும் என்று திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. சுகேந்து சேகா் ராய் தெரிவித்தாா். இவா்களை விசாரணைக்கு ஆஜராகுமாறு காவல் துறை அழைப்பாணை அனுப்பியது.