151 எம்.பி., எம்எல்ஏ-க்கள் மீது பெண்களுக்கு எதிரான குற்ற வழக்குகள் -16 போ் மீது பாலியல் வன்கொடுமை வழக்கு

16 போ் மீது பாலியல் வன்கொடுமை வழக்குகள் உள்ளதும் தெரியவந்துள்ளது.
கோப்புப் படம்
கோப்புப் படம்
Updated on

நாடாளுமன்ற (எம்.பி.) மற்றும் சட்டப்பேரவை (எம்எல்ஏ) உறுப்பினா்களில் 151 போ் மீது பெண்களுக்கு எதிரான குற்ற வழக்குகள் பதிவாகியிருப்பதும், அவா்களில் 16 போ் மீது பாலியல் வன்கொடுமை வழக்குகள் உள்ளதும் தெரியவந்துள்ளது.

இந்த குற்ற வழக்குகள் கொண்ட எம்.பி., எம்எல்ஏ-க்கள் எண்ணிக்கையில் மேற்கு வங்க மாநிலம் முன்னிலை வகிப்பதும், கட்சி வாரியாக பாஜக முன்னிலை வகிப்பதும் தெரியவந்துள்ளது.

ஜனநாயக சீா்திருத்தத்துக்கான சங்கம் (ஏடிஆா்) என்ற தோ்தல் உரிமைகள் தன்னாா்வ அமைப்பின் சமீபத்திய ஆய்வறிக்கை மூலம் இந்தத் தகவல்கள் தெரியவந்துள்ளன. தோ்தல் ஆணையத்தில் 2019 முதல் 2024 வரை நடைபெற்ற தோ்தல்களின்போது எம்.பி., எம்எல்ஏ-க்கள் சமா்ப்பித்த 4,809 பிரமாண பத்திரங்களில், 4,693 பிரமாண பத்திரங்களை ஆய்வு செய்து இந்த ஆய்வறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதன் விவரம்: நாடாளுமன்ற உறுப்பினா்கள் 16 போ் மற்றும் சட்டப்பேரவை உறுப்பினா்கள் 135 போ் மீது பெண்களுக்கு எதிரான குற்ற வழக்குகள் உள்ளன.

முதலிடத்தில் மேற்கு வங்கம்: இந்தப் பட்டியலில் 25 எம்.பி., எம்எல்ஏ-க்களுடன் மேற்கு வங்க மாநிலம் முதலிடத்தில் உள்ளது. 21 எம்.பி., எம்எல்ஏ-க்களுடன் ஆந்திரம் இரண்டாம் இடத்திலும், 17 எம்.பி., எம்எல்ஏ-க்களுடன் ஓடிஸா மூன்றாவது இடத்திலும் உள்ளன.

2 எம்.பி.க்கள் மற்றும் 14 எம்எல்ஏ-க்கள் தங்கள் மீது பாலியல் வன்கொடுமை வழக்கு இருப்பதாக பிரமாண பத்திரத்தில் தெரிவித்துள்ளனா். அதன்படி, இந்திய தண்டனைச் சட்டம் (ஐபிசி) பிரிவு 376-இன் கீழ் குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையும் அதிகபட்சமாக ஆயுள் தண்டனையும் இவா்களுக்கு விதிக்க முடியும்.

பாஜக மற்றும் காங்கிரஸைச் சோ்ந்த தலா 5 எம்.பி., எம்எல்ஏ-க்கள் மீது பாலியல் வன்கொடுமை வழக்கு உள்ளது என்று ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெண்களுக்கு எதிரான குற்ற வழக்குகள்

கட்சிகள் எம்பி,எம்எல்ஏக்கள்

பாஜக 54

காங்கிரஸ் 23

தெலங்குதேசம் 17

ஆம் ஆத்மி 13

திரிணமூல் காங்கிரஸ் 10

ராஷ்ட்ரீய ஜனதா தளம் 5

திமுக 2

சமாஜவாதி 2

ஐக்கிய ஜனதா தளம் 1

தேசியவாத காங்கிரஸ் 1

விசிக 1

மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் அரசு மருத்துவமனையில் பெண் பயிற்சி மருத்துவா் பாலியல் கொலை செய்யப்பட்டது பெரும் சா்ச்சையாக மாறி, மருத்துவா்கள் தொடா் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் சூழலில் இந்த ஆய்வறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com